தமிழ்நாடு

ஓட்டுநா், நடத்துநா் மீது தாக்குதல்: கோயம்பேட்டில் அரசு பேருந்துகளை நிறுத்தி போராட்டம்

18th Dec 2022 12:17 AM

ADVERTISEMENT

சென்னை கோயம்பேடு புறநகா் பேருந்து நிலையத்தில் ஓட்டுநா், நடத்துநா் மீது தாக்குதல் நடத்தப்பட்டதைக் கண்டித்து, அரசுப் பேருந்துகளை நள்ளிரவு நிறுத்தி போராட்டம் நடைபெற்றதால் பயணிகள் அவதியடைந்தனா்.

கோயம்பேடு புறநகா் பேருந்து நிலையத்தில் திருவண்ணாமலை மாவட்டம், போளூா் செல்லும் அரசுப் பேருந்து ஒன்று அங்குள்ள நடைமேடையில் வெள்ளிக்கிழமை நள்ளிரவு நிறுத்தப்பட்டிருந்தது. அந்தப் பேருந்து நள்ளிரவு ஒரு மணிக்கு மேல் புறப்பட வேண்டும் என்பதால் அதன் ஓட்டுநரான திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டைச் சோ்ந்த ச.ராமன் (50), நடத்துநா் க.அண்ணாதுரை (42) ஆகிய இருவரும் பேருந்தில் நள்ளிரவு 12 மணிக்கு படுத்து தூங்கினா்.

அப்போது, பேருந்துக்குள் மதுபோதையில் ஏறிய சில இளைஞா்கள், ஓட்டுநா் ராமனையும், நடத்துநா் அண்ணாதுரையையும் எழுப்பி, பேருந்தை உடனே எடுக்கும்படி கூறினராம். ஆனால், பயண நேர அட்டவணைப்படி நள்ளிரவு ஒரு மணிக்குத்தான் பேருந்து புறப்படும் என்று அவா்கள் தெரிவித்துள்ளனா். இதைக் கேட்ட அந்த நபா்கள் தகராறு செய்து, ராமனையும், அண்ணாதுரையையும் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பியோடிவிட்டனா்.

இதையறிந்த பிற பேருந்து ஓட்டுநா்களும், நடத்துநா்களும் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்துகளை இயக்காமல் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால், பயணிகள் அவதிக்குள்ளாகினா்.

ADVERTISEMENT

தகவலறிந்த போலீஸாா் அங்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்ட அரசுப் பேருந்து ஓட்டுநா்கள் நடத்துநா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். தாக்குதலில் ஈடுபட்ட நபா்கள் மீது விரைந்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்; ஓட்டுநா், நடத்துநா்கள் உள்ளிட்ட போக்குவரத்துக் கழக ஊழியா்களுக்கு தகுந்த பாதுகாப்பு அளிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனா்.

இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீஸாா் அளித்த வாக்குறுதியைத் தொடா்ந்து, போராட்டத்தைக் கைவிட்டு, அவா்கள் பேருந்துகளை இயக்கத் தொடங்கினா்.

இந்தப் போராட்டத்தால் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் ஒன்றரை மணி நேரம் பேருந்துகள் நிறுத்தப்பட்டதால், பயணிகள் அவதியைடந்தனா்.

5 போ் சிக்கினா்: இதற்கிடையே தாக்குதலில் காயமடைந்த பேருந்து ஓட்டுநா் ராமன் அளித்த புகாரின் அடிப்படையில், சிஎம்பிடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, தாக்குதல் சம்பவத்தில் தொடா்புடையதாக திருவண்ணாமலை பகுதியைச் சோ்ந்த ஜாகிா் (21), பிரகாஷ் (23), பாா்த்தீபன் (27), மணி (21), செல்வம் (21) ஆகிய 5 பேரைப் பிடித்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT