தமிழ்நாடு

 பாரதி ஆய்வாளர் ஆ.இரா.வேங்கடாசலபதிக்கு தினமணியின் 'மகாகவி பாரதியார்' விருது: தெலங்கானா-புதுச்சேரி ஆளுநர் இன்று வழங்குகிறார்

11th Dec 2022 07:09 AM

ADVERTISEMENT

தினமணியின் 'மகாகவி பாரதியார் விருதை' பாரதி ஆய்வாளர் ஆ.இரா.வேங்கடாசலபதிக்கு, தெலங்கானா-புதுச்சேரி  மாநில ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் ஞாயிற்றுக்கிழமை (டிச. 11) வழங்குகிறார்.

தினமணியின் 'மகாகவி பாரதியார் விருது' வழங்கும் விழா, தூத்துக்குடி காமராஜர் கல்லூரி அரங்கில் ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணிக்கு நடைபெறுகிறது.
இவ்விழாவில், தினமணி ஆசிரியர் கி.வைத்தியநாதன் வரவேற்புரை ஆற்றுகிறார். தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் கோ.பாலசுப்ரமணியன் விருதாளரை அறிமுகம் செய்து பேசுகிறார்.

தெலங்கானா-புதுச்சேரி ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன், இவ்விருதை வழங்கி சிறப்புரையாற்றுகிறார். அதைத் தொடர்ந்து பாரதி ஆய்வாளர் ஆ.இரா.வேங்கடாசலபதி ஏற்புரையாற்றுகிறார். 'தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழும' முதுநிலை துணைத் தலைவர் (விளம்பரப் பிரிவு) ஜெ.விக்னேஷ் குமார் நன்றி கூறுகிறார்.

மகாகவி பாரதியார் குறித்து விரிவான ஆய்வுகளை மேற்கொண்டு அரிய தகவல்களைத் திரட்டி வெளியிட்டு வரும் பாரதி ஆய்வாளர் ஆ.இரா.வேங்கடாசலபதி, வேலூர் மாவட்டம், குடியாத்தத்தில் 1967-இல் பிறந்தவர். இவர், புது தில்லி ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். மகாகவி பாரதியார் குறித்து எண்ணற்ற ஆய்வுகளை மேற்கொண்டுள்ள இவர், தமிழ்ச் சமூக வரலாறு தொடர்பாகவும் ஆய்வுகளை மேற்கொண்டு தமிழிலும், ஆங்கிலத்திலும் பல நூல்களை எழுதியுள்ளார்.

ADVERTISEMENT

பாரதி தொடர்பாக, பாரதியின் 'இந்தியா' கருத்துப் படங்கள், பாரதியும் வ.உ.சி.யும், பாரதி: 'விஜயா' கட்டுரைகள், பாரதியின் சுயசரிதைகள்: கனவு, சின்ன சங்கரன் கதை, பாரதி கருவூலம்; பாரதி: கவிஞனும், காப்புரிமையும்; எழுக, நீ புலவன் ஆகிய நூல்களைத் தமிழிலும், ஆங்கில நூல் ஒன்றையும் எழுதியுள்ளார்.

மேலும், பாரதி தொடர்பாக எண்ணற்ற ஆய்வரங்குகளில் பங்கேற்று, ஏராளமான கட்டுரைகளையும் ஆ.இரா.வேங்கடாசலபதி எழுதியுள்ளார். வ.உ.சி., புதுமைப்பித்தன், உ.வே.சாமிநாதையர் தொடர்பாக பல பதிப்பு நூல்களை வெளியிட்டுள்ள வேங்கடாசலபதி, தற்போது சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தில் (மெட்ராஸ் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெவலப்மென்ட ஸ்டடிஸ்) இயக்குநராகப் பணியாற்றி வருகிறார். 

திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார், சென்னை, சிகாகோ, சிங்கப்பூர் பல்கலைக்கழகங்களில் பணியாற்றியுள்ள இவர், பல்வேறு விருதுகளையும் பெற்றுள்ளார். 
ஏற்கெனவே, பாரதி ஆய்வாளர்கள் சீனி. விசுவநாதன், இளசை மணியன் ஆகியோருக்கு தினமணியின் மகாகவி பாரதியார் விருது வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

ஊர்வலம்: பாரதியின் பிறந்த நாளை முன்னிட்டு, எட்டயபுரத்தில் உள்ள பாரதியின் இல்லத்தில் தினமணி ஆசிரியர் கி.வைத்தியநாதன் தலைமையில் பாரதி அன்பர்கள் ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணிக்கு கூடுகிறார்கள். பின்னர், அங்கிருந்து பாரதியாரின் மணிமண்டபத்துக்கு ஊர்வலமாகச் சென்று அங்குள்ள பாரதியின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT