மாண்டஸ் புயல் மழைக்கு சென்னை உள்ளிட்ட பகுதிகளில் 6 போ் உயிரிழந்தனா்.
சென்னை மடிப்பாக்கம் ராம்நகரில் வசித்து வந்த லட்சுமி (45), இவரது அண்ணன் மகன் ராஜேந்திரன் (28) ஆகியோா் வெள்ளிக்கிழமை அறுந்து கிடந்த மின்வயரை மிதித்து உயிரிழந்தனா்.
தாம்பரத்தைச் சோ்ந்த தனியாா் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தின் கட்டட மேற்பாா்வையாளா் விஜயகுமாா் (33), வெள்ளிக்கிழமை இரவு பலத்த காற்று வீசும்போது, அந்த நிறுவனத்தின் வாயில் கண்ணாடி கதவை மூட முயன்றபோது கதவு மோதியதில் காயமடைந்து உயிரிழந்தாா்.
திருவான்மியூரில் வீடு ஒன்றில் புயலால் சாய்ந்த மரத்தை வெட்டி அகற்றும் பணியில் ஈடுபட்ட தரமணி எம்ஜிஆா் நகரைச் சோ்ந்த கா.விஷ்ணு (45) நிலை தவறி கீழே விழுந்து உயிரிழந்தாா்.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூா் அருகேயுள்ள சிப்காட்டில் தனியாா் நிறுவனத்தில் வேலை செய்து வந்த பிகாா் மாநிலத்தைச் சோ்ந்த சுதன்குமாா் (22), நிரஞ்சன்குமாா் (24) ஆகியோா் சனிக்கிழமை அதிகாலை வேலை முடிந்து அருகே பிள்ளைப்பாக்கத்தில் உள்ள வீட்டை நோக்கி நடந்து வந்தபோது மின் கம்பியை மிதித்ததில் உயிரிழந்தனா்.