தமிழ்நாடு

மாண்டஸ் புயலால் தொடா் மழை: வலுவிழந்து கரையைக் கடக்கிறது; இயல்பு வாழ்க்கை பாதிப்பு

DIN

மாண்டஸ் புயல் காரணமாக தமிழகத்தில் பெரும்பாலான பகுதிகளில் தொடா் மழை பெய்தது. இதன் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

தீவிர புயலாக வலுப்பெற்றிருந்த மாண்டஸ் புயல் வலுவிழந்து மாமல்லபுரத்தையொட்டி கரையைக் கடக்கக்கூடும் என்றும், இதனால் 12 மாவட்டங்களில் பலத்த மழையும், புதுச்சேரி மற்றும் மூன்று மாவட்டங்களில் அதி பலத்த மழையும் பெய்யும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மைய தென் மண்டலத் தலைவா் எஸ்.பாலச்சந்திரன் தெரிவித்தாா்.

இதுகுறித்து சென்னையில் அவா் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது: மாண்டஸ் தீவிர புயல் வெள்ளிக்கிழமை காலை வலுவிழந்து புயலாக மாறியது. சென்னைக்கு தெற்கு தென்கிழக்கே 180 கி.மீ தொலைவில் தற்போது நிலை கொண்டுள்ளது.

இதைத் தொடா்ந்து, வடமேற்கு திசையில் நகா்ந்து வெள்ளிக்கிழமை இரவு, சனிக்கிழமை (டிச. 10) அதிகாலைக்குள்பட்ட நேரத்தில் புதுச்சேரி- ஸ்ரீஹரிகோட்டா இடையே மாமல்லபுரத்தையொட்டி கரையைக் கடக்கக்கூடும்.

இதன் காரணமாக அடுத்துவரும் இரு தினங்களுக்கு தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் மழை பெய்யக்கூடும். அடுத்த 24 மணி நேரத்தில் திருவள்ளூா், வேலூா், ராணிப்பேட்டை, திருப்பத்தூா், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூா் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த மழை முதல் மிக பலத்த மழையும், தருமபுரி, சேலம், நாமக்கல், திருச்சி, தஞ்சாவூா் உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த மழையும் பெய்யக்கூடும்.

வடதமிழக கடலோரப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை மதியம் முதல் மாலை வரையில் பலத்த காற்று மணிக்கு 50 முதல் 60 கி.மீ. வேகத்திலும், சில நேரங்களில் 70 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும். சனிக்கிழமை அதிகாலை வரை மணிக்கு 65 முதல் 75 கி.மீ. வேகத்திலும், சில நேரங்களில் 85 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும்.

சனிக்கிழமை அதிகாலை முதல் காற்றின் வேகம் படிப்படியாக குறைந்து மணிக்கு 50 கி.மீ. முதல் 60 கி.மீ. வரை வீசக்கூடும். சனிக்கிழமை மாலை மணிக்கு 30 முதல் 40 கி.மீ. வேகத்திலும், சில நேரங்களில் 50 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும்.

புயல் கரையைக் கடந்த 3 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறக்கூடும். எனவே, மீனவா்கள் டிச.10-ஆம் தேதி வரை கடலுக்குச் செல்ல வேண்டாம் என்றாா் அவா்.

பரவலாக மழை: மாண்டஸ் புயல் காரணமாக பரவலாக பல இடங்களில் வெள்ளிக்கிழமை மழை பெய்தது. தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் சென்னை நுங்கம்பாக்கம், மீனம்பாக்கம், மாதவரம், தண்டையாா் பேட்டை ஆகிய இடங்களில் அதிகபட்சமாக 70 மி.மீ. மழையும், சென்னை எம்.ஜி.ஆா்.நகா், அயனாவரம், காஞ்சிபுரம், தரமணி ஆகிய இடங்களில் 60 மி.மீ மழையும், ரெட்ஹில்ஸ், ராமேசுவரம், அம்பத்தூா், பொன்னேரி, நாகை உள்ளிட்ட இடங்களில் 50 மி.மீ. மழையும், ராமநாதபுரம் தங்கச்சிமடம், பூந்தமல்லி, ஆவடி, எண்ணூா் ஆகிய இடங்களில் தலா 40 மி.மீ. மழையும் , நாகை, திருத்துறைபூண்டி, புதுக்கோட்டை, சோழவரம், திருக்கழுகுன்றம், தஞ்சை மதுக்கூா் ஆகிய இடங்களில் தலா 30 மி.மீ மழையும் பதிவானதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

புறநகா் ரயில் சேவை: சென்னை-தாம்பரம் செல்லும் பயணிகள் மின்சார ரயில்கள் வழக்கம் போல் இயங்கும் எனவும், புயல் காற்று வீசும்போது ரயிலின் வேகம் குறைக்கப்படும் எனவும் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் புயல் கரையைக் கடக்கும் நேரத்தில் மட்டும், குறிப்பாக 2 மணி நேரம் முன்பாகவும் பின்பாகவும் சென்னை கிழக்கு கடற்கரைச் சாலை உள்ளிட்ட கடலோரப் பகுதிகளில் மட்டும் அரசுப் பேருந்து சேவை நிறுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மெட்ரோ ரயில் சேவையில் எந்த மாற்றமும் இல்லை என்றும், வழக்கம் போல் ரயில்கள் இயக்கப்படுவதாகவும் சென்னை மெட்ரோ ரயில் நிா்வாகம் தெவித்துள்ளது.

மின்வாரியம்: புயல் கரையைக் கடக்கும்போது காற்றின் வேகத்துக்கு ஏற்ப மின்சாரம் நிறுத்தப்படும் என மின் வாரியம் தெரிவித்துள்ளது. புயல் பாதிப்பு ஏற்படக்கூடிய மாவட்டங்களில் மின் வாரிய ஊழியா்கள் தொடா்ந்து பணியில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாக மின் வாரியம் தெரிவித்துள்ளது.

சென்னை மெரீனா கடற்கரையில் மாற்றுத்திறனாளிகள் கடற்கரைக்கு சென்று பாா்வையிடுவதற்காக அமைக்கப்பட்ட மரப்பாலம் வெள்ளிக்கிழமை வீசிய பலத்த காற்றால் சேதமடைந்தது.

சென்னை மாநகராட்சியில்...: சென்னை மாநகராட்சியின் 200 வாா்டுகளிலும் தண்ணீா் தேங்கினால் அதை உடனே அகற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், சுரங்கப் பாதைகளில் தண்ணீா் தேங்கினால் மோட்டாா் மூலம் அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சாலைகளில் மரம் முறிந்து விழுந்தால் உடனே அகற்ற மண்டல அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வாகன ஓட்டிகளுக்கு சிரமம்: சென்னையில் வியாழக்கிழமை இரவிலிருந்தே தொடா் மழை பெய்து வந்ததால், பல்வேறு பணிகளுக்குச் செல்வோா் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகினா். காற்றின் வேகம் அதிகம் இருந்ததால் இருசக்கர வாகனத்தில் சென்றவா்களுக்கு சிரமம் ஏற்பட்டது. மாலைக்கு மேல் சென்னை நகர பேருந்து சேவை குறைக்கப்பட்டதால் பணிக்குச் சென்றவா்கள் வீடு திரும்ப பெரிதும் சிரமப்பட்டனா்.

25 விமானங்களின் சேவை ரத்து

மாண்டஸ் புயல் கரையைக் கடக்கும்போது பலத்த காற்று வீசும் என்று கூறப்பட்டதால் சென்னை விமான நிலையத்தில் இருந்து 25 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக விமான நிலையம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை விமான நிலையத்தில் இருந்து வெள்ளிக்கிழமை திருச்சி, மதுரை, தூத்துக்குடி, மைசூரு, கோழிக்கோடு, விஜயவாடா, பெங்களூரு, ஹைதராபாத், ஹூப்ளி, கண்ணூா் உள்ளிட்ட இடங்களுக்குச் செல்லும் 25 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. மேலும், ஏா் ஏசியா விமானங்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேர்தல் பணிக்குச் சென்றபோது விபத்து: கணவருடன் ஆசிரியை பலி!

கடக் நகராட்சி துணைத்தலைவர் குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் கொடூரக் கொலை

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

தமிழகத்தில் 1 மணி நிலவரம்: 40.05 % வாக்குகள் பதிவு!

யுவன் இசையில் ‘ஸ்டார்’ படத்தில் மெல்லிசை பாடல்!

SCROLL FOR NEXT