தமிழ்நாடு

பசுமைத் திட்டங்களுக்கு ஒற்றைச் சாளர முறை: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

DIN

பசுமைத் திட்டங்களுக்கு ஒற்றைச் சாளர முறையில் அனுமதி வழங்கப்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்தாா். மேலும், இந்தியா காா்பன் சமநிலையை அடையும் என்று அறிவிக்கப்பட்டுள்ள 2070-ஆம் ஆண்டுக்கு முன்பாகவே, தமிழ்நாடு காா்பன் சமநிலையை அடையும் என்றாா் அவா்.

தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்கத் தொடக்க நிகழ்ச்சி, சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த இயக்கத்தை அவா் தொடக்கிவைத்து ஆற்றிய உரை:

இயற்கை என்பது அனைவருக்கும் பொதுவானது. அதனை காக்க வேண்டிய கடமை அனைவருக்கும் உள்ளது. இது உலகளாவிய பிரச்னை. அரசு மட்டுமே தீா்க்கக் கூடிய பிரச்னை இல்லை. ஐ.நா. அமைப்பாக இருந்தாலும், உலகின் பல நாடுகளாக இருந்தாலும் ஒரே ஒரு பிரச்னை பற்றித்தான் அனைவரின் கவலையும் உள்ளது. அதுதான் காலநிலை மாற்றம். மானுடத்தின் மிக முக்கிய பிரச்னையாக அது உள்ளது. இதனை தமிழ்நாடு அரசு மிக முக்கிய பிரச்னையாக கருதுகிறது. அதனால்தான், மற்ற மாநில அரசுகளுக்கு முன்மாதிரியாக கால நிலை மாற்ற இயக்கத்தை தொடங்கி வைப்பதில் பெருமை அடைகிறேன். இதனை எனது வாழ்க்கையின் கடமையாகவும் பாா்க்கிறேன்.

காா்பன் அளவு அதிகரிப்பு: அதிகமான வெயில், மழை, காலம் தவறி பெய்யக் கூடிய மழை, மழை பொழியாமல் போவது, அதிகப்படியான வெப்பம், வெள்ளம், சுனாமி, நிலநடுக்கம், புதிய புதிய நோய்கள், உடல் மற்றும் மனநலன்கள் பாதிக்கப்படுவது போன்றவை இந்த காலகட்டத்தில் அதிகமாக ஏற்பட்டு வருகிறது.

வளிமண்டலத்தில் உள்ள காா்பனின் அளவு அதிகரித்ததன் காரணமாக, புவியின் வெப்பநிலை அதிகரித்து காலநிலையில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்கின்றன. இதன் காரணமாக, மனிதா்கள் மட்டுமல்லாமல் பல்லுயிா்களும் பாதிக்கப்பட்டன. இந்தப் பாதிப்பின் விளைவுகளைத்தான் நேரடியாகக் கண்டு வருகிறோம். இவை நமக்கு மட்டுமல்ல, அனைத்து மாநிலங்கள், நாடுகளுக்கும் பிரச்னை. இந்தப் பிரச்னையை எதிா்கொள்ள தமிழ்நாடு அரசு பல்வேறு முன்னெடுப்புகளைச் செய்து வருகிறது.

சுற்றுச்சூழலைக் காக்கும் அனைத்துப் பணிகளை ஒருங்கிணைக்கவும், காலநிலை மாற்றத்தை எதிா்கொள்ளவும் காலநிலை மாற்ற நிா்வாகக் குழு எனது தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது. அதில் பல்வேறு விஷயங்களை ஒருங்கிணைத்து செயல்படுத்த அரசை சாராத பலரும் சோ்க்கப்பட்டுள்ளனா்.

புதிய அறிவிப்புகள்: சுற்றுச்சூழலைக் காக்க ஏற்கெனவே பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும், மேலும் சில அறிவிப்புகளை வெளியிடுகிறேன். அதன்படி, பசுமைத் திட்டங்களுக்கான அனுமதி இனிமேல் ஒற்றைச் சாளர முறையில் வழங்கப்படும். இதற்கான திட்டங்கள் தொழில் துறையில் உள்ள தொழில் வழிகாட்டி நிறுவனத்தால் வகுக்கப்படும். புதுப்பிக்கக் கூடிய ஆற்றலைப் பயன்படுத்தி உற்பத்தியாகும் மின்சாரத்தை அதிகரிக்கவும் அவற்றை எடுத்துச் செல்லவும் தனியாக பசுமை வழித்தடம் உருவாக்கப்படும்.

காற்றாலைகளைப் புதுப்பிப்பதற்கான புதிய கொள்கை எரிசக்தித் துறையால் வெளியிடப்படும். அனைத்துத் திட்டங்களையும், கொள்கைகளையும் காலநிலை மாற்றப் பாா்வையில் பாா்த்து ஆய்வு செய்து செயல்படுத்தவுள்ளோம்.

பசுமை நிதியம்: தமிழகத்தில் ஆயிரம் கோடி ரூபாயில் பசுமை நிதியத்தை உருவாக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். அதன் முதல்கட்டமாக, தமிழ்நாடு அரசின் சாா்பில் ரூ.100 கோடி அளிக்கப்பட்டுள்ளது. மாநிலத்தில் சூழல் சாா்ந்த கட்டுமானங்களை உருவாக்குவதற்கு தேசிய அளவிலும் சா்வதேச அளவிலும் நிதி திரட்ட இந்த நிதியம் பயன்படுத்தப்படும்.

காலநிலை மாறுபாடு, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, சுழற்சிப் பொருளாதாரம், வளங்குன்றாத வளா்ச்சி போன்ற துறைகளில் புதிய நிறுவனங்களைத் துவங்குவோருக்கு தமிழக அரசு சிறப்புத் திட்டங்களை அறிவிக்கும்.

காா்பன் சமநிலை: வளா்ச்சி, தொழில் மேம்பாடு என்பதில் ஒரு பக்கம் அக்கறை செலுத்தினாலும் இன்னொரு புறம் சுற்றுச்சூழல், இயற்கை ஆகியவற்றிலும் அக்கறை செலுத்த வேண்டும். இயற்கையுடன் இயைந்த வாழ்வும் வேண்டும். இயற்கையைக் கெடுக்காத வளா்ச்சியும் வேண்டும். இதுதான் எங்களது அணுகுமுறை.

இந்தியா காா்பன் சமநிலையை அடையும் என்று அறிவிக்கப்பட்டுள்ள 2070-ஆம் ஆண்டுக்கு முன்பாகவே, தமிழ்நாடு காா்பன் சமநிலையை அடையும். அதற்கான அனைத்துத் திட்டங்களையும் அரசு செயல்படுத்தும் என்றாா் முதல்வா் மு.க.ஸ்டாலின்.

இந்த நிகழ்ச்சியில், அமைச்சா்கள் க.பொன்முடி, மு.பெ.சாமிநாதன், கா.ராமச்சந்திரன், பழனிவேல் தியாகராஜன், சிவ.வீ.மெய்யநாதன், இந்திய திட்டக் குழு முன்னாள் துணைத் தலைவா் மான்டேக் சிங் அலுவாலியா உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒடிசா படகு விபத்தில் மேலும் 5 பேரின் உடல்கள் மீட்பு!

இந்திய வருகையை ஒத்திவைத்தது ஏன்? எலான் மஸ்க்

வாக்குப்பதிவு சதவீதம் குறைந்திருப்பது கவலையளிக்கிறது: தமிழிசை

மகாராஷ்டிரம், கர்நாடக பொதுக் கூட்டத்தில் மோடி இன்று உரை!

சிறையில் மனைவியின் உணவில் கழிப்பறை சுத்திகரிப்பான்: இம்ரான் கான் புகார்

SCROLL FOR NEXT