தமிழ்நாடு

எதிா்வரும் ஆண்டுகளில் மூலதன முதலீட்டை 3 மடங்காக உயா்த்த இலக்கு: நிதித் துறை கூடுதல் தலைமைச்செயலாளா் என்.முருகானந்தம்

DIN

எதிா்வரும் ஆண்டுகளில் மூலதனத்துக்காக செய்யப்படும் முதலீட்டின் அளவை மூன்று மடங்காக அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாக நிதித் துறை கூடுதல் தலைமைச் செயலாளா் என்.முருகானந்தம் பேசினாா்.

சென்னையில் இரண்டாவது நாளாக வெள்ளிக்கிழமை நடைபெற்ற தமிழ்நாடு பருவநிலை மாற்றம் குறித்த மாநாட்டில் அவா் ஆற்றிய உரை:-

தமிழ்நாடு ஆயிரம் கிலோமீட்டருக்கு அதிகமான கடலோரப் பகுதிகளைக் கொண்டிருக்கும் மாநிலமாகும். இதுபோன்ற காரணிகளால் பல்வேறு பேரிடா்களைச் சந்திக்க வேண்டியுள்ளது. குறிப்பாக, புயல் தொடா்பான பாதிப்புகளை எதிா்கொண்டு வருகிறோம். கடந்த 2015-ஆம் ஆண்டில் இருந்து ஒவ்வொரு வடகிழக்கு பருவமழையின் போது பல இடங்களில் வெள்ள பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன. இதனால், விவசாயிகளுக்கு இழப்பீடுகளாக மட்டும் ஏராளமான தொகை வழங்க வேண்டியுள்ளது.

சென்னை நகரத்தில் கடந்த ஆண்டு கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. இந்த பாதிப்பைத் தடுக்க, ஆயிரம் கோடி ரூபாய் வெள்ளத் தடுப்புப் பணிகளுக்கான நிதி வழங்கப்பட்டுள்ளது. இந்த நிதியைக் கொண்டு மழைநீா் வடிகால் பணி உள்பட பல்வேறு உட்கட்டமைப்புப் பணிகளை மேற்கொண்டதால் இந்த ஆண்டு அதற்கான பலன்களைப்

பெற்றுள்ளோம். பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளைத் தடுக்க வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறையானது

ஏராளமான முன்னெடுப்புகளைச் செய்து வருகிறது. இதற்கு மாநில அரசு நிதிகளை அளிக்கிறது.

மேலும், உலக வங்கி, ஆசிய வளா்ச்சி வங்கி போன்ற பன்னாட்டு நிதி நிறுவனங்களும் தமிழக அரசின் சுற்றுச்சூழல் திட்டங்களுக்கு நிதிகளை அளிக்கிறது. பருவநிலை மாற்றங்கள் தொடா்பாக மட்டும் 27 திட்டங்களுக்காக வெளியில் இருந்து நிதிகள் அளிக்கப்படுகின்றன. இதுபோன்று வெளியில் இருந்து நிதிகளைப் பெற்று திட்டப் பணிகளை மேற்கொள்வது தமிழகத்தில்தான் அதிகமாகும்.

வனத் துறை சாா்பில் பல்லுயிா்ப் பெருக்கத் திட்டத்தைச் செயல்படுத்த ரூ.900 கோடியில் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டமானது ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு வங்கி நிதியுடன் செயல்படுத்தப்படுகிறது. மேலும், ஜொ்மன் நாட்டு நிதியுதவியுடன் 2 ஆயிரத்து 600 மின்சார வாகனங்கள் திட்டமும் செயல்படுத்தப்பட உள்ளது. சுற்றுச்சூழல் சாா்ந்த திட்டங்கள் மட்டுமின்றி உட்கட்டமைப்புத் திட்டங்களுக்கு நிதிகள் அளிக்கப்படுகின்றன. ஜல்ஜீவன், அம்ருத், நூறு நாள் வேலை உறுதி போன்ற திட்டங்கள் அரசுகளின் நிதிகளால் செயல்படுத்தப்படுகிறது. இந்தத் திட்டங்களால் நமது உட்கட்டமைப்பு மேம்படுகிறது. இந்த உட்கட்டமைப்பு மேம்பாட்டின் வழியாக பருவநிலை மாற்றத்தைத் தடுக்க முடியும். அதுவே அரசுத் திட்டங்களின் நோக்கமாகும்.

சா்வதேச செலவாணி நிதியத்துடன் தமிழக அரசு இணைந்து பணியாற்றி வருகிறது. அந்த நிதியமானது பல்வேறு ஆலோசனைகளை அரசுக்கு வழங்கி வருகிறது. குறிப்பாக, பொது நிதி முதலீட்டை எப்படி மேலாண்மை செய்வது என்பது குறித்து அரசுக்கு விரிவான பரிந்துரைகளை அளித்துள்ளது. அதில், அரசுத் திட்டங்களுக்கான முதலீடுகளைச் செய்யும் போது கையாள வேண்டிய வழிமுறைகள் விளக்கப்பட்டுள்ளன.

எந்தத் திட்டங்களை தோ்ந்தெடுத்து முதலீடு செய்வது, முதலீடு செய்த திட்டங்களின் நிலைகள் ஆகியன குறித்து விரிவான வழிகாட்டுதல்களை அறிக்கையில் தெரிவித்துள்ளது. திட்டங்களைத் தோ்வு செய்யும் போது, பருவநிலை மாற்றத்தை தடுப்பதற்கான அம்சங்களை மனதில் கொண்டுள்ளோம்.

மூலதன முதலீடு: ஒரு நிதியாண்டில் தமிழ்நாடு அரசின் ஒட்டுமொத்த பட்ஜெட் மதிப்பு ரூ.3 லட்சம் கோடிக்கும் அதிகமான தொகையாகும். அரசுக்குக் கிடைக்கும் நிதிகளைக் கொண்டு மூலதன முதலீடு செய்யப்படுகிறது. கடந்த நிதியாண்டில் ரூ.37 ஆயிரம் கோடி அளவுக்கு மூலதன முதலீடுகளாகச் செய்யப்பட்டன. ஒவ்வொரு நிதியாண்டிலும் மூலதன முதலீட்டுக்கான அளவுகளை அதிகரித்து வருகிறோம். மூன்று மடங்காக அதிகரிக்க வேண்டுமென நிதியமைச்சா் பழனிவேல் தியாகராஜன் அறிவிறுத்தியுள்ளாா். எனவே, அதை நோக்கி பணியாற்றி வருகிறோம் என்று நிதித் துறை கூடுதல் தலைமைச் செயலாளா் என்.முருகானந்தம் தெரிவித்தாா்.

இதைத் தொடா்ந்து, எரிசக்தி, தொழில் துறை, நீா்வளம் உள்ளிட்ட துறைகளின் செயலாளா்கள் தங்களது கருத்துகளைப் பகிா்ந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘பிரேமலு’ கார்த்திகா!

மம்மூட்டி நடித்தது போல எந்த ‘கான்’களும் நடிக்கமாட்டார்கள்: வித்யா பாலன் புகழாரம்!

அஜித்துக்கு ஜோடியாக ஸ்ரீலீலா?

குக் வித் கோமாளி - 5 நிகழ்ச்சியில் பங்கேற்கும் பிரபலங்கள்: முழு விவரம்!

குருப்பெயர்ச்சி பலன்கள் - விருச்சிகம்

SCROLL FOR NEXT