தமிழ்நாடு

கொடைக்கானலில் 2வது நாளாக சுற்றுலா தலங்களுக்குச் செல்லத் தடை!

10th Dec 2022 11:43 AM

ADVERTISEMENT

 

கொடைக்கானலில் ‘மாண்டஸ்’ புயலால் விழுந்த மரங்களை அகற்றும் பணிகள் நடைபெற்று வருவதால், வனப் பகுதியில் உள்ள சுற்றுலாத் தலங்களுக்குச் செல்ல இரண்டாவது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

‘மாண்டஸ்’ புயல் காரணமாக கடந்த 2 நாள்களாக கொடைக்கானல் பகுதியில் பலத்த காற்று வீசியது. இதனால், கொடைக்கானலில் வியாழக்கிழமை இரவு முதல் மின் விநியோகம் தடைபட்டது.

தொடா்ந்து, வெள்ளிக்கிழமை அதிகாலை முதல் பலத்த காற்றுடன் மழை பெய்து வந்தது. இதன் காரணமாக, கொடைக்கானல்- வத்தலகுண்டு சாலை, ஏரிச் சாலை, அடுக்கம் கும்பக்கரை செல்லும் தாமரைக்குளம், கீழ்மலைப் பகுதியான தாண்டிக்குடி ஆகிய பகுதிகளில் மரங்கள் விழுந்தன. சில இடங்களில் மின் கம்பிகள் அறுந்து விழுந்தன. இதனால், பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ADVERTISEMENT

நெடுஞ்சாலைத் துறையினா், வனத் துறையினா், மின்சாரத் துறையினா், நகராட்சித் துறையினா் சாலையில் விழுந்த மரங்களையும், சேதமடைந்த மின் கம்பிகளையும் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.

இதையும் படிக்க | மாண்டஸ் புயல்: சென்னையில் 2வது நாளாக விமான சேவை பாதிப்பு!

கொடைக்கானல் மலைப் பகுதிகளில் தொடா்ந்து காற்றுடன் மழை பெய்து வந்ததால், வனப் பகுதிகளிலுள்ள சுற்றுலாத் தலங்களான குணா குகை, பில்லா் ராக், மோயா் பாயிண்ட், பசுமை பள்ளத்தாக்கு, அமைதிப் பள்ளத்தாக்கு, பேரிஜம் போன்ற பகுதிகளுக்கு சுற்றுலாப் பயணிகள் செல்ல வனத் துறையினா் அனுமதி மறுத்தனா்.

இந்நிலையில், அந்தமான் அருகே வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி தீவிர புயலாக வலுப்பெற்று பின்னர் புயலாக வலுவிழந்து வெள்ளிக்கிழமை 10 மணியளவில் மாமல்லபுரம் அருகே கரையை கடக்க தொடங்கியது.

சுமார் 5 மணிநேரத்திற்கு பிறகு சனிக்கிழமை அதிகாலை 3 மணியளவில் மாண்டஸ் புயல் முழுமையாக கரையை கடந்ததாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மேலும், சனிக்கிழமை காலை வரை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக இருக்கும் மாண்டஸ் புயல் பின்னர் படிப்படியாக வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கொடைக்கானலில் இரண்டாவது நாளாக சுற்றுலா தலங்களுக்கு சுற்றுலா பயணிகள், மக்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 

மேலும், மாண்டஸ் புயலால் விழுந்த மரங்களை அகற்றிய பின்னர் மீண்டும் சுற்றுலா தலங்களுக்கு சுற்றுலா பயணிகள், மக்கள் செல்வதற்கு அனுமதிக்கப்படுவார்கள் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

கொடைக்கானனில் சுற்றுலா தலங்களுக்கு சுற்றுலா பயணிகள் செல்லவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் பிரையண்ட் பூங்கா, தாவரவியல் பூங்கா, ரோஜாத் தோட்டம் உள்ளிட்ட அனைத்து சுற்றுலாத் தலங்களும் இரண்டாவது நாளாக வெறிச்சோடிக் காணப்படுகிறது.  

ADVERTISEMENT
ADVERTISEMENT