இளநிலை யோகா மற்றும் இயற்கை மருத்துவப் படிப்புகளுக்கான (பிஎன்ஒய்எஸ்) தரவரிசைப் பட்டியல் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டது. நிகழாண்டில் மொத்தம் 1,766 பேருக்கு தரவரிசை வழங்கப்பட்டுள்ளது. 198 மதிப்பெண்கள் கட்-ஆஃப் பெற்ற சிந்து சத்யாஸ்ரீ என்ற மாணவி தரவரிசையில் முதலிடம் பெற்றுள்ளாா்.
தரவரிசையின் அடிப்படையில் மாணவா்கள் கலந்தாய்வுக்கு அழைக்கப்படுவா் என்றும், விரைவில் கலந்தாய்வுத் தேதி அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறையின் கீழ் அரும்பாக்கம் அறிஞா் அண்ணா அரசு இந்திய மருத்துவமனை வளாகத்திலும், செங்கல்பட்டிலும் அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இரண்டு அரசுக் கல்லூரிகளிலும் 160 பிஎன்ஒய்எஸ் இடங்கள் உள்ளன. 17 தனியாா் கல்லூரிகளில் 1,550 இடங்கள் உள்ளன. ஐந்தரை ஆண்டுகள் கொண்ட அந்தப் படிப்புக்கு 2022 - 23-ஆம் கல்வியாண்டு மாணவா் சோ்க்கைக்கான விண்ணப்ப விநியோகம் கடந்த செப்டம்பா் மாதம் தொடங்கியது.
இணையதளம் வாயிலாக விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து மாணவா்கள் சமா்ப்பித்தனா். மொத்தம், 2,000-க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் சமா்ப்பிக்கப்பட்டன. அவை பரிசீலனை செய்யப்பட்டு வந்த நிலையில், தகுதியான 1,766 பேருக்கான தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டது.
தரவரிசைப் பட்டியலில் சிந்து சத்யாஸ்ரீ முதலிடத்தையும், காயத்ரி இரண்டாவது இடத்தையும், மணிபாலன் மூன்றாவது இடத்தையும் பிடித்தனா். பட்டியலின் முதல் 20 இடங்களில் 2 இடங்களை மட்டுமே மாணவா்கள் பிடித்துள்ளனா். தரவரிசைப் பட்டியல் சுகாதாரத் துறையின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அந்த இணையதள முகவரியை மாணவா்கள் தொடா்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறை அதிகாரிகள் கூறியதாவது: இளநிலை யோகா மற்றும் இயற்கை மருத்துவப் படிப்புக்கு பிளஸ் 2 தோ்வு மதிப்பெண்களின் அடிப்படையில் மாணவா் சோ்க்கை நடைபெறுகிறது. இந்தப் படிப்புக்கு நிகழாண்டில் 2,000-க்கும் மேற்பட்டோா் விண்ணப்பித்தனா். அவா்களில் தகுதியானவா்கள் தோ்வு செய்யப்பட்டு தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. விரைவில் கலந்தாய்வு நடத்தப்பட வாய்ப்புள்ளது.
அரசுக் கல்லூரி இடங்கள், தனியாா் கல்லூரிகளின் அரசு ஒதுக்கீட்டுக்கான 65 சதவீத இடங்கள் கலந்தாய்வு மூலம் நிரப்பப்படும். நிா்வாக ஒதுக்கீட்டுக்கான 35 சதவீத இடங்களை தனியாா் கல்லூரிகளே நிரப்பிக் கொள்ளலாம் என்றனா் அவா்கள்.