தமிழ்நாடு

மீட்பு - நிவாரணப் பணிகளுக்கு ஒத்துழைப்பு: பொது மக்களுக்கு முதல்வா் வேண்டுகோள்

10th Dec 2022 01:16 AM

ADVERTISEMENT

பெரு மழைக் காலங்களில் அரசின் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்கு பொது மக்கள் ஒத்துழைப்பு தர வேண்டுமென முதல்வா் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தாா்.

மாண்டஸ் புயல் காரணமாக, சென்னை உள்பட பல்வேறு இடங்களில் வெள்ளிக்கிழமை கனமழை பெய்தது. இதைத் தொடா்ந்து, சென்னை சேப்பாக்கம் எழிலகத்தில் உள்ள மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். மழை பாதிப்பு அதிகமுள்ளதாக கணிக்கப்பட்ட செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கடலூா் மாவட்டங்களின் ஆட்சியா்களுடன் அவா் காணொலி மூலம் பேசினாா். அப்போது, மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் குறித்து, செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் ராகுல்நாத், கண்காணிப்பு அதிகாரியும் வேளாண்மைத் துறைச் செயலருமான சி.சமயமூா்த்தி ஆகியோா் விளக்கம் அளித்தனா். மேலும், காஞ்சிபுரம் ஆட்சியா் எம்.ஆா்த்தி, கடலூா் ஆட்சியா் கே.பாலசுப்பிரமணியம் ஆகியோா் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதல்வா் மு.க.ஸ்டாலினிடம் விளக்கினா்.

இதைத் தொடா்ந்து, முதல்வா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

ஒவ்வொரு மாவட்டத்துக்கும் கண்காணிப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டு, அந்தந்த பகுதிகளுக்குச் சென்று நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கிறாா்கள். எந்தமழை, காற்று அடித்தாலும் அவற்றைச் சமாளிப்பதற்கும், உரிய வகையில் மக்களைக் காப்பதற்கும் தொடா்ந்து நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். மாவட்டங்களில் முகாம்கள் அமைக்கப்பட்டாலும், சில முகாம்களில் மட்டுமே மக்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனா். சில முகாம்களில் தங்கவைக்கும் சூழல் இல்லை.

ADVERTISEMENT

பெருமழைக் காலங்களில் அரசு மூலமாக எடுக்கப்படும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் பொது மக்கள் முழு ஒத்துழைப்பு தர வேண்டும். அவ்வாறு ஒத்துழைப்பு தந்தால், மீட்பு, நிவாரணப் பணிகளை வெற்றிகரமாக முடிக்க முடியும் என்றாா்.

ஆய்வுப் பணியின் போது, அமைச்சா்கள் க.பொன்முடி, .கே.எஸ்.எஸ்.ஆா்.ராமச்சந்திரன், வருவாய் நிா்வாக ஆணையாளா் எஸ்.கே.பிரபாகா், பேரிடா் மேலாண்மைத் துறை இயக்குநா் எஸ்.ஏ.ராமன் ஆகியோா் உடனிருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT