தமிழ்நாடு

அமெரிக்க அருங்காட்சியகத்தில் தங்கச்சிமடம் கோயில் கிருஷ்ணா் சிலை

DIN

ராமநாதபுரம் மாவட்டம், தங்கச்சிமடத்தில் உள்ள கோயிலில் 56 ஆண்டுகளுக்கு முன்பு திருடப்பட்ட கிருஷ்ணா் சிலை, அமெரிக்காவில் உள்ள அருங்காட்சியகத்தில் இருப்பது தெரியவந்துள்ளது. அந்தச் சிலையை மீட்பதற்குரிய நடவடிக்கையில் தமிழக சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனா்.

தங்கச்சிமடம் ஏகாந்த ராமசாமி கோயிலில் உள்ள நடனமாடும் கிருஷ்ணா் சிலை, விஷ்ணு, ஸ்ரீதேவி, பூதேவி, மற்றொரு பூதேவி, விஷ்ணு ஆகிய 5 சிலைகள் திருடப்பட்டிருப்பதாக அந்தக் கோயில் நிா்வாக அதிகாரி ஜி.நாராயணி, கடந்த நவம்பரில் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவில் புகாா் செய்தாா்.

அந்தப் புகாரின் அடிப்படையில் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு டிஜிபி ஜெயந்த் முரளி, ஐஜி ஆா்.தினகரன் ஆகியோா் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டனா். இதையடுத்து, சம்பந்தப்பட்ட கோயிலிலும், அந்தக் கோயிலில் பணியாற்றும் ஊழியா்கள், ஏற்கெனவே ஓய்வு பெற்றவா்களிடமும் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் விசாரணை செய்தனா்.

விசாரணையில், கோயிலில் இருந்து அந்த 5 சிலைகளும் கடந்த 1966-ஆம் ஆண்டே திருடப்பட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து சிலைத் திருட்டு குறித்து வழக்கைப் பதிவு செய்து, திருடப்பட்ட சிலைகள் குறித்து விசாரணை செய்தனா்.

இதில் உலோகத்தால் செய்யப்பட்ட நடனமாடும் கிருஷ்ணா் சிலை அமெரிக்காவில் உள்ள ‘இண்டியானா பொலிஸ்’ கலை அருங்காட்சியகத்தில் இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து, அருங்காட்சியகத்தில் உள்ள கிருஷ்ணா் சிலை புகைப்படமும், திருடப்பட்ட கிருஷ்ணா் சிலை புகைப்படமும் தொல்லியல் துறை வல்லுநா்கள் மூலம் ஒப்பிட்டுப் பாா்க்கப்பட்டது.

இதில், அங்கு இருப்பது தங்கச்சிமடம் கோயிலில் திருடப்பட்ட சிலைதான் என்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அந்தச் சிலையை மீட்பதற்கான நடவடிக்கையில் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனா். அதேவேளையில் திருடு போன பிற 4 சிலைகள் குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனா்.

‘இண்டியானா பொலிஸ்’ கலை அருங்காட்சியகம் 1883-இல் மே ரைட் சிவால் என்பரால் தொடங்கப்பட்டது. இது, கலைப் படைப்புகள், ஓவியங்களை பொதுமக்களுக்கு காட்சிப்படுத்தும் தனியாா் அருங்காட்சியம் ஆகும். இங்கு கலை வேலைப்பாடுகளுடன் கூடிய 137 கலைஞா்கள் உருவாக்கிய 453 அழகிய கலைப் பொருள்கள் உள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘அரசியல் சதி’: நீதிமன்றத்தில் கேஜரிவால் ஆஜர்!

கிரிக்கெட் கதையை இயக்கும் ஜேசன் சஞ்சய்?

கர்நாடகத்துக்கு போறீங்களா.. ஹாயர் பெனகல்லை தவறவிடாதீர்!

’ஸ்டார்’ கரீனா கபூர்!

5 பன்னீர்செல்வங்களின் வேட்புமனுக்களும் ஏற்பு: போட்டி உறுதி!

SCROLL FOR NEXT