மாண்டஸ் புயலால் மயிலாடுதுறை மாவட்ட கடலோர கிராமங்களில் கடும் கடல் சீற்றம் ஏற்பட்டுள்ளது. அலை எழுச்சியின் காரணமாக கிராமங்களில் குடியிருப்புகளை கடல்நீர் சூழ்ந்ததால் பொதுமக்கள் இயல்பு வாழ்கை பாதிக்கப்பட்டுள்ளது.
மாண்டஸ் புயல் காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் கடலோர பகுதிகளில் கடும் கடல் சீற்றம் ஏற்பட்டுள்ளது. கடல் சீற்றத்தின் காரணமாக கடலோர கிராமங்களில் கடல் அலைகள் உயரே எழுந்து ஆர்ப்பரிக்கின்றன.
அலை எழுச்சியின் காரணமாக சீர்காழி அருகே தொடுவாய்,, மடவாமேடு, பூம்புகார் ஆகிய மீனவ கிராமங்களில் தாழ்வான பகுதி வழியே கடல் நீர் கிராமத்திற்குள் புகுந்துள்ளது.
படிக்க: வலுவிழந்தது மாண்டஸ்: நாளை அதிகாலை கரையைக் கடக்கிறது!
இதனால் நான்கு கிராமங்களைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட குடியிருப்புகளை கடல்நீர் சூழ்ந்துள்ளதால் அப்பகுதி மீனவர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். கடல் நீர் புகுந்த கிராமங்களில் உள்ள பாதிக்கப்பட்ட மக்கள் புயல் பாதுகாப்பு மையங்களுக்கும் நிவாரண முகாம்களுக்கும் செல்ல தொடங்கியுள்ளனர்.
30 ஆண்டுகளுக்குப் பிறகு கடல் அலைகள் மேலெழுப்பி கிராமத்திற்குள் புகுந்துள்ளதாக அப்பகுதி மீனவர்கள் தெரிவிக்கின்றனர். தண்ணீர் சூழ்ந்துள்ள நிலையில் பரவலாக மழையும் பெய்ய துவங்கியதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.