தமிழ்நாடு

தூய்மைப் பணியாளர் மேம்பாட்டுத் திட்டம்: தொடக்கி வைத்தார் ஸ்டாலின்

9th Dec 2022 12:18 PM

ADVERTISEMENT

தமிழ்நாட்டில்  உள்ள தூய்மைப் பணியாளர்களின் நலன் காக்கும் தூய்மைப் பணியாளர் மேம்பாட்டுத் திட்டத்தை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (9.12.2022) நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் மதுரை மாநகராட்சி அலுவலக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழ்நாட்டில் உள்ள தூய்மைப் பணியாளர்களின் நலன் காக்கும் தூய்மைப் பணியாளர்கள் மேம்பாட்டுத் திட்டத்தை தொடங்கி வைத்து, 53,301 தூய்மைப் பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்களை வழங்கிடும் அடையாளமாக 5 தூய்மைப் பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்களை வழங்கினார்.

இதையும் படிக்க.. குஜராத்தில் காங்கிரஸ் அடைந்தது தோல்வியே அல்ல! அதற்கும் மேல்

நமது நகரங்களை ஆரோக்கியமாக வைத்திருப்பதில் முன்னணியாக தூய்மைப் பணியாளர்கள் உள்ளனர். இருப்பினும், பல சமூகப் பொருளாதார சவால்களை எதிர்கொள்கின்றனர். சமூகத்தால்  ஒதுக்கப்பட்ட போதிலும்,  தூய்மைப் பணியாளர்கள் நமது சுகாதார உள்கட்டமைப்பை பராமரிக்க தங்களை முழுமையாக அர்ப்பணிக்கும் பொழுது சில நேரங்களில் எதிர்பாராத ஆபத்தை எதிர் கொள்கிறார்கள். 

ADVERTISEMENT

எனவே, தூய்மைப் பணியாளர்களின் சமூக, பொருளாதார வளர்ச்சி மற்றும் வாழ்வினை மேம்படுத்தும் பொருட்டு 2022-23 ஆம் ஆண்டிற்கான நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை மானியக் கோரிக்கையில், “நகரம் தூய்மையாக இருப்பதற்கு நாள்தோறும் அயராது உழைத்து வரும் தூய்மைப் பணியாளர்கள் மீது இவ்வரசு மிகுந்த அக்கறை கொண்டுள்ளது. இவர்களின் வாழ்வினை மேப்படுத்தவும், பாதுகாப்பினை உறுதிப்படுத்தவும், நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகள் மூலமாக தூய்மைப் பணியாளர்கள் மேம்பாட்டுத்திட்டம் செயல்படுத்தப்படும். 

இதையும் படிக்க.. ஹிமாசலில் பாஜக எப்படி தோற்றிருக்கிறது என்று பாருங்கள்!

அவர்களுக்கான பல்வேறு அரசு நலத்திட்டங்களை ஒருங்கிணைத்து, பயன்பெறச் செய்யவும், அவர்களின் குழந்தைகள் முறையான கல்வி பெறுவதை உறுதி செய்யவும், இயந்திரமயமாக்கப்படும் தூய்மைப்பணியில் அவர்களுக்கு தேவையான திறன் பயிற்சினை வழங்கி அவர்களை அப்பணியில் ஈடுபடுத்தவும் விருப்பத்தின் அடிப்படையில் அவர்களுக்கு மாற்றுத்தொழில் தொடங்கவும் வங்கிகள் மூலம் கடன் உதவி வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று அறிவிக்கப்பட்டது.

அந்த அறிவிப்பிற்கிணங்க, தமிழக முதல்வர் ஸ்டாலின் தூய்மைப் பணியாளர்கள் மேம்பாட்டுத் திட்டத்தை தொடங்கி வைத்து, இத்திட்டத்திற்கான இலட்சினை வெளியிட்டார். பின்னர், தூய்மைப் பணியாளர்களை கண்டறிந்து கணக்கெடுக்கும் பணியினை மேற்கொள்வதற்கான தூய்மைப் பணியாளர்கள் மேம்பாட்டுத் திட்ட மொபைல் செயலியையும் முதல்வர் ஸ்டாலின்  வெளியிட்டார்.

 தொடர்ந்து, முதல்வர் ஸ்டாலின்  ஐந்து தூய்மைப் பணியாளர்களுக்கு தலைக்கவசம், கையுறை, கால் உறை, ஒளிரும் மேல்சட்டை ஆகிய பாதுகாப்பு உபகரணங்களை வழங்கி, தூய்மைப் பணியாளர்கள் மேம்பாட்டுத் திட்ட கள ஆய்வு பணிகள் மற்றும் தூய்மைப் பணியாளர்கள் மேம்பாட்டுத் திட்ட குறும்படங்களை பார்வையிட்டார்.

 இத்திட்டத்தின் மூலம் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் பணிபுரியும் 18,859 நிரந்தர பணியாளர்கள் மற்றும் 34,442 தற்காலிக ஒப்பந்தப் பணியாளர்கள், என மொத்தம் 53,301  பணியாளர்கள் மட்டுமல்லாமல் தனியார் துறைகள், நிறுவனங்கள் மற்றும் தூய்மைப் பணியில் ஈடுபட்டுள்ள அனைத்து முறைசாரா பணியாளர்களும் இத்திட்டத்தின் மூலம் பயனடைவார்கள்.

இத்திட்டத்தினை அகமதாபாத்தில் உள்ள நகர்ப்புற மேலாண்மை மையத்தின் உதவியுடன் சிறப்பாக செயல்படுத்திட  திட்டமிடப்பட்டுள்ளது. நகர்ப்புற மேலாண்மை மையத்தின் உதவியுடன் தமிழ்நாட்டில்  கழிவு மற்றும் கசடு தொடர்புடைய பணிகளில் ஈடுபட்டிருக்கும் தூய்மைப் பணியாளர்களின் பாதுகாப்பை மேலும் மேம்படுத்த முன்னோடி திட்டமாக சென்னை மாநகராட்சியில் மண்டலம்-6 திரு.வி.க. நகரிலும், மதுரை மாநகராட்சி, புதுக்கோட்டை  மற்றும் பொள்ளாச்சி நகராட்சிகள், சேரன் மகாதேவி பேரூராட்சி ஆகிய 5 நகர்புர உள்ளாட்சி அமைப்புகளை தேர்ந்தெடுத்து தூய்மைப் பணியாளர்களை  கண்டறிந்து அவர்களுக்கான திட்டங்களை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இத்திட்டத்தை முதல்வர் ஸ்டாலின்  முதற்கட்டமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஐந்து நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகளில்   தொடங்கி வைத்தார். இத்திட்டம் பின்னர், படிப்படியாக தமிழ்நாட்டில்  உள்ள மற்ற அனைத்து  உள்ளாட்சி அமைப்புகளிலும் செயல்படுத்தப்படவுள்ளது

இத்திட்டத்தின் மூலம் மாநிலமெங்கும் உள்ள தூய்மைப் பணியாளர்கள் கண்டறியப்பட்டு, அவர்களுக்கு உரிய திறன் பயிற்சிகள், அவர்களது குழந்தைகளுக்கு முறையான கல்வி வசதி வழங்குதல் மற்றும் மாற்றுத்தொழில் தொடங்க வங்கிகள் மூலம் கடன் உதவி, ஓய்வூதியம், காப்பீடு போன்ற அரசு திட்டங்களை இனணப்பதற்கான வழிமுறைகளும் மேற்கொள்ளப்படும். இத்திட்டத்தின் மூலம் தூய்மைப் பணியாளர்களின் வாழ்க்கைத்தரம் உயர்ந்து, பொருளாதாரம் மேம்பாடு அடையும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT