தமிழ்நாடு

அரசுப் பேருந்துகள் இன்று இரவு இயங்குமா? - போக்குவரத்துத் துறை விளக்கம்!

9th Dec 2022 01:08 PM

ADVERTISEMENT

தமிழகத்தில் புயல் கரையைக் கடக்கும்போது இசிஆர் உள்ளிட்ட கடலோரப் பகுதிகளில் மட்டும் பேருந்து சேவை இருக்காது என்று போக்குவரத்துத் துறை விளக்கம் தெரிவித்துள்ளது. 

வங்கக் கடலில் உருவாகியுள்ள 'மாண்டஸ்' புயல் தற்போது சென்னையை நோக்கி நகர்ந்து வருகிறது. இந்த புயல் இன்று (டிச.9) நள்ளிரவு மாமல்லபுரம் அருகே கரையை கடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதையொட்டி புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், விழுப்புரம் ஆகிய 6 மாவட்டங்களில் இன்று(டிச.9) இரவு அரசுப் பேருந்துகள் இயங்காது என்று போக்குவரத்துத் துறை கூறியிருந்தது. 

இதையும் படிக்க | தூத்துக்குடியில் திடீரென கடல் உள்வாங்கியதால் பரபரப்பு!

ADVERTISEMENT

இந்நிலையில் இதுகுறித்து விளக்கம் தெரிவித்துள்ள போக்குவரத்துத் துறை அதிகாரிகள், தமிழகத்தில் புயல் கரையைக் கடக்கும் நேரத்தில் மட்டும், குறிப்பாக சென்னை கிழக்கு கடற்கரைச் சாலை உள்ளிட்ட கடலோரப் பகுதிகளில் மட்டும் பேருந்து சேவை நிறுத்தப்படும் என்று கூறியுள்ளனர். 

சென்னையில் இருந்து புதுவை, நாகை, சிதம்பரம், கடலூர், மயிலாடுதுறை, கும்பகோணம் ஆகிய பகுதிகளுக்கு கிழக்கு கடற்கரை சாலை வழியாகச் செல்லும் பேருந்துகள் திண்டிவனம் வழியாக திருப்பிவிடப்படுகிறது. 

அமைச்சர் அறிக்கை

அதுபோல தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும் பேருந்து சேவை வழக்கம்போல இயங்கும் என்றும் புயல் கரையைக் கடக்கும் நேரத்தில் மாமல்லபுரம் பகுதியில் மட்டும் பேருந்து சேவை நிறுத்தப்படும் என்றும் போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் அறிக்கை வெளியிட்டுள்ளார். 

ஆம்னி பேருந்து

ஆம்னி பேருந்துகள் இன்று இரவு வழக்கம்போல இயங்கும் என்று ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத் தலைவர் அன்பழகன் தகவல் தெரிவித்துள்ளார். 

புதுச்சேரி பேருந்துகள் ரத்து

அதுபோல, புதுச்சேரியில் இருந்து கிழக்கு கடற்கரை சாலை வழியாக சென்னை, காரைக்கால் செல்லும் அரசுப் பேருந்துகள் நிறுத்தப்படுவதாகவும் புயல் கரையைக் கடந்த பிறகு பேருந்து சேவைகள் தொடரும் என்று புதுச்சேரி சாலைப் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது. 

இதையும் படிக்க | 'ஆம்னி பேருந்துகள் இன்று இரவு வழக்கம்போல் இயங்கும்'

ADVERTISEMENT
ADVERTISEMENT