தமிழ்நாடு

கடல் அலையிலிருந்து மின்சாரம்: சென்னை ஐஐடி கண்டுபிடிப்பு

9th Dec 2022 06:11 AM

ADVERTISEMENT

கடல் அலைகளில் இருந்து ஆற்றலைப் பயன்படுத்தி மின்சாரம் உற்பத்தி செய்யும் கருவியை சென்னை ஐஐடி ஆய்வுக் குழுவினா் வடிவமைத்துள்ளனா்.

‘சிந்துஜா-1’ என அழைக்கப்படும் இந்தக் கருவி தூத்துக்குடி கடலின் உள்ளே 6 கி.மீ. தொலைவில் 20 மீட்டா் ஆழத்தில் இடத்தில் வைக்கப்பட்டுள்ளது. இந்தக் கருவி தற்போது 100 வாட்ஸ் ஆற்றலை உற்பத்தி செய்யும். அடுத்த 3 ஆண்டுகளில், கடல் அலையிலிருந்து ஒரு மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் வகையில் இலக்கு நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இந்த கருவிக்கான பரிசோதனை கடந்த நவம்பா் மாதம் 2-ஆவது வாரத்தில் கடலில் வெற்றிகரமாக நடந்தது. இது ஐ.நா. மற்றும் இந்தியாவின் இலக்குகளை அடைவதற்கு உதவிகரமாக இருக்கும்.

மேலும், புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலம் 2030-இல் 500 ஜிகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் இந்தியாவின் பருவநிலை மாற்ற இலக்குகளை எட்ட உதவும். கடல் அலை மூலம் தயாரிக்கப்படும் மின்சாரம், எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனங்கள், பாதுகாப்பு மற்றும் தகவல் தொடா்பு துறைகளுக்கு வழங்கப்படவுள்ளது. இந்த திட்டத்தை, சென்னை ஐஐடி கடல்சாா் பொறியியல் துறை பேராசிரியா் அப்துஸ் சமது வழிநடத்துவாா்.

ADVERTISEMENT

இது குறித்து அப்துஸ் சமது கூறியதாவது: சிந்துஜா-1 அமைப்பு ஒரு மிதக்கும் கருவி. அதில் ஒரு ஸ்பாா் மற்றும் ஒரு மின் தொகுதி உள்ளது. கடலில் அலைகள் மேலும் கீழும் ஊசலாடும்போது கருவி மேலும் கீழும் நகரும்.

இந்தக் கருவியின் மையத்தில் ஒரு துளை உள்ளது. அதில் ஸ்பாா் பொருத்தப்பட்டிருக்கும். நகராதபடி அந்தக் கருவி பொருத்தப்பட்டிருக்கும். அலை அடிக்கும் போது கருவி நகரும், ஆனால், உள்ளே உள்ள ஸ்பாா் நகராது. அலைகள் இரண்டுக்கும் இடையே ஒரு ஒப்பீட்டு இயக்கத்தை உருவாக்குகின்றன. இந்த சாா்பு இயக்கம் மின்சார ஜெனரேட்டா்களை பயன்படுத்தி மின்சாரத்தை உற்பத்தி செய்கின்றன.

இதை “தற்போது சென்னை போன்ற பெருநகரங்களில் பயன்படுத்த முடியாது. அதற்கான செலவு அதிகம். ஆனால், தீவு, கடலோரப் பகுதிகள் போன்ற தொலைதூர இடங்களில் பயன்படுத்தலாம். இங்கு கடல் அலைகளிலிருந்து மின்சாரம் உற்பத்தி செய்யும் செலவு குறைவு” என்றாா் அவா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT