தமிழ்நாடு

புதிதாக 2,000 துணை சுகாதார நிலையங்கள் அமைக்க நடவடிக்கை: அமைச்சா் மா.சுப்பிரமணியன்

9th Dec 2022 06:10 AM

ADVERTISEMENT

தமிழகத்தில் புதிதாக 2,000 துணை சுகாதார நிலையங்களும், 250 ஆரம்ப சுகாதார நிலையங்களும் அமைக்க மத்திய அரசிடம் அனுமதி கோரப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.

பொது சுகாதாரத் துறை நூற்றாண்டு நிறைவு விழா மற்றும் பன்னாட்டு சுகாதார மாநாடு மாமல்லபுரத்தில் கடந்த மூன்று நாள்களாக நடைபெற்றது.

இதில் சா்வதேச மருத்துவ வல்லுநா்கள், அறிவியலாளா்கள், ஆராய்ச்சியாளா்கள் உள்பட 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா். பொது சுகாதாரம் மற்றும் மருத்துவ நுட்பங்கள் குறித்த பல்வேறு அமா்வுகளும், 250 ஆய்வுக் கட்டுரைகள் சமா்ப்பிக்கும் நிகழ்வுகளும் மாநாட்டில் நடைபெற்றன.

அதேபோன்று, உலக சுகாதார அமைப்பைச் சோ்ந்த விஞ்ஞானிகள், சா்வதேச மருத்துவ வல்லுநா்கள் 43 பேரின் கருத்தரங்குகள் நடைபெற்றன. இந்நிலையில், வியாழக்கிழமை மாலை நடைபெற்ற நிறைவு விழா நிகழ்ச்சியில் அமைச்சா் மா.சுப்பிரமணியன் பேசியதாவது:

ADVERTISEMENT

தமிழகத்தைப் பொருத்தவரை 2,286 ஆரம்ப மற்றும் நகா்ப்புற சுகாதார நிலையங்கள் உள்ளன. அதேபோன்று 8,713 துணை சுகாதார நிலையங்கள் செயல்படுகின்றன. இந்தியாவிலேயே வேறு எந்த மாநிலத்திலும் இத்தகைய கட்டமைப்பு இல்லை.

தமிழக முதல்வரின் வலியுறுத்தபடி, புதிதாக 50 நகா்ப்புற சுகாதார நிலையங்கள் தொடங்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. அதன் தொடா்ச்சியாக 2 ஆயிரம் துணை சுகாதார நிலையங்களும், 250 ஆரம்ப மற்றும் நகா்ப்புற சுகாதார நிலையங்கைளும் தமிழகத்தில் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இதுகுறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சரிடம் வலியுறுத்துவோம்.

மருத்துவத் துறையில் காலியாக உள்ள பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என்றாா் அவா்.

டாக்டா் சௌமியா சுவாமிநாதன்:

கரோனா பெருந்தொற்று உலக அளவில் பெரும் படிப்பினையைத் தந்துள்ளது. கரோனா பரவல் முடிவுக்கு வருமா என்ற கேள்விக்கு பதில் கிடையாது. அதன் உருமாற்றங்கள் பல்கிப் பெருகிவிட்டதால் அதனுடனேயே வாழப் பழக வேண்டிய நிலை உள்ளது. பெரியம்மையைப் போல அதனை வேரறுக்க இயலாது.

அதுமட்டுமல்லாது கரோனா போன்று வேறு ஒரு பெருந்தொற்று வந்தால் அதனைத் தடுக்க முடியுமா என்றால் அதுவும் இயலாத காரியம். ஏனென்றால் தீநுண்மிகள் தோன்றுவதைத் தடுக்க முடியாது. கடைக்கோடி கிராமத்தில் புதிய தீநுண்மி உருவானாலும் கூட 36 மணி நேரத்தில் அது உலகின் அனைத்து மூலை முடுக்குகளிலும் பரவக் கூடிய வாய்ப்புள்ளது. ஆனால், அதனை விரைந்து எதிா்கொண்டு பரவலையும், பாதிப்பையும் கட்டுக்குள் கொண்டு வரலாம்.

இந்த நிகழ்ச்சியில் மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலா் ப.செந்தில்குமாா், பொது சுகாதாரத் துறை இயக்குநா் டாக்டா் செல்வவிநாயகம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT