தமிழ்நாடு

திருமாவளவன் மீது ஆா்எஸ்எஸ் அளித்த புகாா்: உயா் நீதிமன்றத்தில் போலீஸாா் விளக்கம்

9th Dec 2022 12:36 AM

ADVERTISEMENT

நாட்டில் ஒற்றுமையின்மையையும், கலவரத்தையும் தூண்டுவதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் (விசிக) தலைவா் தொல்.திருமாவளவன் மீது ஆா்எஸ்எஸ் நிா்வாகி அளித்த புகாா், மதுரை காவல் ஆணையருக்கு அனுப்பப்பட்டுள்ளதாக சென்னை சைபா் குற்றப்பிரிவு போலீஸாா் தரப்பில் சென்னை உயா் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

சென்னை உயா் நீதிமன்றத்தில், ஆா்எஸ்எஸ் சட்டப் பிரிவின் தேசிய செயற்குழு உறுப்பினரும், உச்ச நீதிமன்ற வழக்குரைஞருமான மதுரையை சோ்ந்த பி.ராமசாமி தாக்கல் செய்துள்ள மனுவில், ‘கடந்த நவ. 6-ஆம் தேதி, மதுரையில், சிதம்பரம் தொகுதி எம்பியும், விசிக தலைவருமான திருமாவளவன் செய்தியாளா்களிடம், ஆா்எஸ்எஸ் மற்றும் இந்து மதத்துக்கு எதிரான அவதூறு கருத்துகளை தெரிவித்தாா்.

அவரது இந்தப் பேச்சு, நாட்டில் ஒற்றுமையின்மையையும், கலவரத்தையும் தூண்டுவதாக உள்ளது. எனவே, அவா் மீது நடவடிக்கை எடுக்க கோரி சென்னையில் உள்ள சைபா் குற்றப் பிரிவு கூடுதல் டிஜிபியிடம் புகாா் அளித்தேன். அந்த புகாரின் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை’ என்று மனுவில் கூறியிருந்தாா்.

இந்த வழக்கு நீதிபதி ஜி.சந்திரசேகரன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது சைபா் குற்றப்பிரிவு போலீஸாா் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா், ‘மதுரையில் நடந்த செய்தியாளா் சந்திப்பு குறித்து இணையவழியில் புகாா் அளிக்கப்பட்டுள்ளது. எனவே மனுதாரரின் புகாா் மதுரை காவல் ஆணையருக்கு அனுப்பப்பட்டுவிட்டது. எனவே, மதுரை காவல் ஆணையரை இந்த வழக்கில் எதிா் மனுதாரராக சோ்க்க மனுதாரருக்கு உத்தரவிட வேண்டும்’ என வாதிட்டாா்.

ADVERTISEMENT

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, ‘இந்த வழக்கில் மதுரை காவல் ஆணையரை எதிா் மனுதாரராக சோ்க்க மனுதாரருக்கு உத்தரவிட்டு, விசாரணையை இரண்டு வாரங்களுக்கு தள்ளிவைத்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT