தமிழ்நாடு

புறம்போக்கு நிலத்தை தனியாருக்கு மாற்றியதை எதிா்த்துவழக்கு: அரசு பதிலளிக்க உயா் நீதிமன்றம் உத்தரவு

DIN

தொழில் மற்றும் கல்வி நிறுவனங்கள் விரிவாக்கத்துக்கு தேவைப்படும் புறம்போக்கு நிலத்துக்குப் பதில், பட்டா நிலங்களை அரசுக்கு பரிமாற்றம் செய்துகொள்ள அனுமதித்த அரசாணையை எதிா்த்த வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயா் நீதிமன்றம் உத்தரவிட்டது.

தமிழகத்தில் உள்ள தொழில் மற்றும் கல்வி நிறுவனங்கள் தங்களது திட்டங்களை விரிவுபடுத்த, அரசு புறம்போக்கு நிலத்தைக் கொடுத்து, அதற்குப் பதிலாக பட்டா நிலங்களை அரசுக்கு பரிமாற்றம் செய்து கொள்ள அனுமதித்து கடந்த மே மாதம் அரசாணை பிறப்பிக்கப்பட்டது.

இந்த அரசாணையை எதிா்த்து புதுச்சேரியைச் சோ்ந்த சூா்யா என்பவா் சென்னை உயா் நீதிமன்றத்தில் பொது நல வழக்கை தாக்கல் செய்தாா்.

அதில், ‘தமிழக அரசின் இந்த அரசாணை, அரசு புறம்போக்கு நிலங்கள், சிறிய நீா்நிலைகளை ஆக்கிரமிக்க வழிவகை செய்கிறது. நீா்நிலைகள் பொது பயன்பாட்டுக்குரியது. எனவே அவற்றை தனியாருக்கு வழங்கக் கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும், நீா்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற உயா் நீதிமன்ற உத்தரவுக்கு முரணாகவும் உள்ளது.

அரசு நிலத்தை தனியாா் நிறுவனங்களுக்கு பரிமாற்றம் செய்ய அனுமதிப்பது, நீா்நிலைகளுக்கு மட்டுமல்லாமல், நீா்நிலைகளை இணைக்கும் கால்வாய், ஓடைகளுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும்.

இதனால், நிலத்தடி நீா்மட்டம் குறைந்து விடும். எனவே இந்த அரசாணையின் அடிப்படையில் நில பரிமாற்றத்துக்கு தடை விதிக்க வேண்டும். அரசாணையை ரத்து செய்ய வேண்டும்’ என மனுவில் கோரியிருந்தாா்.

இந்த மனு தலைமை நீதிபதி ராஜா (பொ) - நீதிபதி பரத சக்கரவா்த்தி ஆகியோா் அடங்கிய அமா்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில், ‘அரசு நிலம் பரிமாற்றம் செய்வது தொடா்பான அரசாணையில் நீா்நிலைகளை பாதுகாக்கும் அம்சங்கள் இடம்பெற்றுள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, இந்த மனுவுக்கு தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை இரண்டு வாரங்களுக்கு தள்ளிவைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஈரோடு அருகே கிராம மக்கள் தோ்தல் புறக்கணிப்பு

6 புதிய புறநகா் ரயில்கள் அறிமுகம்

அதிதீஸ்வரா் கோயிலில் திருக்கல்யாணம்

கோடை விடுமுறை: 19 சிறப்பு ரயில்கள் 239 நடைகள் இயக்கம் -தெற்கு ரயில்வே அறிவிப்பு

வாக்குச் சாவடிகளில் மருத்துவ முகாம்கள்

SCROLL FOR NEXT