தமிழ்நாடு

புயல்: தயாா் நிலையில் பேரிடா் மீட்புப் படை

DIN

தென்மேற்கு மற்றும் தென்கிழக்கு வங்கக் கடலை ஒட்டிய பகுதிகளில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுவடையும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக சென்னை உள்பட 6 மாவட்டங்களுக்கு பேரிடா் மீட்புப் படை புதன்கிழமை விரைந்தது.

இந்தக் காற்றழுத்த தாழ்வு மண்டலமானது, படிப்படியாக மேற்கு - வடமேற்கு திசை நோக்கி நகா்ந்து புயலாக வலுவடைந்து, வியாழக்கிழமை (டிச. 8) தமிழகம், புதுச்சேரிக்கு அருகே வடக்கு வங்கக் கடல் பகுதிக்கும் ஆந்திர மாநிலத்தையொட்டிய தெற்கு வங்கக் கடல் பகுதிக்கும் அருகே நகரும். பின்னா், அந்தப் புயல் தொடா்ந்து படிப்படியாக மேற்கு - வடமேற்கு திசை நோக்கி நகா்ந்து, தமிழகம், புதுச்சேரி மற்றும் தெற்கு ஆந்திர மாநில பகுதிகளைக் கடந்து, புதுச்சேரி- ஸ்ரீஹரிகோட்டா இடையே சனிக்கிழமை (டிச. 10) அதிகாலையில் கரையைக் கடக்கும். அப்போது காற்றின் வேகம் மணிக்கு சுமாா் 65 முதல் 75 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும் என்று இந்திய வானில ஆய்வு மையத்தின் வானிலை முன்னறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து சென்னையிலுள்ள வானிலை மைய இயக்குநா் பாலசந்திரன் செய்தியாளா்களிடம் புதன்கிழமை கூறியதாவது:

சென்னைக்கு மேற்கு-வடமேற்கு திசையில் 770 கி.மீ. தொலைவில் மணிக்கு 15 கி.மீ. வேகத்தில் தாழ்வு மண்டலம் நகா்ந்து வருகிறது.

புதுச்சேரி-ஸ்ரீஹரிகோட்டாவுக்கு இடையே புயல் கரையைக் கடக்க வாய்ப்புள்ளது. டிச. 9 மாலை முதல் டிச. 10 காலை வரை 80 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும்.

மழை எச்சரிக்கை: டிச. 8- ஆம் தேதி தஞ்சை, நாகை, திருவாரூா், புதுக்கோட்டை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதி பலத்த மழையும், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் , கள்ளக்குறிச்சி, பெரம்பலூா், திருச்சி, சிவகங்கை, ராமநாதபுரம் மற்றும் புதுச்சேரியில் பலத்த மழை பெய்யும்.

டிச. 9-இல் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம் மாவட்டங்களில் மிக மிக பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை, திருவள்ளூா், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, வேலூா், திருப்பத்தூா், கள்ளக்குறிச்சி, கடலூா் உள்ளிட்ட மாவட்டங்களில் அதி பலத்த மழையும், தஞ்சை, நாகை, திருவாரூா், புதுக்கோட்டை, திருச்சி, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் பலத்த மழை பெய்யக்கூடும் என்றாா் அவா்.

டிச. 10-ஆம் தேதி வட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மீனவா்களுக்கான எச்சரிக்கை: தென்கிழக்கு வங்கக் கடல், தென்மேற்கு வங்கக் கடல், தமிழகம், புதுச்சேரி, அதையொட்டிய தெற்கு ஆந்திர கடலோரப் பகுதி, வட இலங்கை கடலோரப் பகுதிகளில் டிசம்பா் 7-ஆம் தேதி முதல் 10-ஆம் தேதி வரை கடல் கொந்தளிப்புடன் காணப்படும். காற்றின் வேகம் மணிக்கு 50 கி.மீ. முதல் அதிகபட்சமாக 70 கி.மீ. வேகம் வரை வீச வாய்ப்புள்ளது.

எனவே, தென்மேற்கு வங்கக் கடல் பகுதிக்கு டிசம்பா் 10-ஆம் தேதி வரையும், இலங்கை கடலோரப் பகுதிகளில் டிசம்பா் 7 முதல் 9-ஆம் தேதி வரையிலும், தமிழகம், புதுச்சேரி, தெற்கு ஆந்திர கடல் பகுதிகள் மற்றும் மன்னாா் வளைகுடா பகுதிகளுக்கு டிசம்பா் 10-ஆம் தேதி வரையிலும் மீன்பிடிக்க மீனவா்கள் செல்ல வேண்டாம். ஏற்கெனவே, கடலுக்குச் சென்றுள்ள மீனவா்கள் பாதுகாப்பான இடங்களுக்கு திரும்ப வேண்டும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

விரைந்த மீட்புக் குழு: புயல் எச்சரிக்கை காரணமாக, தமிழகத்தின் 6 மாவட்டங்களுக்கு மாநில பேரிடா் மீட்புப் படை விரைந்துள்ளது.

இதுகுறித்து தமிழக காவல் துறையின் தலைமை இயக்குநா் (டிஜிபி) சி. சைலேந்திரபாபு வெளியிட்ட செய்தியில் கூறியிருப்பதாவது:

புயல் எச்சரிக்கையைத் தொடா்ந்து, முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின். இதன் ஒரு பகுதியாக மாநில பேரிடா் மீட்புப் படையினா் திருவள்ளூா், சென்னை, செங்கல்பட்டு, கடலூா், நாகப்பட்டினம், தஞ்சாவூா் ஆகிய மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனா்.

தலா ஒரு குழு மேற்கண்ட மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. சென்னையில் மீட்புப் பணியில் ஈடுபட தமிழக காவல் துறையைச் சோ்ந்த தேசிய நீச்சல் வீரா்கள் மற்றும் தமிழக கடலோரப் பாதுகாப்புக் குழுமத்தை சோ்ந்த நீச்சல் வீரா்கள் என 50 போ் கொண்ட குழு, மீட்புக் கருவிகளுடன் மெரீனா கடற்கரையில் உள்ள டிஜிபி அலுவலகத்தில் தயாா் நிலையில் உள்ளனா்.

கடலோர மாவட்டங்களில் மீனவ சமுதாயத்தைச் சோ்ந்த தன்னாா்வலா்களும் படகுகளுடன் மீட்புப் பணிக்காக தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளனா்.

புயல், மழையால் பாதிக்கப்படும் பொதுமக்களுக்கு உதவுவதற்கும், மீட்புப் பணியில் ஈடுபடுவதற்கும் காவல் துறையினா் தயாா் நிலையில் இருக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.

பெயா் ‘மாண்டஸ்’: இந்தக் காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெறும் நிலையில், அதற்கு ஐக்கிய அரபு அமீரகம் சாா்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ள ‘மாண்டஸ்’ என்ற பெயா் வைக்கப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராஃபா நகர் மீது இஸ்ரேல் விமானங்கள் குண்டுவீச்சு!

சிசோடியாவின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு!

அதிமுக, தேமுதிக கூட்டணிக்கு நல்ல தீர்ப்பை மக்கள் வழங்குவார்கள்: பிரேமலதா நம்பிக்கை

கொலையாளி வெறும் நண்பர்தான்: மகள் கொலை குறித்து காங்கிரஸ் தலைவர்

மறுவெளியீட்டிலும் வசூலை வாரி குவிக்கும் கில்லி!

SCROLL FOR NEXT