தமிழ்நாடு

மாண்டஸ் புயல்: காரைக்காலில் கடல் சீற்றம்!

8th Dec 2022 12:45 PM

ADVERTISEMENT

 

மாண்டஸ் புயல் காரணமாக காரைக்காலில் வியாழக்கிழமை காலை முதல் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. கடலோர கிராமங்களில் தேசிய  பேரிடர் மீட்புப் படையினர் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை தொடர்பான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

வங்கக்கடலில் உருவான மாண்டஸ் புயல், வானிலை ஆய்வு மைய தகவலின்படி காரைக்காலுக்கு தென்கிழக்கே 500 கி.மீ. தொலைவிலும், சென்னைக்கு 580 கி.மீ. தொலைவிலும்  நிலைகொண்டு, குறைந்த வேகத்தில் நகர்ந்து வருகிறது.

இதனால் காரைக்கால் மாவட்டத்தின் கடல் பகுதி வியாழக்கிழமை காலை முதல் அதிக சீற்றத்துடன் காணப்படுகிறது. மீனவர்கள் கடலுக்குச் செல்லவேண்டாம் என்ற அறிவுறுத்தலின்படி விசைப்படகுகள் மீன்பிடித் துறைமுகத்திலும், ஃபைபர் படகுகளை அந்தந்த கடலோர கிராமத்தின் பாதுகாப்பான பகுதியிலும் நிறுத்தியுள்ளனர்.

ADVERTISEMENT

கடற்கரைப் பகுதிக்கு யாரும் செல்லவேண்டாம் என போலீசார் ஒலிபெருக்கி மூலமாக கிராமங்களில் அறிவுறுத்தியுள்ளனர். அதேபோல காரைக்கால் கடற்கரைக்கு பொழுதுபோக்குக்காகவும், சுற்றுலாவினரும் செல்லக்கூடிய நிலையில், யாரும்  கடற்கரைக்குச் செல்லவேண்டாம் என கடற்கரை சாலையில் செல்வோருக்கு போலீசார் அறிவுறுத்தி வருகின்றனர். காலை முதல் மழையின்றி வானிலை காணப்படுகிறது.

மாயமான மீனவரைத் தேட ஹெலிகாப்டர் பயன்படுத்தக் கோரிக்கை..

காரைக்கால் மாவட்டம், பட்டினச்சேரி பகுதியைச் சேர்ந்த சிவா (27) என்ற இளைஞர்  கடந்த 5}ஆம் தேதி கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றபோது படகு கவிழ்ந்து மாயமானார். இவரைத் தேடும் பணியில் மீனவர்கள் ஈடுபட்டிருந்த நிலையில், கடல் சீற்றத்தால் இப்பணி கைவிடப்பட்டது. கடலோரக் காவல்படை ஹெலிகாப்டரை தேடும் பணியில் ஈடுபடுத்தவேண்டும் என ஆட்சியரை சந்தித்து கிராம பஞ்சாயத்தார்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தேசிய பேரிடர் மீட்புப் படையினர் காரைக்கால் கடலோர கிராம மக்களுக்கு, பாதுகாப்பு முன்னெச்சரிக்கை தொடர்பான பல்வேறு ஆலோசனைகளை வழங்கி வருகின்றனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT