தமிழ்நாடு

திட்டப் பணிகளை முடுக்கிவிட அதிரடி திட்டம்: தென்காசியில் அறிவித்தார் மு.க. ஸ்டாலின்

DIN


தென்காசி:  மாவட்டவாரியாக, திட்டப்பணிகள் குறித்து குறிப்பிட்ட மாவட்டத்திற்கு நான் வந்து ஆய்வு நடத்தத் திட்டமிட்டிருக்கிறேன். திட்டப் பணிகளை முடுக்கிவிட இருக்கிறேன் என்று தென்காசி விழாவில் உரையாற்றிய முதல்வர் ஸ்டாலின் கூறினார்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தென்காசி மாவட்டத்தில் நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் ஆற்றிய உரையில்,

தென்காசி மாவட்டத்துக்கு வந்ததுமே, இந்த மண்ணைப் போலவே மனதும் குளிர்ச்சி அடைந்து விடுகிறது. எப்போதும் லேசான தூறல் – சாரலாகப் பெய்து வருவதைப் பார்க்கும்போது - சென்னை போன்ற வெப்பமான நகரத்தில் இருந்து வரும் எனக்கு இது மிகவும் இதமாக இருக்கிறது. ஆண்டுதோறும் சாரல் விழாவை அரசு கொண்டாடி வருகிறது.

மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் இருக்கும் மாவட்டம்! குறிஞ்சி, மருதம், முல்லை ஆகிய மூன்றையும் உள்ளடக்கிய குற்றாலம் இருக்கக்கூடிய மாவட்டம்! அதிகமான அருவிகள் உள்ள மாவட்டம்! அணைகள் அதிகம் உள்ள மாவட்டம்! மொத்தத்தில் இயற்கை எழில் கொஞ்சும் மாவட்டம் இந்த தென்காசி மாவட்டம். 

அது மட்டுமல்ல, வீரத்தின் விளைநிலமாக இருக்கும் பூலித்தேவன் மண் இது! இந்திய விடுதலைக்காகக் குரல் கொடுத்து, 1755-ஆம் ஆண்டே ஆங்கிலேயர்க்கு வரி கட்ட மறுத்த பூலித்தேவன் மண் இந்த மண். 1998-ஆம் ஆண்டு நெற்கட்டான்செவலில் மாவீரன் பூலித்தேவனுக்கு மணிமண்டபமும் சிலையும் அமைத்துக் கொடுத்தவர் முன்னாள் முதல்வர் கருணாநிதி.

வடக்கே காசி இருப்பதைப் போல தெற்கேயும் ஒரு காசியை உருவாக்க வேண்டும் என்று மன்னன் பராக்கிரம பாண்டியன் நினைத்து உருவாக்கியதுதான் தென்காசி கோபுரம்! அரிகேசரி பராக்கிரம பாண்டியன், இங்கிருந்துதான் இலங்கைக்குப் படையெடுத்துச் சென்றான்.

இயற்கைக்கும், வீரத்துக்கும், ஆன்மீகத்துக்கும் வேளாண்மைக்கும், விளைச்சலுக்கும் புகழ்பெற்ற தென்காசிக்கு வந்திருப்பதில் நான் உள்ளபடியே மகிழ்ச்சியடைகிறேன், பெருமைப்படுகிறேன், பூரிப்படைகிறேன். இந்த மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சராக தன்னுடைய கடமையை ஆற்றிக்கொண்டிருக்கின்ற நம்முடைய அருமைச் சகோதரர்  கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் அவர்களை நான் மனதார பாராட்டுகிறேன்! 

விருதுநகரைச் சேர்ந்தவராக இருந்தாலும், அவரது உழைப்பின் விருதாக தென்காசி மாவட்டமும் இணைத்து பொறுப்பில் தரப்பட்டுள்ளது. இதையும் தனது சொந்த மாவட்டமாக நினைத்து, இரட்டைக் குதிரையில் திறம்பட சவாரி செய்து, வெற்றிக் கொடி நாட்டக்கூடியவராக அவர் செயல்பட்டு வருகிறார்.

22 கோடியே 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான 57 முடிவுற்ற திட்டப்பணிகளை மக்களுடைய பயன்பாட்டிற்காக நான் துவக்கி வைத்திருக்கிறேன். 34 கோடியே 14 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், 23 புதிய பணிகளுக்கு இன்றைக்கு அடிக்கல் நாட்டப்பட்டிருக்கிறது. 1 லட்சத்து 3 ஆயிரத்து 508 பேர் பயனடையும் வகையில் - 182 கோடியே 56 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் இங்கு வழங்கப்படவிருக்கிறது.

ஒரே ஒரு விழாவில் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் பயனடைய இருக்கின்றன என்பதை மிகுந்த மகிழ்ச்சியோடு தெரிவிக்கிறேன். திமுக ஆட்சி மலர்ந்து பத்தொன்பது மாதங்கள் ஆகி இருக்கிறது. இந்த 19 மாத காலங்களில் பல நூறு சாதனைகளை தமிழ்நாட்டு மக்களுக்கு நாங்கள் தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறோம் என்பதை சாதாரணமாக இல்லை, நெஞ்சை நிமிர்த்தி நான் உங்கள் முன்னால் தெரிவிக்கிறேன்.

இந்த நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்னதாக, தென்காசி மாவட்ட மக்களின் கோரிக்கைகள் சில என்னிடம் தெரிவிக்கப்பட்டன. உடனடியாக அதிகாரிகளை அழைத்து நான் பேசினேன். கலந்துரையாடினேன். அவைகள் சிலவற்றை நிறைவேற்றித் தருவதற்கான அறிவிப்பை இந்த மேடையிலேயே அறிவிப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.

தென்காசி மாவட்டத்தின் முக்கிய இணைப்பு சாலையாக விளங்கக்கூடிய புளியங்குடி சங்கரன்கோயில் நெடுஞ்சாலை மேம்படுத்தப்படும்.
புதிதாக அமைந்துள்ள தென்காசி மாவட்டத்திற்கு புதிய மாவட்ட விளையாட்டு வளாகம் அமைக்கப்படும்.
துரைசாமிபுரம் மக்களுடைய நீண்ட நாள்  கோரிக்கையை ஏற்று, பனையூர் கூடலூர் - துரைசிங்கபுரம் சாலை மேம்படுத்தப்படும்.
தென்காசி குற்றாலம் இடையே இருக்கக்கூடிய இலாத்தூர் பெரிய ஏரி ஒரு முக்கிய மீன்பிடி மற்றும் சுற்றுலாத்தலமாக 10 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தப்படும்.
சிவகிரி மற்றும் ஆலங்குளம் பகுதி விவசாயிகளினுடைய கோரிக்கையை ஏற்று அவர்கள் பயன்பெறக்ககூடிய வகையில் ஆலங்குளத்தில் புதிய வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் அமைக்கப்படும்.

இத்தகைய நலத்திட்ட சாதனைகளின் அரசுதான் திமுக அரசு.

வினைதீர்த்த நாடார்பட்டி ஊராட்சி ஒன்றியப் பள்ளியில், 3-ஆம் வகுப்பு படிக்கக்கூடிய ஆராதனா எனும் குழந்தை, சமீபத்தில், எனக்கு ஒரு கடிதம் எழுதி இருந்தார். அந்தக் கடிதத்தில், தான் படிக்கும் பள்ளிக்கு கூடுதல் வகுப்பறை கட்டித்தர வேண்டும் என்று கேட்டிருந்தார். பாருங்கள் ஒரு குழந்தை எழுதியிருக்கிறது. அந்தக் கடிதத்தை படித்ததும் எனக்குப் பெருமையாக இருந்தது. எத்தகைய நம்பிக்கையை அவர் என் மீது வைத்திருந்தால் இந்தக் கடிதம் எழுதி இருப்பார் என நான் நினைத்து மகிழ்ச்சி அடைந்தேன். குழந்தை ஆராதனாவின் கோரிக்கை ஏற்கப்பட்டது என்பதை இந்தக் கூட்டத்தில் இப்போது நான் அறிவிக்கிறேன்.

அதற்கு முதற்கட்டமாக, 35 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் செலவில் இரண்டு வகுப்பறைகள் கட்டப்படும் என்பதையும் மகிழ்ச்சியுடன் நான் தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வளவு சிறு வயதிலேயே நம்பிக்கையோடு எனக்குக் கடிதம் எழுதிய அந்த குழந்தை ஆராதனா, அதே பள்ளியில் படித்து எதிர்காலத்தில் சிறப்பான நிலையை அடைய வேண்டும் என்று மீண்டும் அந்த சிறுமியை, அந்த குழந்தையை நான் வாழ்த்துகிறேன்.

இந்த மாவட்ட மக்களினுடைய நீண்டநாள் கோரிக்கை, தென்காசி மாவட்டம் சங்கரன்கோயில் வட்டம் மேலநீலித நல்லூர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் கல்லூரியை ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து மீட்டு தனி அலுவலரை நியமித்த அரசு தான் தமிழக அரசு, தி.மு.க அரசு. 

இப்படி ஒவ்வொருவருடைய தேவைகளையும் கேட்டுக் கேட்டு- ஒவ்வொரு பகுதியின் பிரச்சினையையும் அறிந்து, அறிந்து நிறைவேற்றித் தரும் அரசாக நம்முடைய அரசு செயல்பட்டு வருகிறது. 

இதனைப் பொறுத்துக் கொள்ள முடியாத எதிர்க்கட்சித் தலைவர், திமுக அரசு எதையுமே நிறைவேற்றவில்லை என்று ஒரே வரியில் சொல்லி இருக்கிறார்.

பூனை கண்ணை மூடிக்கொண்டு உலகமே இருண்டுவிட்டதா நினைக்குமாம். அதுபோல எதிர்க்கட்சித் தலைவர் நினைத்துக் கொண்டு இருக்கிறார். இவர் வேண்டுமென்றால் கண்ணை மூடிக்கொண்டு இருக்கலாம். ஆனால், தமிழ்நாட்டு மக்கள் 19 மாதத்துக்கு முன்பே விழித்துவிட்டார்கள். இருண்ட காலத்தை முடித்து வைத்து, உதயசூரியனின் காலத்தை உருவாக்கிவிட்டார்கள். எனவே, மக்களால் நிராகரிக்கப்பட்டவர்களின் எரிச்சல் வார்த்தைகளுக்கெல்லாம் நான் விரிவாக பதில் சொல்ல விரும்பவில்லை. நாங்கள் சொன்ன வாக்குறுதிகள் உறுதிமொழியை நிறைவேற்றுவதற்கே நேரம் கிடைக்கவில்லை. 

தமிழ்நாட்டை இந்தியாவில் தலைசிறந்த மாநிலமாக ஆக்குவது ஒன்றுதான் என்னுடைய குறிக்கோள்.

தொழில் வளர்ச்சியா?
சிறுதொழில் மேம்பாடா?
கல்வியா?
சுகாதாரமா?
உள்கட்டமைப்புப் பணிகளா?
மகளிர் மேம்பாடா?
ஒடுக்கப்பட்டவர்களுடைய மக்களின் மேம்பாடா?
இளைஞர் நலனா?
விளையாட்டா?
அனைத்திலும் தமிழகம் முன்னேற்றம் அடைய வேண்டும். அதற்கான திட்டங்களை தீட்டி வருவது மட்டுமல்ல - அந்தத் திட்டங்களால் தமிழகம் உயர்ந்து வருவதை கண்ணுக்கு முன்னால் நான் பார்க்கிறேன். நாள்தோறும் எங்களுக்கு கிடைக்கும் செய்திகள் இதனை உறுதிப்படுத்திக் கொண்டிருக்கிறது.

திட்டத்தை அறிவித்தோம் - நிதியை ஒதுக்கினோம்- அத்தோடு கடமை முடிந்துவிட்டது என்று இல்லாமல், ஒவ்வொரு நாளும் நான் அதைக் கண்காணிக்கிறேன். உரிய காலத்தில் அனைத்துத் திட்டங்களையும் முடிப்பது தான் என்னுடைய இலக்கு என்று நான் தொடர்ந்து சொல்லி வருகிறேன். 
ஒவ்வொரு மாவட்டமாக சுற்றுப்பயணத்தை நடத்தி அரசு நிகழ்ச்சியில் பங்கேற்று பல பணிகளை முடித்துக் கொண்டு வருகிறேன். திறப்பு விழா நிகழ்ச்சி, அடிக்கல் நாட்டு விழா,  இதையெல்லாம் ஒவ்வொரு மாவட்டத்தில் முடித்துக் கொண்டு வருகிறேன்.

அடுத்தகட்டமாக, மாவட்டவாரியாக, இந்தத் திட்டப்பணிகள் குறித்து குறிப்பிட்ட மாவட்டத்திற்கு நான் வந்து ஆய்வு நடத்தத் திட்டமிருக்கிறேன். ஒவ்வொரு மாவட்டத்துக்கும் அறிவிக்கப்பட்ட பணிகள் – நடைபெறுவதை நானே பார்த்து – அந்த பணிகளை முடுக்கிவிட இருக்கிறேன். அமைச்சர்களை உடன் வைத்துக்கொண்டு - அதிகாரிகள் - அலுவலர்களை நேரில் அழைத்துப் பேச இருக்கிறேன் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்குப்பதிவுக்காக

ஒற்றை வாக்கால் பெரும் மாற்றம்: தலைமைத் தோ்தல் ஆணையா்

‘முகூா்த்தத்தை’ தவறவிட்ட பாஜக வேட்பாளா்! மனுதாக்கல் செய்யாமல் திரும்பினாா்

வாக்குப் பதிவை எளிதாக்கும் செயலிகள் - இணையதளங்கள் வாக்காளா்கள் சிரமமின்றி தேட ஏற்பாடுகள்

வாக்களிக்கத் தவறாதீா்கள்!

SCROLL FOR NEXT