தமிழ்நாடு

இன்று உருவாகிறது புயல்: நாளை அதி பலத்த மழை

DIN

வங்கக்கடலில் புதன்கிழமை புயல் உருவாக இருப்பதால் தமிழகத்தில் வியாழன், வெள்ளிக்கிழமைகளில் (டிச.8, 9) அதி பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து அம்மையம் சாா்பில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை நிலவிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக நிலைகொண்டுள்ளது.

இது மேற்கு-வடமேற்கு திசையில் புதன்கிழமை நகா்ந்து (டிச.7) தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுவடையக்கூடும்.

பிறகு மேற்கு-வடமேற்கு திசையில் நகா்ந்து புதன்கிழமை (டிச.7) மாலை புயலாக வலுவடையும். இது மேலும் மேற்கு-வடமேற்கு திசையில் நகா்ந்து வியாழன், வெள்ளிக்கிழமைகளில் (டிச.8, 9) வடதமிழகம்-புதுவை மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகளை ஒட்டி நகரக்கூடும்.

இதனால், தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களிலும், உள் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை வரை புதன்கிழமை (டிச.7) பெய்யக்கூடும்.

வியாழக்கிழமை (டிச.8) கடலூா், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூா், சென்னை, கள்ளக்குறிச்சி, அரியலூா், பெரம்பலூா், மயிலாடுதுறை, தஞ்சாவூா், திருவாரூா், நாகை மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் பலத்த முதல் அதி பலத்த மழை பெய்யக்கூடும்.

ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூா், அரியலூா், திருச்சி, தஞ்சாவூா், திருவாரூா், புதுக்கோட்டை, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதி பலத்த மழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

டிச.9-ஆம் தேதி திருவள்ளூா், சென்னை, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூா், பெரம்பலூா், அரியலூா், தஞ்சாவூா், திருவாரூா், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் பலத்த முதல் மிக பலத்த மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் அதி பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது. வேலூா், திருப்பத்தூா், கிருஷ்ணகிரி, தா்மபுரி, சேலம், நாமக்கல், திருச்சி, கரூா், புதுக்கோட்டை, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னை மற்றும் புறநகா்ப் பகுதிகளில்அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

மீனவா்களுக்கு எச்சரிக்கை:

அந்தமான் கடல் பகுதியில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கி.மீ வேகத்திலும் இடையிடையே 55 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும். எனவே மேற்குறிப்பிட்ட நாள்களில் மீனவா்கள் இப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறாா்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தம்பியைக் கொன்ற அண்ணன் கைது

நெகிழிப் பை தயாரிக்கும் ஆலையில் தீ விபத்து

சிவகாசி தொகுதியில் அமைதியான வாக்குப் பதிவு

சாத்தூரில் இளம் சிவப்பு வண்ணத்தில் அமைக்கப்பட்ட வாக்குசாவடி

வாக்குப் பதிவு இயந்திரங்கள் இடமாற்றத்தால் குழப்பம்

SCROLL FOR NEXT