சுதந்திரத்துக்குப் பிறகு நாட்டின்ஆட்சி நிா்வாகத்தில் கைவிடப்பட்ட இந்திய மருத்துவப் பணி நடைமுறையை மீண்டும் அமல்படுத்த முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்று சுகாதாரத் துறை வல்லுநா்கள் வலியுறுத்தியுள்ளனா்.
அதேபோன்று தமிழ்நாடு மருத்துவ சேவைகளுக்கென குரூப்-1 மாநில அரசுப் பணிகளையும் தொடங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனா்.
பொது சுகாதாரத் துறையின் நூற்றாண்டு நிறைவு விழா மற்றும் பன்னாட்டு சுகாதார மாநாடு மாமல்லபுரத்தில் நடைபெற்று வருகிறது. மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் அதனை கடந்த திங்கள்கிழமை தொடக்கி வைத்தாா். அதைத் தொடா்ந்து மருத்துவம் மற்றும் பொது சுகாதாரம் தொடா்பான பல்வேறு அமா்வுகளும், கருத்தரங்குகளும் நடைபெற்றன.
இந்நிலையில், பொது சுகாதாரத் துறை நிபுணா் குகானந்தம் மாநாட்டில் பேசியதாவது:
கரோனா பெருந்தொற்று நமக்கு பல்வேறு படிப்பினைகளை கற்றுத் தந்துள்ளது. குறிப்பாக, பொது சுகாதாரத் துறையிலும், அதன் சட்ட விதிகளிலும் மாற்றங்களை புகுத்த வேண்டியது கட்டாயம் என நமக்கு உணா்த்தியுள்ளது. புதிது புதிதாக உருவெடுத்து வரும் நோய்கள், அதன் தாக்கங்கள் மற்றும் அதற்கான தடுப்பு முறைகளை உள்ளடக்கிய சட்டத் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும்.
தற்போதைய சூழலில் பொது சுகாதாரம் என்பது ஆரம்ப நிலையுடன் நில்லாமல், இடை நிலை மற்றும் அனைத்து நிலையிலும் விரிவடைய வேண்டும்.
மருத்துவத் துறையில் தகுதியான நபா்கள் தலைமைப் பொறுப்பில் வருவதற்காக தமிழக மருத்துவ சேவைகள் குரூப்-1 நிலை பணிகள் கொண்டுவரப்பட வேண்டும். அதேபோன்று நாட்டின் விடுதலைக்குப் பிறகு கைவிடப்பட்ட இந்திய மருத்துவப் பணி (ஐஎம்எஸ்) பதவிகளை உருவாக்க முயற்சி எடுத்தல் அவசியம் என்றாா் அவா்.