தமிழ்நாடு

பல்கலைக்கழகங்களின் தன்னாட்சி அதிகாரத்தை யுஜிசி உறுதி செய்ய வேண்டும்: இ.பாலகுருசாமி கோரிக்கை

7th Dec 2022 03:09 AM

ADVERTISEMENT

பல்கலைக்கழகங்களின் தன்னாட்சி அதிகாரத்தை யுஜிசி உறுதி செய்ய வேண்டும் என்று அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் இ.பாலகுருசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.
 இது தொடர்பாக பல்கலைக்கழக மானியக் குழுவின் தலைவர் எம்.ஜெகதீஷ்குமாருக்கு அவர் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
 தேசிய கல்விக் கொள்கையின் முக்கியமான பரிந்துரைகளை செயல்படுத்துவதற்காக யுஜிசி எடுத்து வரும் பல்வேறு
 அதிரடி நடவடிக்கைகளை அறிந்து, நாடு முழுவதும் உள்ள கல்வியாளர்கள் பெரிதும் மகிழ்கிறார்கள். எனினும், இந்த முயற்சியில் குறிப்பிடத்தக்க வெற்றியை அடைவதற்கு இன்னும் சிறிது காலம் ஆகும். அது நாட்டின் உயர்கல்வி நிறுவனங்களின் குறிப்பாக, பல்கலைக்கழகத் துணைவேந்தர்கள் கொண்டுள்ள நம்பிக்கை, துணிவு, அர்ப்பணிப்பு ஆகியவற்றைச் சார்ந்துள்ளது.
 கேரளம், தமிழ்நாடு, மேற்கு வங்கம், சத்தீஸ்கர், பஞ்சாப் உள்ளிட்ட மாநில அரசுகளுக்கும் ஆளுநர்களுக்கும் இடையே துணைவேந்தர்களை நியமிக்கும் விஷயம் தொடர்பாக பூசல்கள் நிலவி வருகின்றன.
 ஆளுநரை கலந்தாலோசிக்காமலேயே துணைவேந்தர்களை நியமிப்பதன் மூலம் பல்கலைக்கழகங்களைத் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர மாநில அரசுகள் விரும்புகின்றன. இத்தகைய போக்கு ஊழலுக்கும், வேண்டியவர்களுக்கு சலுகை அளிக்கவும் வழிவகுத்துவிடும்.
 மறுபுறம் ஆளுநர்களோ, வேந்தர்கள் என்ற முறையில் துணைவேந்தர்களை நியமிப்பது முதல், பல்கலைக்கழகங்களின் செயல்பாடுகளை மேற்பார்வையிடுவது வரையில் தங்களுக்கு சட்டரீதியான அதிகாரங்கள் இருப்பதாகக் கருதுகின்றனர்.
 இத்தகைய சூழ்நிலையில், துணைவேந்தர்கள் சுயமாகச் செயல்படுவதா, யாருக்காவது கட்டுப்படுவதா என்று இருதலைக் கொள்ளி எறும்பு போலத் தவிக்கிறார்கள்.
 துணைவேந்தர்களின் நியமனத்தைப் பொருத்தவரையில் உச்சநீதிமன்றமும் உயர்நீதிமன்றங்களும் முரண்பட்ட தீர்ப்புகளையே வழங்கிக் கொண்டிருக்கின்றன. பல்கலைக்கழக மானியக் குழுவின் விதிமுறைகள் பல்கலைக்கழகங்களின் சட்ட விதிகளுக்கும் மேலானவை என்பதில் நீதிமன்றங்களே தெளிவின்றி இருப்பது வியப்பாக இருக்கிறது.
 பல்கலைக்கழக கல்வியின் தரத்தைப் பேண ஒருங்கிணைந்த செயல்பாடு, குறிக்கோள், பராமரிப்பு ஆகியவற்றுக்காக இயங்கும் தன்னாட்சி அதிகாரம் கொண்ட நிறுவனம் என்ற முறையில் யுஜிசி இத்தகைய பிரச்னைகளில் அவசர கவனம் செலுத்த வேண்டும். அதற்காகத் தகுந்த நடவடிக்கைகளை எடுத்து, பல்கலைக்கழகங்களையும், துணைவேந்தர்களையும் அரசியல்வாதிகளின் செல்வாக்கிலிருந்தும் சில சுயநலசக்திகளின் பிடியிலிருந்தும் காக்க வேண்டும்.
 அதற்காக பல்கலைக்கழகத் துணைவேந்தர்களைத் தேர்ந்தெடுக்கும் குழு அமைப்பது முதல் நியமிப்பது உள்பட அனைத்து நடைமுறைகள் தொடர்பாக சில உறுதியான விதிமுறைகளைக் கொண்டு வரவேண்டும்.
 உலகம் முழுவதும் பல்கலைக்கழகங்கள் தொழில்நுட்பங்களிலும் புதுமை கண்டறிவதிலும் உயர்ந்த தரத்துக்காக போட்டியிட்டுக் கொண்டிருக்கும்போது, இந்திய பல்கலைக்கழகங்கள் பல்வேறு சட்ட வழக்குகள், அரசியல்வாதிகளின் அழுத்தங்களில் சிக்கிப் போராடிக் கொண்டிருக்கின்றன.
 எனவே, பல்கலைக்கழகங்களின் தன்னாட்சி அதிகாரத்தை உறுதி செய்வதற்கான சில நடவடிக்கைகளை பல்கலைக்கழக மானியக் குழு எடுப்பதற்கு இதுவே சரியான தருணம் ஆகும்.
 அதன் மூலம் தேசிய கல்விக் கொள்கையில் எதிர்பார்க்கப்படும் நாட்டின் உயர் கல்வியின் தரம் உறுதி செய்யப்படும் என்று பாலகுருசாமி தெரிவித்துள்ளார்.
 
 

ADVERTISEMENT
ADVERTISEMENT