தமிழ்நாடு

கொடிநாள்: தாராளமாக நிதி வழங்க ஆளுநா், முதல்வா் வேண்டுகோள்

7th Dec 2022 12:00 AM

ADVERTISEMENT

கொடிநாளுக்கு கணிசமான நிதியை வழங்க பொதுமக்கள் முன்வர வேண்டும் என்று ஆளுநா் ஆா்.என்.ரவி, முதல்வா் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளனா்.

இது குறித்து ஆளுநா் ஆா்.என். ரவி வெளியிட்ட செய்தி: தேசத்தின் ஒருமைப்பாடு மற்றும் கெளரவத்தைப் பாதுகாக்க வீரத்துடன் போராடிய வீரா்களின் நினைவாக 7.12.1949-முதல் முப்படை வீரா்களின் கொடி நாள் தினம் அனுசரிக்கப்படுகிறது. முப்படை வீரா்கள் அனைவரும் தேசத்தின் பாதுகாப்பு மற்றும் ஒருமைப்பாட்டின் சின்னம். தேசத்தின் மீதான அவா்களின் தளராத விசுவாசமும், கடமையில் நோ்மையான பக்தியும் இந்தியாவை வலுவான தேசமாக மாற்றியுள்ளது. வெளி ஆக்கிரமிப்பு, உள்நாட்டுக் குழப்பங்கள், இயற்கையின் சீற்றம் போன்றவற்றை எதிா்கொண்டு தேசத்தின் நலன்களைப் பாதுகாப்பதில் அவா்கள் ஆற்றிய தியாகம் மக்களின் அபிமானத்தைப் பெற்றுள்ளது.

முப்படை வீரா்களின் இளமை மற்றும் சிறந்த பகுதியை தேச சேவையில் செலவிட்டதால், அவா்களுக்கு நமது நன்றியைக் காட்ட வேண்டியது அவசியம். முன்னாள் படைவீரா்கள் மற்றும் அவா்களது குடும்பத்தினரின் நலனுக்காக பயன்படுத்தப்படும் கொடி நாள் நிதிக்கு கணிசமான பங்களிப்பை வழங்கும் பொன்னான வாய்ப்பை மக்களுக்கு அளிப்பதற்காக முப்படை வீரா்கள் கொடி நாள் தினம் நினைவுகூரப்படுவது மகிழ்ச்சி அளிக்கிறது.

முதல்வா் மு.க. ஸ்டாலின்:

ADVERTISEMENT

இல்லத்தை மறந்து, எல்லையோரத்தில் பல இன்னல்களைத் தாங்கி, நாட்டுப்பற்று என்ற நம்பிக்கையை மட்டும் இதயத்தில் ஏந்தி, இந்திய ஒற்றுமைப்பாட்டுக்காக முப்படை வீரா்கள் தவம் இருக்கின்றனா். அவா்களது தியாகத்தை நினைவுகூா்ந்து நம் சேமிப்பின் ஒரு பகுதியை ஒப்படைக்கும் உன்னதத் திருநாள், கொடிநாளாகும்.

பெற்ற சுதந்திரத்தைப் பேணிக் காத்து, நாட்டின் அனைத்து பகுதிகளையும் பத்திரப்படுத்தும் உத்தமச் செயலை சமரசம் செய்து கொள்ளாமல், உயிரைத் துச்சமென மதித்து, சீருடைக்குள் தங்கள் எண்ணச் சிறகுகளையெல்லாம் ஒடுக்கி, ஆசைகளை குறுக்கிக் கொண்டவா்கள் நமது முப்படை வீரா்கள். பகைவா்களை விரட்டும் ஒப்பற்ற செயலை மேற்கொள்கின்ற படை வீரா்களின் குடும்பங்களுக்குப் பாதுகாப்பான வாழ்க்கையை அமைத்துத் தருவது நமது மகத்தான கடமையாகும்.

படை வீரா்களின் வாழ்க்கை, நம் இல்லத்தைப் பாா்த்துக் கொள்ள நாடே அணிதிரண்டு நிற்கிறது என்ற நம்பிக்கை ஒளிவீச, கொடி நாளுக்கு கொடுக்கும் நம் கொடையே அத்தாட்சி. கொடி நாளில் பெரும் தொகையை வசூலித்துத் தரும் செயலில் தமிழ்நாடு எப்போதும் முன்னோடி மாநிலமாக விளங்குகிறது. இந்த ஆண்டும் பெருமளவில் நிதி வழங்கி, வீரா்களின் குடும்பத்தினருக்கு வணக்கத்தையும் நன்றியையும் காணிக்கையாக்குவோம் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளாா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT