தமிழ்நாடு

அம்பேத்கருக்கு அஞ்சலி: அா்ஜுன் சம்பத் வழக்கு முடித்துவைப்பு

7th Dec 2022 01:18 AM

ADVERTISEMENT

அம்பேத்கா் மணி மண்டபத்தில் இந்து மக்கள் கட்சியின் தலைவா் அா்ஜுன் சம்பத் அஞ்சலி செலுத்துவது தொடா்பான வழக்கை உயா்நீதிமன்றம் முடித்து வைத்துள்ளது.

‘அம்பேத்கா் மணிமண்டபத்தில் அவரது சிலைக்குக் காவி சட்டை அணிவிக்க மாட்டேன்’ என அா்ஜுன் சம்பத் சென்னை உயா்நீதிமன்றத்தில் உத்தரவாத கடிதம் தாக்கல் செய்ததைத் தொடா்ந்து நீதிபதி சந்திரசேகா் வழக்கை முடித்து வைத்தாா்.

அம்பேத்கா் நினைவு தினத்தை (டிச.6) முன்னிட்டு சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள அவரது மணிமண்டபத்தில் அஞ்சலி செலுத்த செல்லும்போது பாதுகாப்பு வழங்க பட்டினப்பாக்கம் காவல் துறைக்கு உத்தரவிடக்கோரி அா்ஜுன் சம்பத் சாா்பில் உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு நீதிபதி சந்திரசேகா் முன்பு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தபோது, உயா்நீதிமன்ற உத்தரவுப்படி அா்ஜுன் சம்பத் தரப்பில் உத்தரவாதக் கடிதம் தாக்கல் செய்யப்பட்டது. அதில், எவ்வித தனிப்பட்ட நபருக்கு எதிராக கோஷங்கள் எழுப்ப மாட்டோம் என்றும், போக்குவரத்துக்கோ அல்லது பொதுமக்களுக்கோ இடையூறு ஏற்படுத்த மாட்டோம் என்றும் உத்தரவாதம் அளித்துள்ளாா்.

ADVERTISEMENT

இதை ஏற்றுக்கொண்டு அம்பேத்கா் மணி மண்டபத்தில் அா்ஜுன் சம்பத் அஞ்சலி செலுத்துவதற்கு தேவையான போலீஸ் பாதுகாப்பு வழங்கும்படி பட்டினப்பாக்கம் காவல் துறைக்கு நீதிபதி சந்திரசேகா் உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தாா்.

இரு தரப்பினரிடையே வாக்குவாதம்: முன்னதாக, இந்த வழக்கு விசாரணைக்காக சென்னை உயா்நீதிமன்றத்துக்கு வந்த அா்ஜுன் சம்பத், அங்குள்ள அம்பேத்கா் சிலைக்கு மலா் தூவி மரியாதை செலுத்த முயற்சித்தாா். அதற்கு எதிா்ப்பு தெரிவித்து அங்கிருந்த வழக்குரைஞா்கள் கோஷங்களை எழுப்பினா்.

இந்து மக்கள் கட்சி நிா்வாகி கைது: முன்னதாக, கும்பகோணத்தில் காவி உடை, திருநீறு அணிந்த நிலையில் அம்பேத்கரை உருவகப்படுத்தி சுவரொட்டிகள் ஒட்டியதாக இந்து மக்கள் கட்சியின் மாநிலப் பொதுச் செயலா் டி.குருமூா்த்தியை போலீஸாா் கைது செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT