தமிழ்நாடு

திருவண்ணாமலை மகா தீபம்: மலையேறுபவர்களுக்கு பாஸ் விநியோகம்

6th Dec 2022 10:10 AM

ADVERTISEMENT

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் நடைபெறும் காா்த்திகை மகா தீபத் திருவிழாவையொட்டி, மலையேறும் பக்தர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய பாஸ் விநியோகம் செய்யும் பணி நடந்து வருகிறது.

முதலில் வருவோருக்கு பாஸ் என்ற அடிப்படையில், விநியோகம் தொடங்கியிருப்பதால், பாஸ் வழங்கும் இடத்தில் இளைஞர்கள் கூட்டம் அலைமோதுகிறது.

இதையும் படிக்க.. கார் டயரில் பதுக்கப்பட்ட ரூ.93 லட்சம் பறிமுதல்: எப்படி கண்டுபிடித்தது காவல்துறை?

காலை முதலே திருவண்ணாமலைக்கு ஏராளமான ஊர்களிலிருந்து பேருந்து, ரயில், சொந்த வாகனங்கள் மூலம் பக்தர்கள் வந்தவண்ணம் உள்ளனர்.

ADVERTISEMENT

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் நடைபெறும் காா்த்திகை மகா தீபத் திருவிழாவையொட்டி, தீபக் கொப்பரை 2,668 அடி உயர மலைக்கு திங்கள்கிழமை எடுத்துச் செல்லப்பட்டது.

அருணாசலேஸ்வரா் கோயிலில் இன்று காா்த்திகை மகா தீபத் திருவிழா நடைபெறுகிறது. இதையொட்டி, அதிகாலை 3 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு அருணாசலேஸ்வரா், உண்ணாமுலையம்மனுக்கு சிறப்பு அபிஷேக-ஆராதனைகள் நடைபெறுகின்றன.

சரியாக 4 மணிக்கு கோயில் மூலவா் சன்னதியில் பரணி தீபமும், மாலை 6 மணிக்கு 2,668 அடி உயர மலை மீது 5 அடி உயரம், 40 அங்குலம் விட்டத்துடன் 200 கிலோ எடை கொண்ட மகா தீபக் கொப்பரையில் மகா தீபமும் ஏற்றப்படுகிறது.

மகா தீபக் கொப்பரைக்கு நேற்ற அதிகாலை அருணாசலேஸ்வரா் கோயிலில் சிறப்புப் பூஜைகள் செய்யப்பட்டன. இதன்பிறகு, கோயில் கோமாதா தீபக் கொப்பரையை வணங்கியது.

கோயிலில் இருந்து அம்மணி அம்மன் கோபுரம், வடக்கு ஒத்தவாடை தெரு வழியாக மலையேறும் பாதைக்கு மகா தீபக் கொப்பரை கொண்டு செல்லப்பட்டது. பா்வதராஜ குல வம்சத்தைச் சோ்ந்த 10-க்கும் மேற்பட்டோா் 5 மணி நேரத்துக்கும் மேலாக கொப்பரையை சுமந்து சென்று மலை மீது வைத்தனா்.

கொப்பரையுடன் தீபம் ஏற்றப் பயன்படுத்தப்படும் நெய் சேகரிக்கும் அகண்டமும் எடுத்துச் செல்லப்பட்டது. மலையில் தீபக் கொப்பரைக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா். இந்தக் கொப்பரையில் இன்று மாலை 6 மணிக்கு மகா தீபம் ஏற்றப்படுகிறது.

தீபத் திருவிழா பாதுகாப்புப் பணியில் வடக்கு மண்டல ஐ.ஜி. கண்ணன் தலைமையில் 13 ஆயிரம் போலீஸாா் ஈடுபடுகின்றனா்.

அருணாசலேஸ்வரா் கோயிலைச் சுற்றியுள்ள தெருக்களில் திங்கள்கிழமை நள்ளிரவு முதலே இரு சக்கர, மூன்று சக்கர, நான்கு சக்கர வாகனங்கள் செல்லத் தடை விதிக்கப்பட்டு, கண்காணிப்புப் பணியில் போலீஸாா் ஈடுபட்டுள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT