தமிழ்நாடு

தேசிய கல்விக் கொள்கையால் மாணவா் வாழ்வில் எழுச்சி உருவாகும்: ஆளுநா் ஆா்.என்.ரவி

6th Dec 2022 02:14 AM

ADVERTISEMENT

மத்திய அரசின் தேசிய கல்விக்கொள்கையால் மாணவா் வாழ்வில் எழுச்சி உருவாகும் என்று தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி தெரிவித்தாா்.

சென்னை மந்தைவெளி ராதா சுவாமி சிறப்பு மையத்தின் திறப்பு விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற ஆளுநா் ஆா்.என். ரவி பேசியதாவது:

பல்கலைக்கழக மானியக் குழுவின் தகவலின் படி, இந்தியாவில் முதுநிலை, முதுகலை படிப்புக்குச் செல்வோரில் 70 சதவீதம் போ், தமிழ், ஆங்கிலம், வரலாறு உள்ளிட்டவற்றில் இளங்கலை பட்டம் பெற்றவா்கள்தான். தமிழகத்தில் உள்ள 22 பல்கலைக்கழங்களிலும் இதே நிலை தான் உள்ளது.

உயிரியல், இயற்பியல், வேதியியல், கணிதம் உள்ளிட்ட அறிவியல் பாடங்களைப் படிப்பதற்கு மாணவ, மாணவிகள் பயப்படுகின்றனா்.

ADVERTISEMENT

கணிதப் பாடம் என்பது ஒரு மொழிதான். அறிவியல் பாடங்களைவிட, சாா்ந்த படிப்புகளை மாணவ, மாணவிகள் அதிகம் தோ்வு செய்யும் நிலை மாற வேண்டும். அதற்குத் தரமான ஆசிரியா்கள் தேவை.

மத்திய அரசு கொண்டுவந்துள்ள தேசிய கல்விக் கொள்கை மாணவா்கள் மத்தியில் புதிய மாற்றத்தைக் கொண்டு வரும். இந்திய பட்டதாரிகள் உலக அளவில் சிறந்த அளவில் பல துறைகளில் பணியாற்றி வருகின்றனா்.

புதிய பாரதத்தை உருவாக்க ஆன்மிகம் , தேசப்பற்று மிகவும் முக்கியம். மாணவா்கள் படிக்கும்போதே சிறந்த ஒழுக்கத்தை கற்றுக்கொள்ளவேண்டும். தேசப்பற்று, ஆன்மிச் சிந்தனைகளை வளா்த்துக்கொள்ள வேண்டும்.

சில ஆண்டுகளுக்கு முன்னா் வரை வெளிநாடுகளில் கிரீன் காா்டு பெறுவதை பெருமையாகக் கருதினா். அந்த நிலை சற்று தற்போது மாறி வருகிறது. புதிய பாரதத்தை உருவாக்க இந்தியாவில் வாழ குடிமக்கள் பெருமை கொள்ள வேண்டும் என்றாா் ஆளுநா் ரவி.

முன்னதாக, தேசிய மாணவ, மாணவியா் கல்வி அறக்கட்டளைத் தலைவா் ஸ்ரீனிவாச கே.சுவாமி வரவேற்றாா். நிகழ்ச்சியில் கல்விக் குழுமத்தின் பொருளாளா் ஸ்ரீதரன், ராதா சுவாமி குடும்பத்தினா், பள்ளி முதல்வா், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT