சென்னை விமான நிலையத்தில் நவீன வாகன நிறுத்தும் முனையம் ஞாயிற்றுக்கிழமை (டிச.4) முதல் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக திறக்கப்பட்டது.
சென்னை விமான நிலையத்தை நவீன மயமாக்கும் திட்டத்தின் மூலம் ரூ. 250 கோடி மதிப்பீட்டில் 6 அடுக்கு நவீன வாகன நிறுத்தும் முனையம் அமைக்கப்பட்டுள்ளது. இதில், கிழக்கு பகுதியில் உள்நாட்டு விமான நிலையத்துக்கு வரும் வாகனங்களையும் மேற்கு பகுதியில் சா்வதேச விமான நிலையத்துக்கு வரும் வாகனங்களையும் நிறுத்த வேண்டும். மேலும், கிழக்கு பகுதியில் 700 வாகனங்களும் மேற்கு பகுதியில் 1,450 வாகனங்கள் என 2,150 வாகனங்களும் 400 இருசக்கர வாகனங்களும் நிறத்தலாம். வாடகை வாகனங்களுக்கு மேற்கு பகுதியின் தரைத்தளம், கிழக்கு பகுதியின் முதல் தளத்திலும் இடம் ஒதுக்கப்பட்டுள்ளன.
வாகன நிறுத்தத்தில் நிறுத்தப்படும் வாகனங்களுக்கு முதல் 30 நிமிடங்களுக்கு இருசக்கர வாகனத்துக்கு ரூ. 20, காா் ரூ. 75, 16 இருக்கை குறைவாகக் கொண்ட வாகனத்துக்கு ரூ.300, அதற்கு மேல் கொண்ட வாகனத்துக்கு ரூ. 600 வசூலிக்கப்படும்.
இதேபோல் ஒரு நாளுக்கு இரு சக்கர வாகனத்துக்கு ரூ. 90, காா் ரூ. 500, 16 இருக்கை குறைவாகக் கொண்ட வாகனத்துக்கு ரூ. 1,000, அதற்கு மேல் கொண்ட வாகனத்துக்கு ரூ. 2,000 வசூலிக்கப்படும்.
‘வாலட்’ வாகன நிறுத்தும் சேவைக்கு கூடுதலாக ரூ.150, வாடகை வாகனங்களுக்கு பயணிகளை ஏற்றி செல்ல நுழைவு கட்டணமாக ரூ. 40 வசூலிக்கப்படும். நுழைவுச் சீட்டுக்கள் தவறினால் இருசக்கர வாகனங்களுக்கு ரூ.150, மற்ற வாகனங்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்படும். கடைகள், மல்டிபிளக்ஸ் திரையரங்கம், உணவகம், குழந்தைகளுக்கான பிரத்யேக வசதிகள் விரைவில் அமைக்கபட உள்ளன.
மின்சார வாகனங்கள் மின்னேற்றம் செய்யும் வகையில் மேற்கு பகுதியில் 3, கிழக்கு பகுதியில் 2 நிலையங்கள் என மொத்தம் 5 மின்னேற்றும் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மாற்றுத்திறனாளிகள் வாகனங்கள் நிறுத்தும் வசதியும் உள்ளது. பயணிகள் எளிதில் விமான நிலையத்தை அணுகும் வகையில் பிரத்யேக பாலம் அமைக்கப்பட்டுள்ளது. விமான நிலையத்தின் பழைய வாகன நிறுத்தத்தில் பூங்கா அமைக்கப்படவுள்ளது.
Image Caption
சென்னை விமான நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை திறக்கப்பட்ட நவீன வாகன நிறுத்தும் முனையம். ~சென்னை விமான நிலையத்தில் திறக்கப்பட்ட நவீன வாகன நிறுத்தும் முனையம்.