தமிழ்நாடு

மோடி எதிர்ப்பு இப்போது இல்லை: டி.டி.வி.தினகரன்

DIN

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உயிர்த்தோழி வி.கே.சசிகலாவின் சகோதரி மகனான டி.டி.வி.தினகரன், 1999 மக்களவைத் தேர்தலில் பெரியகுளம் மக்களவைத் தொகுதியில் வெற்றி பெற்றவர். ஜெயலலிதாவால் 2004-இல் மாநிலங்களவை உறுப்பினராகவும், அதிமுக பொருளாளராகவும் நியமிக்கப்பட்டவர். ஜெயலலிதா மறைவுக்குப் பின் சசிகலாவால் அதிமுக துணைப் பொதுச் செயலராக நியமிக்கப்பட்டவர். பின்னர், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தை (அமமுக) உருவாக்கி 2017-இல் ஆர்.கே.நகர் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் இரட்டை இலை, உதயசூரியன் சின்னங்களை வீழ்த்தி சுயேச்சை சின்னத்தில் 50.32 சதவீத வாக்குகளுடன் வெற்றி வீரராக வலம் வந்தவர். அமமுக நிறுவன பொதுச் செயலராக இருக்கும் டி.டி.வி.தினகரன், "தினமணி' தலைமை நிருபர் பீ.ஜெபலின் ஜானுக்கு அளித்த சிறப்பு நேர்காணல்: 
இபிஎஸ், ஓபிஎஸ், சசிகலா, தினகரன் உள்ளிட்டோரை கொண்ட ஒருங்கிணைந்த அதிமுக சாத்தியமா?
ஜெயலலிதாவின் உண்மையான தொண்டர்கள் ஒரே அணியாகவே செயல்பட விரும்புவார்கள். யார் மீதும் தனிப்பட்ட முறையில் எனக்கு கோபம், வெறுப்பு இல்லை. சிலரின் சுயநலம், அச்சம்தான் ஒருங்கிணைந்த அதிமுக உருவாக தடையாக உள்ளது.
2021 பேரவைத் தேர்தலில் அதிமுக தோல்விக்கு வன்னியர்களுக்கான 10.5 சதவீத இடஒதுக்கீடுதான் காரணமா?
நிறைய காரணங்கள் உள்ளன. ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்திய பின் உள்ஒதுக்கீடு கொடுத்திருக்கலாம். அதை செய்யாமல் அறிவிக்கப்பட்ட இந்த ஒதுக்கீட்டுக்கு எதிராக நீதிமன்றம் சென்றால் தடை விதிக்கப்படும், வன்னியர் வாக்குகளைக் குறிவைத்து, அதை ஏமாற்றி பெறவே இதுபோன்ற நாடகத்தை எடப்பாடி பழனிசாமி நடத்துவதாக வடதமிழகத்தில் பேரவைத் தேர்தல் பிரசாரத்தின்போதே நான் தெரிவித்தேன். 
இதனால்தான், தென்தமிழகத்தில் அதிமுக வலுவிழந்துவிட்டது. பசும்பொன்னுக்குகூட எடப்பாடி பழனிசாமியால் வர முடியாததற்கு இதுவும் ஒரு காரணம்.
ஜாதிரீதியாக அதிமுக பிளவுபட்டு நிற்கிறதா?
ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தைச் சார்ந்தவர்கள் மட்டுமே கட்சியில் முன்னிலைப்படுத்தப்படுவதால் அதிமுக ஒரு வட்டாரக் கட்சியாக குறுகி வருகிறது. மத்திய அரசின் துணை, பண பலம் உள்ளிட்டவை இருந்ததால்தான் 75 பேரவைத் தொகுதிகளில் அதிமுக வெற்றி பெற்றது.
இபிஎஸ்-ஓபிஎஸ் முரண்பட்டுள்ளதால் இரட்டை இலை மீண்டும் முடங்கும் வாய்ப்பு உள்ளதா?
உச்சநீதிமன்றத்தில் நடக்கும் வழக்கில் இபிஎஸ்-க்கு ஆதரவாக தீர்ப்பு வந்தாலும்கூட தேர்தல் ஆணையம்தான் இரட்டை இலை சின்னம் தொடர்பாக முடிவு எடுக்க முடியும். சாதிக் அலி வழக்கு, அதிமுகவின் அடிப்படை சட்ட விதிகளின்படி பொருந்தாது. ஜெயலலிதா-திருநாவுக்கரசர் (1997) வழக்கின்படிதான் தேர்தல் ஆணையம் முடிவு எடுக்க அதிக வாய்ப்பு உள்ளது. இப்போது இரட்டை இலை சின்னம் கிடைக்க ஒருங்கிணைப்பாளர்-இணை ஒருங்கிணைப்பாளர் கையொப்பம் வேண்டும். அதிமுக பொதுச் செயலராக சசிகலா இருக்கும்போது 122 எம்.எல்.ஏ.க்கள், 98 சதவீத கட்சி நிர்வாகிகள் ஆதரவு இருந்தபோதும்கூட தேர்தல் நேரத்தில் விசாரணை நடத்த நேரம் இல்லை எனக் கூறி இரட்டை இலையை தேர்தல் ஆணையம் முடக்கியது. அதுபோல இப்போதும் வாய்ப்பு உள்ளது.
தமிழகத்தில் பிரதான எதிர்க்கட்சி அதிமுகவா?, பாஜகவா?
எதிர்க்கட்சித் தலைவர் இபிஎஸ், துணைத் தலைவர் ஓபிஎஸ் ஆகியோரின் சுயநலம் காரணமாக அதிமுக செயல்படாமல் உள்ளது. எல்லா கட்சிகளையும் முந்திக்கொண்டு போராட்டம் அறிவிப்பதாலும், பிரதான எதிர்க்கட்சி தாங்கள்தான் எனத் தொடர்ந்து கூறுவதால் மட்டுமே பாஜக வளர்ந்துவிட்டதாக கருதிவிட முடியாது. தேர்தலில் கிடைக்கும் வாக்கு சதவீதத்தை வைத்துதான் பாஜக வளர்ந்துள்ளதா என்பது தெரியும்.
தமிழகத்தில் ஹிந்து உணர்வு, ஒற்றுமை அதிகரித்து வருகிறதா?
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், விசிக தலைவர் தொல்.திருமாவளவன் போன்றவர்களால்தான் இந்தச் சூழல் உருவாகியுள்ளது. மதச்சார்பற்ற கட்சிகள் என்றால் சிறுபான்மையினர் வாக்குகளுக்காக, பெரும்பான்மையினரின் மத உணர்வுகளை, மனங்களைக் காயப்படுத்த வேண்டும் என்பது பொருள் அல்ல. ஹிந்து மதத்தை தேவையின்றி தாக்கிப் பேசுவதால் ஹிந்து உணர்வு இயல்பாகவே அதிகரித்து வருகிறது.
தமிழகத்தில் பாஜக வளர்ந்திருக்கிறதா?
பாஜகவுக்கு இப்போது 4 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். விவசாயத்தைப் பாதிக்கும் மீத்தேன், ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட திட்டங்களை வலுக்கட்டாயமாக திணிப்பதை மத்திய அரசு நிறுத்தியுள்ளது. 
தமிழகத்துக்கான கட்சி போல பாஜக இப்போது அரசியல் செய்கிறது. ஸ்டாலின், திருமாவளவனால் பாஜக வளர்ந்து வருகிறது. இருப்பினும் தேர்தல் முடிவில்தான் எவ்வளவு வளர்ந்திருக்கிறது என்பது தெரியும்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறுவதுபோல தமிழகத்தில் அரசியல் தலைமைக்கு வெற்றிடம் உள்ளதா?
நிச்சயமாக உள்ளது. அரசியல் நோக்கர்கள், வல்லுநர்கள் கருணாநிதியின் வெற்றிடத்தை ஸ்டாலின் நிரப்பிவிட்டதாகவும், ஜெயலலிதாவின் வெற்றிடத்தை யாரும் நிரப்பவில்லை என்றும் கூறுகின்றனர். ஸ்டாலின் வெற்றி பெற்று ஆட்சி அமைத்துவிட்டதால் மட்டுமே கருணாநிதியின் வெற்றிடம் நிரப்பப்பட்டுவிட்டதாக கருத முடியாது. எம்ஜிஆர் மறைவுக்குப் பின் 1991, 2001, 2011 என மூன்று முறை ஜெயலலிதா ஆட்சி அமைத்தாலும், 2016-இல் தான் எம்ஜிஆரின் வெற்றிடத்தை, ஜெயலலிதா நிரப்பினார் என்பதே உண்மை. அப்போதுதான் அனைத்துத் தரப்பு மக்களும் அவரை ஏற்றுக்கொண்டார்கள்.
அதிமுகவின் வெற்றிடம் குறித்து என்ன நினைக்கிறீர்கள்?
இப்போது மக்களவைத் தேர்தல், பேரவைத் தேர்தல், ஊரக, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்கள் ஆகியவற்றில் அதிமுக தோல்வியைத்  தழுவியுள்ளது. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் இபிஎஸ் உள்பட பல அமைச்சர்களின் சொந்த ஊரில்கூட அதிமுக படுதோல்வி அடைந்தது. எனவே, அமித் ஷாவின் கூற்று உண்மைதான்.
2024 மக்களவைத் தேர்தலில் பிரதமர் வேட்பாளராக மோடியை ஏற்றுக்கொள்ளும் வகையில் சில சமிக்ஞைகளை கொடுத்து வருகிறீர்களே?
மோடி உள்பட யார் மீதும் எனக்கு தனிப்பட்ட முறையில் வெறுப்பு இல்லை. 2014 மக்களவைத் தேர்தலில் மோடி எதிர்ப்பு அலை இல்லை. தமிழகத்தின் மீது பாராமுகமாக இருந்தது, பிற மாநிலங்களுக்கான உத்தியை இங்கு கையாண்டது, இபிஎஸ் உடன் கூட்டணி அமைத்தது ஆகியவற்றால் 2019-இல் மோடி எதிர்ப்பு அலை உருவானது. ஆனால், பாஜகவின் அணுகுமுறை மாறியிருக்கிறது. எனவே, மோடி எதிர்ப்பு அலை இப்போது இல்லை.
சசிகலா மற்றும் உங்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்த பாஜகவோடு உறவு வைத்தால் அமமுக தொண்டர்கள் ஏற்றுக்கொள்வார்களா?
2021 பேரவைத் தேர்தலில்கூட அதற்கான வாய்ப்பு இருந்தது. இதுவெல்லாம் அமமுக தொண்டர்களுக்கு தெரியும். திமுக எதிர்ப்பு என்ற புள்ளியில் யாருடன் கூட்டணி அமைத்தாலும் தொண்டர்கள் ஏற்றுக்கொள்வார்கள்.
பாமக தலைவர் அன்புமணிகூட 2026 பேரவைத் தேர்தலில் பாமக ஆட்சி எனக் கூறும்போது, 2024 மக்களவைத் தேர்தலில் திமுகவை வீழ்த்த அணில் போல உதவத் தயார் என நீங்கள் கூறுவது உங்களது பிம்பத்தை குறைப்பது போல தெரியவில்லையா?
2016 பேரவைத் தேர்தலிலேயே அன்புமணி தலைமையில் பாமக தனித்துப் போட்டியிட்டு சோதனை செய்துவிட்டது. 
இப்போது தங்களின் வாக்கு வங்கியை உயர்த்தவே இதுபோன்ற உத்தியைக் கடைப்பிடிக்கின்றனர். 2019 மக்களவைத் தேர்தல், 2021 பேரவைத் தேர்தல் ஆகியவற்றில் அமமுக தோல்வி அடைந்ததால் எதார்த்தத்தை புரிந்துகொண்டு தேர்தல் வெற்றியை மையமாக வைத்து 2024-இல் கூட்டணியில் போட்டியிட முடிவு செய்துள்ளோம். 2026 பேரவைத் தேர்தல் குறித்து பின்னர் சிந்திப்போம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

கேரளத்தில் வாகனப் பேரணியில் ஈடுபட்டுள்ள பிரதமர் மோடி!

கேரளத்தில் காங்கிரஸை எதிர்த்து போட்டியிடும் இந்திய கம்யூ. -சசி தரூருக்கு கண்டனம்!

ஆகாயம் என்ன நிறம்? கியாரா அத்வானி!

தென் இந்தியாவின் உ.பி., தமிழ்நாடு!

பாபா ராம்தேவ் நேரில் ஆஜராக உச்சநீதிமன்றம் உத்தரவு

SCROLL FOR NEXT