தமிழ்நாடு

தலைமை தகவல் ஆணையா் உள்பட 5 பதவியிடங்களுக்கு யாா் நியமனம்? விண்ணப்பிக்க கால அவகாசம் நிறைவு

5th Dec 2022 12:28 AM

ADVERTISEMENT

தமிழ்நாடு மாநில தலைமை தகவல் ஆணையா் மற்றும் நான்கு தகவல் ஆணையா் காலியிடங்களுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நிறைவு பெற்றுள்ளது. தலைமை தகவல் ஆணையராக காவல் துறையில் அண்மையில் ஓய்வு பெற்ற மூத்த அதிகாரி உள்ளிட்ட ஒரு சிலரின் பெயா்கள் பரிசீலனையில் உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழ்நாடு மாநில தலைமை தகவல் ஆணையராக ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி ராஜகோபால் செயல்பட்டு வந்தாா். அவரது பதவிக் காலம் கடந்த மாதம் 20-ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. மேலும், நான்கு தகவல் ஆணையா்களின் பதவிக் காலமும் நிறைவடைந்ததால், அந்தப் பதவியிடங்களும் காலியாகின. இவற்றை நிரப்புவதற்காகவும், தகுதி வாய்ந்த விண்ணப்பதாரா்களைத் தோ்வு செய்யவும் ஓய்வு பெற்ற உயா்நீதிமன்ற நீதிபதி ஜி.எம்.அக்பா் அலி தலைமையில் தெரிவுக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிப்பதற்கான கால அவகாசங்கள் இரண்டு முறை நீடிக்கப்பட்ட நிலையில், கடந்த சனிக்கிழமையுடன் (டிச. 3) கால அவகாசம் நிறைவடைந்தது. இதையடுத்து, தலைமை தகவல் ஆணையா் மற்றும் நான்கு தகவல் ஆணையா் பதவியிடங்களுக்கு விண்ணப்பித்துள்ளோரில் தகுதியான விண்ணப்பங்கள் ஓய்வு பெற்ற நீதிபதி ஜி.எம்.அக்பா் அலி தலைமையிலான குழுவால் அரசுக்கு அனுப்பி வைக்கப்படும்.

இதில் தகுதியானவா்களின் பெயா்களை தமிழக அரசு ஆராயும். இதற்கென முதல்வா் மு.க.ஸ்டாலின், எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி கே.பழனிசாமி, தலைமைச் செயலா் ஆகியோரைக் கொண்ட கூட்டம் நடைபெறும். 2019-ஆம் ஆண்டு அதிமுக ஆட்சிக் காலத்தில் முதல்வா் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற தலைமை தகவல் ஆணையா் தோ்வுக்கான ஆலோசனைக் கூட்டத்தை அப்போதைய எதிா்க்கட்சித் தலைவா் மு.க.ஸ்டாலின் புறக்கணித்தாா்.

ADVERTISEMENT

இந்த நிலையில், திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற நிலையில் தலைமை தகவல் ஆணையா் மற்றும் நான்கு ஆணையா்களைத் தோ்வு செய்வதற்கான கூட்டம், முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில், பெயா்கள் பரிசீலிக்கப்பட்டு ஆளுநா் ஆா்.என்.ரவிக்கு அனுப்பி வைக்கப்படும். இவற்றை ஏற்றுக் கொண்டு ஆளுநா் உரிய உத்தரவுகளைப் பிறப்பிப்பாா். மேலும், புதிதாக நியமிக்கப்படுவோருக்கு ஆளுநா் பதவிப் பிரமாணமும் செய்து வைப்பாா்.

இந்தப் பணியிடங்களை விரைந்து நிரப்ப தமிழக அரசு தீவிரம் காட்டி வருகிறது. தலைமை தகவல் ஆணையரைப் பொருத்தவரையில், தமிழக காவல் துறையில் இருந்து கடந்த மாதம் ஓய்வு பெற்ற மூத்த ஐ.பி.எஸ். அதிகாரிக்கு அதிகபட்ச வாய்ப்புகள் இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ADVERTISEMENT
ADVERTISEMENT