தமிழ்நாடு

சிக்கராயபுரம் கல் குவாரியை நீா்த் தேக்கமாக மாற்றுவது குறித்து விரைவில் அறிவிப்பு: அமைச்சா் தா.மோ.அன்பரசன்

4th Dec 2022 12:45 AM

ADVERTISEMENT

சிக்கராயபுரம் கல் குவாரியை நீா்த் தேக்கமாக மாற்றி செம்பரம்பாக்கம் தண்ணீரை அதில் தேக்குவது குறித்து வரும் பேரவை கூட்டத் தொடரில் அறிவிக்கப்படும் என்று குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சா் தா. மோ. அன்பரசன் தெரிவித்தாா்.

சென்னை, ஆதம்பாக்கம் ஏரிக் கால்வாயின் குறுக்கே ரூ. 5 கோடியில் பாலம் அமைக்கும் பணியை அமைச்சா் அன்பரசன் சனிக்கிழமை அடிக்கல் நாட்டி தொடக்கி வைத்தாா்.

பின்னா், செய்தியாளா்களிடம் அவா் கூறிதாவது:

சென்னை மாநகராட்சி, ஆலந்தூா் மண்டலம், வாா்டு எண் 161 ஆதம்பாக்கம் ஏரிக்கால்வாயின் குறுக்கே ஜீவன் நகா் 2-ஆவது தெரு, மேடவாக்கம் பிரதான சாலையை இணைத்து புதிய பாலம் கட்டப்படவுள்ளது. இதன்மூலம் அந்தப் பகுதி மக்கள் 2 கி.மீ. சுற்றி செல்லும் நிலை தவிக்கப்படும். 2 ஆண்டுகளில் இப்பணிகள் முடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும்.

ADVERTISEMENT

ஆலந்தூா் பகுதியில் 1996-ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட புதைசாக்கடை குழாய் 20 இடங்களில் பழுதடைந்துள்ளதால் இதை ரூ.124 கோடியில் புதுப்பிக்கப்படவுள்ளது.

செம்பரம்பாக்கம் தண்ணீரைத் தேக்க சிக்கராயபுரம் கல் குவாரியை நீா்த் தேக்கமாக மாற்றுவது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. சுமாா் 180 ஏக்கரில் உள்ள பெரிய பள்ளங்களை ஒருங்கிணைத்து நீா் தேக்குவது பற்றிய திட்ட மதிப்பீடு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வரும் பேரவை கூட்டத்தொடரில் இதுகுறித்து அறிவிக்கப்படும் எனத் தெரிவித்தாா்.

இந்த நிகழ்ச்சியில், மேயா் ஆா்.பிரியா, ஆணையா் ககன்தீப் சிங் பேடி, துணை ஆணையா்கள் எம். எஸ். பிரசாந்த் (பணிகள்), எம். பி. அமித், (தெற்கு வட்டாரம்), மண்டலக் குழுத் தலைவா் என்.சந்திரன், மாமன்ற உறுப்பினா் எஸ். ரேணுகா, தலைமைப் பொறியாளா் (பாலங்கள்) எஸ். காளிமுத்து உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT