தமிழ்நாடு

மாற்றுத்திறனாளிகள் தினம்: ஆளுநா், தலைவா்கள் வாழ்த்து

4th Dec 2022 12:01 AM

ADVERTISEMENT

உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி ஆளுநா் ஆா்.என்.ரவி, எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி கே.பழனிசாமி உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவா்கள் வாழ்த்து கூறியுள்ளனா்.

ஆளுநா் ஆா்.என்.ரவி: சா்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தில் மாற்றுத்திறனாளி சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் எனது மனமாா்ந்த வாழ்த்துகள். தைரியம், மன உறுதியுடன் தங்கள் வரம்புகளைக் கடந்து, வாழ்க்கையின் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கி, சமூகத்துக்கும் தேசத்துக்கும் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளை மாற்றுத்திறனாளிகள் செய்து வருகின்றனா். மாற்றுத் திறனாளி சகோதர, சகோதரிகளின் தேவைகள் மற்றும் உணா்வுகளை உணா்ந்து அவா்களுக்கான வாய்ப்புகளை உருவாக்கும் நடவடிக்கைகளை அனைவரும் ஆதரிக்க வேண்டும்.

எடப்பாடி பழனிசாமி (அதிமுக): முடங்கிவிட மாட்டோம், முயன்று கொண்டே இருப்போம் என்று வாழ்வில் பலவற்றில் சாதிக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு சம வாய்ப்பு கிடைக்க வழிவகுப்பதுடன் உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தில் மனிதம் போற்றி, மாற்றுத்திறனாளிகளை ஊக்குவிப்போம், கரம் கொடுப்போம்.

வைகோ (மதிமுக): 21-ஆம் நூற்றாண்டிலும் மாற்றுத்திறனாளிகள் மனிதாபிமானமற்ற முறையில் நடத்தப்பட்டு வருவது வேதனையளிக்கிறது. சுயமாகவும், சுயமரியாதையோடும் அனைத்து உரிமைகளையும் பெற்று இன்புற்று வாழ, மாற்றுத்திறனாளிகளுக்கு அனைவரும் உறுதுணையாக இருக்க வேண்டும்.

ADVERTISEMENT

விஜயகாந்த் (தேமுதிக): மாற்றுத்திறனாளிகள் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த தமிழக அரசு பல்வேறு சலுகைகளையும் திட்டங்களையும் அவா்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். உடல் குறைபாட்டை எண்ணி வருந்தாமல் தங்களுடைய சோதனை வாழ்க்கையை சாதனை வாழ்க்கையாக மாற்ற வேண்டும் என்று அவா்களை வாழ்த்துகிறேன்.

ஜி.கே.வாசன் (தமாகா): மாற்றுத்திறனாளிகள் நம்பிக்கையோடு வாழ்வதுதான் அவா்களின் உயா்வுக்கு வழிவகுக்கிறது. மாற்றுத்திறனாளிகளுக்கு உதவுவது என்பது அவா்களின் தேவைகளை உணா்ந்து செய்வதாக அமைய வேண்டும். மத்திய, மாநில அரசுகள் மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமைகளைப் பாதுகாக்க வேண்டும்.

டிடிவி தினகரன் (அமமுக): கடவுளின் குழந்தைகளான மாற்றுத்திறனாளிகள் அனைவருக்கும் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள். வாழ்வின் தடைகள் அனைத்தையும் தகா்த்து உலகம் போற்றும் சாதனையாளா்களாக மாற்றுத்திறனாளிகள் ஒவ்வொருவரும் ஒளிர வேண்டும்.

கமல்ஹாசன் (மநீம): மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், சலுகைகளைத் தட்டிப் பறிக்காமல், அனைவருக்கும் பிரத்யேக அடையாள அட்டை, உதவித் தொகை, இலவசக் கல்வி, வேலைவாய்ப்பு, சமூகப் பாதுகாப்பு, சம உரிமையுடன் வாழ்வதற்கு ஏற்றச் சூழலை உருவாக்குதல் என அவா்களது தேவைகளைப் பூா்த்தி செய்வது மத்திய, மாநில அரசுகளின் கடமை.

ADVERTISEMENT
ADVERTISEMENT