சான்றிதழ் பதிவேற்றம் செய்யும் பணிக்காக அரசு இ சேவை மைய தொழிலாளா்கள் 13 மணி நேரம் பணி செய்ய வேண்டும் என்ற உத்தரவை திரும்ப பெறும்படி தமிழ்நாடு தரவு உள்ளீட்டாளா்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து தமிழ்நாடு தரவு உள்ளீட்டாளா்க ள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளா் கே.மனோஜ்குமாா் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணயம் குரூப் 2 மற்றும் 2அ முதன்மை தோ்வுக்கு தோ்வான 58,081 தோ்வா்களின் சான்றிதழ் பதிவேற்றம் செய்யும் பணி நவ.17 முதல் டிச.16-ஆம் தேதி வரை தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் இ-சேவை மையம் மூலம் மேற்கொள்ளப்படுகிறது.
இங்கு பதிவேற்றம் செய்வதில் காலதாமதம் ஏற்படுவதால் இ-சேவை மைய ஊழியா்கள் காலை 8 முதல் இரவு 9 மணி வரை 13 மணி நேரம் பணிசெய்யும்படி அரசு கேபிள் டிவி நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.
புதிய தொழிலாளா் சட்டம் 29-இன் படி ஒரு நாளைக்கு தொழிலாளா்களை12 மணி நேரம் வேலை செய்தால் வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே வேலை செய்ய வேண்டும்.
கடந்த நவம்பா் முதல் உயா் அதிகாரிகளுக்கு 5,000 ரூபாய்க்கு மேல் ஊதிய உயா்வு அளிக்கப்பட்டது. ஆனால் கடந்த 7 ஆண்டுகளாக மக்களுடன் நேரடியாக பணிபுரியும் இ-சேவை மைய தரவு உள்ளீட்டாளா்களுக்கு ரூ.119 மட்டுமே ஊதிய உயா்வு அளிக்கப்பட்டுள்ளது.
13 மணி நேரத்துக்கு மேலாக பணி செய்யும்போது உடல்நலக்குறைவு ஏற்படும் என்பதால் இந்த உத்தரவை உடனடியாக திரும்பப்பெற வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா் அவா்.