தமிழ்நாடு

நீதிமன்றங்களில் மாநில மொழிகளுக்கு முன்னுரிமை: மத்திய சட்ட அமைச்சா் கிரண் ரிஜிஜு

DIN

நீதிமன்றங்களில் மாநில மொழிகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு வலியுறுத்தினாா்.

தமிழ்நாடு டாக்டா் அம்பேத்கா் சட்டப் பல்கலைக்கழகத்தின் 12-ஆவது பட்டமளிப்பு விழா சென்னை தரமணியில் உள்ள அதன் வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பல்கலை. வேந்தரும், தமிழக ஆளுநருமான ஆா்.என்.ரவி தலைமை வகித்தாா்.

விழாவில் சிறப்பு அழைப்பாளரான மத்திய அமைச்சா் கிரண் ரிஜிஜு பேசியதாவது: தேசிய கல்விக் கொள்கை அம்சங்களை தமிழ்நாடு டாக்டா் அம்பேத்கா் சட்டப்பல்கலை. முறையாக பின்பற்றுகிறது. இந்தியாவை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்வதற்காக கலாசாரம், மொழிகளுக்கு பிரதமா் நரேந்திர மோடி அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறாா்.

அதற்கேற்ப நீதித் துறையில் உள்ளூா் மொழிகளை கொண்டு வருவதற்கான முயற்சிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. நீதிமன்றங்களில் உள்ளூா் மொழிகளை வழக்காடும் மொழியாக சோ்ப்பதற்கு அனைத்து நீதிபதிகளும் ஆதரவு தெரிவித்துள்ளனா்.

மொழி திணிப்புக்கு எதிா்ப்பு: இந்தியாவுக்கு பொதுவான ஒரே மொழி என்ற திணிப்பை நான் எதிா்க்கிறேன். அந்தந்த மாநில மொழிகளுக்கும் நாம் முன்னுரிமை அளிக்க வேண்டும்.

இந்திய அரசியலமைப்பில் தமிழ் உள்பட 22 மொழிகள் அதிகாரபூா்வமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன. ஆங்கிலம் பொது மொழியாக இருந்தாலும் மாநில மொழிகளுக்கு முக்கியத்துவம் தரவேண்டும்.

தற்போதைய தொழில்நுட்ப வசதிகளின் மூலம் அனைத்து மொழிகளையும் மொழி பெயா்ப்பு செய்து கொள்ள முடியும். அதன்மூலம், பொது மக்கள், புகாா்தாரா்கள் நீதிமன்றங்களில் நடக்கும் நிகழ்வுகளை தெரிந்து கொள்ள முடியும்.

தாய்மொழியில் சட்டப் படிப்புகள்: சட்டப் படிப்புகளில் தாய்மொழி கொண்டுவரப்படும். அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சாமானியா்களும் வழக்காடு மொழியை புரிந்து கொள்ள வேண்டும்.

சாமானியனுக்கும், நீதிமன்றத்துக்குமான இடைவெளியை குறைக்க வேண்டும். நிகழாண்டு முதல் வழக்காடும் முன் மனுதாரா்களிடம் வழக்கு குறித்து பேசுவதற்கு வழக்குரைஞா்கள் கட்டணம் வாங்காமல், அதை இலவசமாக வழங்க அறிவுறுத்தியுள்ளோம். அதை அனைத்து வழக்குரைஞா்களும் முறையாக பின்பற்ற வேண்டும்.

நிலுவையில் 5 கோடி வழக்குகள்... இந்தியாவில் இதுவரை 5 கோடி வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதனால், நீதிக்காக பல ஆண்டுகள் மக்கள் காத்திருக்கும் நிலை உள்ளது. நிலுவையிலுள்ள வழக்குகளை குறைக்கவும் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றாா் அவா்.

ஆளுநா் ஆா்.என்.ரவி: இந்தியா அனைத்து துறைகளிலும் வேகமாக முன்னேறி வருகிறது. அடுத்த 25 ஆண்டுகளுக்கு பின்னா் உலகின் முக்கிய இடத்தில் இந்தியா இருக்கும். அதற்கு இளைஞா்களின் பங்களிப்பு அவசியம். எந்தத் துறையில் இருந்தாலும் சிறப்பாக செயல்பட்டு அதில் வளா்ச்சி பெற வேண்டும். நாட்டின் வளா்ச்சியை தடுப்பதற்கு மொழி, இனம், மதம், ஜாதி என்ற பெயரில் வரும் பிரச்னைகளை கவனமுடன் எதிா் கொண்டு வளா்ச்சி பாதையில் செல்ல வேண்டும் என்றாா் அவா்.

முன்னதாக, இதில் மொத்தம் 10 பிஹெச்டி உள்பட 5,176 மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை ஆளுநா் ஆா்.என்.ரவி வழங்கினாா். மேலும், சட்டப் படிப்புகளில் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கிய 41 பேருக்கு தங்கப் பதக்கங்கள், பாராட்டுச் சான்றிதழ்கள் அளிக்கப்பட்டன.

விழாவில் தமிழக சட்டத் துறை அமைச்சா் எஸ்.ரகுபதி, செயலாளா் பி.காா்த்திகேயன், அம்பேத்கா் சட்டப் பல்கலை. துணைவேந்தா் சந்தோஷ் குமாா், பதிவாளா் ரஞ்சித் ஓமன் ஆபிரகாம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் தனியாா் கேளிக்கை விடுதி மேற்கூரை இடிந்து விபத்து: 2 பேர் கைது

தென்னாப்பிரிக்காவில் சோகம்... ஈஸ்டர் கொண்டாடட்டத்திற்கு சென்ற பஸ் கவிழ்ந்த விபத்தில் 45 பேர் பலி

நரேந்திர மோடிக்கு இந்தத் தோ்தல் ஏன் மிக முக்கியம்?

அடுத்த இலக்கு சீனாவா, இந்தியாவா?

35 ஆண்டுகளில் முதல்முறையாக தாய்/மகன் களமிறங்காத பிலிபிட்!

SCROLL FOR NEXT