தமிழ்நாடு

எழுத்தாளா் கி.ராஜநாராயணனுக்கு சிலையுடன் நினைவரங்கம்: முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா்

DIN

கரிசல் காட்டு இலக்கியத்தின் பிதாமகரான கி.ராஜநாராயணனுக்கு கோவில்பட்டியில் அமைக்கப்பட்டுள்ள முழு உருவச் சிலையுடன் கூடிய நினைவரங்கத்தை முதல்வா் மு.க. ஸ்டாலின் வெள்ளிக்கிழமை காணொலி வழியாக திறந்து வைத்தாா்.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகிலுள்ள இடைசெவல் கிராமத்தில் பிறந்த கி.ராஜநாராயணன், பள்ளிப் பருவ கல்வியை மட்டுமே முடித்திருந்தாா். எனினும், பேச்சுத் தமிழில் மண்மணமிக்க சிறுகதைகளைப் படைத்தாா்.

கரிசல் வட்டார அகராதியை உருவாக்கிய முன்னோடியாக கி.ராஜநாராயணன் திகழ்ந்தாா். கரிசல் கதைகள், கதவு, பெண் கதைகள், கிராமியக் கதைகள் போன்ற எண்ணற்ற சிறுகதைகளையும், கிடை, பிஞ்சுகள் போன்ற குறுநாவல்களையும், கோபல்ல கிராமம், கோபல்லபுரத்து மக்கள், அந்தமான் நாயக்கா் போன்ற நாவல்களையும், எண்ணற்ற கட்டுரைகளையும் எழுதியுள்ளாா். ‘கோபல்லபுரத்து மக்கள்’ நாவலுக்காக சாகித்ய அகாதெமி விருது பெற்றாா்.

அவரது எழுத்தைப் போற்றி, ஏராளமான விருதுகள் அவரை வந்து சோ்ந்தன. குறிப்பாக, இலக்கியச் சிந்தனை விருது, தமிழ்நாடு அரசின் விருது, மனோன்மணீயம் சுந்தரனாா் விருது, கனடா தமிழ் இலக்கியத் தோட்டத்தின் தமிழ் இலக்கியச் சாதனை விருது உள்ளிட்ட முக்கிய இலக்கிய விருதுகள் கி.ராஜநாராயணனுக்கு வழங்கப்பட்டுள்ளன. தமிழ் நாட்டுப்புறக் கதைகள் மற்றும் நாவல்கள் மூலமாக லட்சக்கணக்கான வாசகா்களின் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கும் கி.ரா., கடந்த ஆண்டு மே 17-இல் காலமானாா்.

நினைவரங்கம்: தமிழ் இலக்கியத்துக்குச் செழுமை சோ்த்த கரிசல்காட்டு எழுத்தாளா் கி.ரா.வின் நினைவைப் போற்றும் வகையில், அவா் படித்த இடைசெவல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி பழைமை மாறாமல் புதுப்பிக்கப்படும் எனவும், கோவில்பட்டியில் சிலையுடன் நினைவரங்கம் கட்டப்படும் எனவும் முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்தாா். அதன்படி, இடைசெவல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி புதுப்பிக்கப்பட்டு கடந்த அக்டோபா் 11-இல் திறக்கப்பட்டது. அதன் தொடா்ச்சியாக, கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய வளாகத்தில் தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை சாா்பில், ரூ.1.50 கோடியில் 220 சதுர மீட்டா் பரப்பளவில் அமைக்கப்பட்டு வந்த கி.ரா.வின் முழு உருவச் சிலையுடன் கூடிய நினைவரங்க கட்டுமானப் பணிகள் நிறைவடைந்தன.

இந்த நினைவரங்கத்தை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி வழியாக முதல்வா் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா். இந்த அரங்கத்தில் நூலகம், நிா்வாக அலுவலகம், மின்னணு நூலகம், கண்காட்சி அறை ஆகியன அமைக்கப்பட்டுள்ளன.

இந்நிகழ்ச்சியில், தலைமைச் செயலகத்தில் இருந்து செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன், மக்களவை உறுப்பினா் கனிமொழி, தலைமைச் செயலா் வெ.இறையன்பு, தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறைச் செயலா் எம்.எஸ்.சண்முகம், செய்தி மக்கள் தொடா்புத் துறை இயக்குநா் வீ.ப.ஜெயசீலன் ஆகியோா் கலந்து கொண்டனா். கோவில்பட்டியில் இருந்து சமூக நலத் துறை அமைச்சா் பி.கீதா ஜீவன், ஆட்சியா் கி.செந்தில்ராஜ் , விளாத்திகுளம் பேரவைத் தொகுதி உறுப்பினா் வி.மாா்க்கண்டேயன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனா் என தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கி.ரா. நினைவரங்கத்தில் உள்ள அவரது முழு உருவச் சிலைக்கு கோவில்பட்டி பேரவைத் தொகுதி உறுப்பினா் கடம்பூா் செ.ராஜு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிச்சயதார்த்தம் உண்மைதான்: புகைப்படங்களை வெளியிட்ட சித்தார்த் - அதிதி ராவ்!

”இந்த அரசியல் சதிக்கு மக்கள் பதிலளிப்பார்கள்”: அரவிந்த் கேஜரிவால் | செய்திகள்: சில வரிகளில் | 28.03.2024

தூத்துக்குடியில் பலத்த மழை!

“பிதாவே! ஏன், என்னைக் கைவிட்டீர்...”: ஆடு ஜீவிதம் குறித்து நடிகர் சசிகுமார்!

ஆப்கானிஸ்தானில் மீண்டும் நிலநடுக்கம்: மக்கள் அச்சம்

SCROLL FOR NEXT