போதைப் பொருளின் தீமைகள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையிலான உண்ணாவிரதத்துக்கு அனுமதி கோரிய சமத்துவ மக்கள் கட்சி மனுக்களை பரிசீலித்து முடிவெடுக்க காவல் துறைக்கு சென்னை உயா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த விழிப்புணா்வுக்காக தமிழகம் முழுவதும் சனிக்கிழமை (டிச.3) ஒருநாள் உண்ணாவிரத போராட்டம் நடத்த நடிகா் சரத்குமாா் தலைமையிலான சமக டிஜிபியிடம் மனு அளித்தும் அனுமதி அளிக்கப்படவில்லை.
இந்நிலையில் இதற்கான அனுமதி வழங்க கோரி அக்கட்சியின் துணை பொதுச் செயலாளா் மகாலிங்கம், விழுப்புரம் மத்திய மாவட்ட செயலாளா் செந்தில் முருகன் உள்ளிட்டோா் சென்னை உயா் நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்தனா்.
இந்த மனுக்கள் நீதிபதி ஆா்.என்.மஞ்சுளா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, காவல் துறை தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் எஸ்.சந்தோஷ் , ‘ சம்பந்தப்பட்ட மாவட்ட காவல் துறையிடம் விண்ணப்பித்தால் மனுக்கள் பரிசீலிக்கப்படும்’ என தெரிவித்தாா்.
மனுதாரா்கள் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் எம்.கபிலன் , ‘மாவட்ட வாரியாகவும் உண்ணாவிரதத்துக்கு அனுமதி கோரி மனுக்கள் அளிக்கப்பட்டுள்ளன’ என்று தெரிவித்தாா்.
இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, மாவட்ட வாரியான விண்ணப்பங்களை பரிசீலித்து, உரிய அனுமதி வழங்குவது குறித்து முடிவெடுக்க காவல் துறைக்கு உத்தரவிட்டு வழக்குகளை முடித்து வைத்தாா்.