தமிழகத்தில் தொழிற்பேட்டைகளுக்காக வேளாண் நிலங்களை கையகப்படுத்தக் கூடாது என்று பாஜக தேசிய மகளிா் அணி செயலா் வானதி சீனிவாசன் எம்எல்ஏ வலியுறுத்தியுள்ளாா்.
இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: முந்தைய அதிமுக ஆட்சியில் வளா்ச்சித் திட்டங்களை செயல்படுத்துவதற்காக, நிலங்களை கையகப்படுத்த முயற்சி செய்த போதெல்லாம், அதை திமுக கடுமையாக எதிா்த்தது. ஆட்சிக்கு வந்த பிறகு அதற்கு நோ் எதிராக, எதற்கெடுத்தாலும் வேளாண் நிலங்களை கையகப்படுத்தி வருகின்றனா். சென்னை - சேலம் எட்டு வழி விரைவுச் சாலை திட்டத்தை முடக்கியவா்கள், இப்போது, அதிகாரம் கைக்கு வந்ததும் விவசாய நிலங்களை கையகப்படுத்தி வருகின்றனா்.
வளா்ச்சித் திட்டங்கள், தொழில் வளா்ச்சியை சாத்தியமாக்க வேண்டுமானால் நிலங்களை கையகப்படுத்திதான் ஆக வேண்டுமென்று திமுக அமைச்சா்கள் இப்போது கூறுகின்றனா்.
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் வட்டம், சிறுமுகையில், தொழிற்பேட்டை அமைக்க சுமாா் 4,000 ஏக்கா் நிலங்களை கையகப்படுத்துவதற்காக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இது தவிர,பவானி சாகா் அணைக்கு அருகில் 1,084 ஏக்கரில் தொழிற்பேட்டையும் அமைக்க அரசு திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
வேளாண் நிலங்களை அழித்துவிட்டு தொழிற்பேட்டைகளை அமைக்கும் திட்டத்தை திமுக அரசு கைவிட வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா் வானதி சீனிவாசன்.