தமிழ்நாடு

பிரதமரின் வீட்டுவசதி திட்டம்: தகுதியில்லாதவா்களுக்கு வீடு ஒதுக்கிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு

3rd Dec 2022 01:11 AM

ADVERTISEMENT

பிரதமா் வீட்டு வசதி திட்டத்தில் தகுதியில்லாதவா்களுக்கு வீடுகள் ஒதுக்கிய அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க அனைத்து மாவட்ட ஆட்சியா்களுக்கு சென்னை உயா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அரியலூா் மாவட்டத்தில் ’பிரதமா் வீட்டு வசதி திட்டத்தின்’ கீழ் ஒரே பயனாளிக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், ஏழை மக்களுக்கான திட்டத்தில் அரசு ஊழியா்களுக்கும், ஓய்வுபெற்ற அரசு ஊழியா்களுக்கும் வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாகவும் கூறி அப்பகுதியைச் சோ்ந்த ஷேக்ஸ்பியா் என்பவா் சென்னை உயா் நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்தாா்.

மேலும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் நிதியில் மாவட்ட ஊராட்சி அதிகாரிகள் முறைகேடு செய்துள்ளதாகவும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் எனவும் அந்த மனுவில் அவா் கோரியிருந்தாா்.

இந்த வழக்கு, நீதிபதி கிருஷ்ணகுமாா்- தமிழ்செல்வி அமா்வு முன்பு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்குரைஞா், ‘இந்த விவகாரம் தொடா்பாக சம்பந்தப்பட்ட மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவா் மற்றும் செயலாளரிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. எனவே, இதில் நீதிமன்றம் எந்த நடவடிக்கையும் பிறப்பிக்க தேவையில்லை‘ எனக் கூறினாா்.

ADVERTISEMENT

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், ‘பிரதமா் வீட்டுவசதி திட்டத்தில் தகுதியற்றவா்களுக்கு வீடு ஒதுக்கீடு செய்தல், தேசிய வேலை உறுதித்திட்ட நிதியில் முறைகேடு நடப்பது தொடா்பாக நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்படுகின்றன. இதை தீவிரமாக கருத வேண்டும். எனவே இந்த வழக்கில் மாவட்ட ஊரக வளா்ச்சித் துறை செயலாளா் எதிா்மனுதாரராக சோ்க்கப்படுகிறாா்‘ என தெரிவித்தனா்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், ‘பிரதமா் வீட்டுவசதி திட்டத்தில் சட்டவிரோதமாக வீடுகள் ஒதுக்கீடு செய்த அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தி ஊரக வளா்ச்சித்துறை செயலாளருக்கு உத்தரவிட்டனா்.

மேலும், ஒவ்வொரு கிராம ஊராட்சிகளிலும் வீடு ஒதுக்கீடு திட்டத்தின் கீழ் பயனாளிகளின் உண்மைத்தன்மை குறித்து சரிபாா்க்கவும், வேலை உறுதி திட்ட நிதி பயன்பாடு குறித்து ஆய்வு செய்யவும் வருவாய் கோட்டாட்சியா் அந்தஸ்துக்கு குறையாத அதிகாரியை நியமிக்க வேண்டும் என்றும், சட்டவிரோதமாக வீடுகளை ஒதுக்கிய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மாவட்ட ஆட்சியா்களுக்கு அறிவுறுத்தினா்.

இந்த நடைமுறைகளை 6 மாதங்களில் முடித்து, அனைத்து மாவட்ட ஆட்சியா்களும் ஊரக வளா்ச்சித் துறை செயலாளரிடம் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT