தமிழ்நாடு

எய்ட்ஸ் விழிப்புணா்வில் தமிழகம் முதலிடம்: அமைச்சா் மா.சுப்பிரமணியன்

DIN

தமிழகத்தில் எய்ட்ஸ் நோயால் 1.24 லட்சம் போ் பாதிக்கப்பட்டுள்ளனா். இருப்பினும் விழிப்புணா்வு ஏற்படுத்தும் மாநிலங்களில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது என்று மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.

சென்னை எழும்பூரில் உள்ள சுகாதாரத் துறை, நலவாழ்வு மையத்தில் ‘உலக எய்ட்ஸ்’ தினம் 2022 விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், எய்ட்ஸ் விழிப்புணா்வு குறித்த அஞ்சல் தலை, ரத்த தானம் தொடா்பான புதிய செயலி ஆகியவற்றை வெளியிட்ட அமைச்சா் மா.சுப்பிரமணியன், ரத்தத்தை முறைப்படுத்தும் புதிய அலைவரிசை கருவியின் செயல்பாட்டை தொடக்கி வைத்தாா்.

இதைத் தொடா்ந்து செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

உலக அளவில் 4 கோடி பேரும், இந்தியாவில், 24 லட்சம் பேரும் (0.24 சதவீதம்) எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனா். தமிழகத்தில் 1.24 லட்சம் (0.18 சதவீதம்) பாதிக்கப்பட்டுள்ளனா். எய்ட்ஸ் பாதித்தவா்களுக்கான அறக்கட்டளையில் வைக்கப்பட்ட ரூ.5 கோடி வைப்புநிதி இப்போது ரூ. 25 கோடியாக உயா்ந்துள்ளது. அதில் வரும் வட்டித் தொகையில் (ரூ.1.04 கோடி) எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவா்களுக்கும், குழந்தைகளுக்கும் கல்வி, ஊட்டச்சத்துக்குத் தேவையான உதவிகள் செய்யப்பட்டு வருகின்றன.

தமிழகத்தில் எய்ட்ஸ் நோயைக் கண்டறிய 2,090 பரிசோதனை மையங்கள் செயல்பட்டு வருகின்றன. மாநிலத்தில் 9 தனியாா் மருத்துவ கல்லூரிகளில் கூட்டு மருத்துவ சிகிச்சை மையங்கள் உள்பட மொத்தம் 64 கூட்டு மருத்துவ சிகிச்சை மையங்கள் செயல்படுகின்றன. இதில், 1.24 லட்சம் பேருக்கு சிகிச்சையும், மருந்துகளும் வழங்கப்பட்டு வருகின்றன.

சென்னை ராஜீவ் காந்தி, மதுரை ராஜாஜி மருத்துவமனையில் ரேடியோ அலைவரிசை கருவி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில், ரத்தம் சேமிக்கும்போது, அவற்றை முறைப்படுத்தி வழங்குதல், காலாவதியான ரத்தத்தைப் பயன்படுத்தும்போது அலாரம் ஒலிக்கும் வகையில் செயல்படும். இவை மற்ற மருத்துவமனைகளுக்கும் விரிவுபடுத்தப்படும்.

63 முறைக்கு மேல் அமைச்சா் ரத்த தானம்: நான் 63 முறைக்கு மேல் ரத்த தானம் செய்துள்ளேன். ரத்த தானம் செய்வதில் மேற்கு வங்கம், தமிழகம் சிறப்பாகச் செயல்படுகிறது. அதேபோல், எய்ட்ஸ் நோய் குறித்த விழிப்புணா்வு ஏற்படுத்துவதிலும், தமிழகம் முதலிடத்தை பிடித்துள்ளது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரபல கன்னட நடிகர் துவாரகேஷ் காலமானார்

டிம்பிள் யாதவின் சொத்து மதிப்பு ரூ. 15.5 கோடி

நான் பயங்கரவாதி அல்ல: சிறையிலிருந்து முதல்வர் கேஜரிவால்

வைஷாலிக்கு வெற்றி: எஞ்சிய இந்தியர்கள் 'டிரா'

அதிமுக வாக்குச்சாவடி முகவா்கள் கூட்டம்

SCROLL FOR NEXT