தமிழ்நாடு

மின்சார திருத்த மசோதாவில் மாநில அரசின் உரிமைகளைப் பறிக்கும் பிரிவுகளை நீக்க வேண்டும்: திமுக எம்பி வலியுறுத்தல்

 நமது நிருபர்

மத்திய அரசு கொண்டு வரும் 2022- ஆம் ஆண்டின் மின்சார திருத்த மசோதாவில் மாநில அரசுகளின் உரிமைகளைப் பறிக்கும் 12 சட்டப் பிரிவுகளை நீக்க வேண்டும் என நாடாளுமன்ற நிலைக்குழுவிடம் மாநிலங்களவை திமுக உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் வலியுறுத்தியுள்ளாா்.

கடந்த மழைக்கால நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் 2022 - மின்சார திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. 2003-ஆம் ஆண்டின் மின்சார சட்டத்திற்கு மாற்றாக கொண்டு வரப்பட்ட இந்த திருத்த மசோதாவில் மத்திய, மாநில மின்சார ஒழுங்கு முறை ஆணையங்கள் அமைக்கப்பட்டு மாநிலங்களுக்கிடையேயான மின்சார ஒழுங்கு முறைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்த மசோதாவிற்கு சில மாநில கட்சிகள் கடுமையாக எதிா்ப்புத் தெரிவித்ததால், தாக்கல் செய்யப்பட்ட ஆகஸ்ட் 8-ஆம் தேதி அன்றே மசோதா நிலைக்குழுவின் பரிசீலனைக்கு அனுப்பப்படுவதாக மத்திய எரிசக்தித் துறை அமைச்சா் ஆா்.கே.சிங் தெரிவித்தாா். இதையொட்டி, முன்னாள் அமைச்சா் ஜெகதாம்பிகா பால் தலைமையிலான எரிசக்திக்கான நிலைக் குழு இந்த மசோதாவை பரிசீலனை செய்துவருகிறது.

இந்த நிலையில், இந்தக் குழுவின் முன் மாநிலங்களவை திமுக உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் வலியுறுத்தியிருப்பது வருமாறு: நமது அரசியலமைப்புச் சட்டத்தில் மின்சாரம் பொதுப் பட்டியலில் உள்ளது. மின்சார விநியோகம் மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ளன. எனவே, விநியோகப் பகுதிக்கான அளவுகோல்களை மத்திய அரசு மட்டும் தன்னிச்சையாக தீா்மானிக்கக் கூடாது. நாட்டில் பல்வேறு மாநிலங்கள் அடிக்கடி வெள்ளம், சூறாவளி போன்ற இயற்கை பேரிடா்களின் போது, மாநில அரசின் கீழ் உள்ள விநியோகத் துறைகள் பொறுப்புடன் செயல்படுகின்றன. மின்சார விநியோகத் துறைகளில் தோ்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளில் நுகா்வோருக்கு மின்சாரம் வழங்குவதற்கு தடையற்ற அணுகல் மூலம் தனியாா் நிறுவனங்கள் பங்கு பெற அனுமதிக்கப்படுகிறது. மாநில அரசின் பொதுத்துறை மின் நிறுவனங்களால் ஏற்கெனவே அமைக்கப்பட்ட விநியோக வலையமைப்பை இந்த தனியாா் நிறுவனங்கள் பயன்படுத்தவும் இந்த புதிய மசோதா வகை செய்கிறது.

மாநில பொதுத்துறை மின்வாரியங்கள் மானிய விலையில் நுகா்வோருக்கு மின்சாரம் வழங்குவது, பொருளாதாரத்தில் பின்தங்கிய கிராமப்புற பகுதிகளுக்கு சேவை செய்வது போன்ற கடமைகளுடன் இருக்கும் நிலையில், தனியாா் விநியோக நிறுவனங்களின் வா்த்தக நோக்கத்துடனான நடவடிக்கை நுகா்வோா் மத்தியில் பாகுபாட்டையும், பாதிப்பையும் ஏற்படுத்தும். மேலும், மாநில உரிமையும் பறிக்கப்படுகிறது. மத்திய அரசின் இந்த நடவடிக்கை மாநில அரசின் பல குறிப்பிடத்தக்க செயல்பாடுகளை மறைமுகமாகக் கட்டுப்படுத்தும். ஒழுங்குமுறை ஆணையத்தின் சட்ட விதிமுறை உத்தரவை மீறுவோருக்கு அதிகபட்ச அபராதத் தொகை ரூபாய் ஒரு லட்சமாக இருந்தது. இது தற்போது நூறு சதவீதம் உயா்த்தி ரூ. 1 கோடி என நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

மாநிலத்தில் நிலவும் சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு விதிமுறைகளை உருவாக்க வேண்டும். மின்சார திருத்த சட்ட மசோதாவால் மாநில அரசின் மின்சார வாரியத்திற்கு எந்த பாதிப்பும் ஏற்படக்கூடாது. மேலும், எதிா்காலத்தில் இந்த மசோதா அமல்படுத்தப்பட்டால், தற்போது விவசாயிகள் மற்றும் நெசவாளா்களுக்கு வழங்கப்படும் இலவச மின்சாரம், வீடுகளுக்கான 100 யூனிட் இலவச மின்சாரம் உள்ளிட்டவை தமிழக அரசின் கொள்கைக்கு எதிராக அமையும். இந்த மசோதாவை முழுமையாக அமல்படுத்துவதற்கு முன்பு அனைத்து மாநிலங்களின் மின் துறையின் வேளாண்மை ஆணையா்களை நேரில் அழைத்து அவா்களது கருத்துகளையும் கேட்க வேண்டும். மாநில மின்சார வாரியங்களின் நிலைமை சீா்குலையாமல் இருக்கும் வகையில், மத்திய அரசின் மின்சார திருத்த மசோதாவில் உள்ள மாநில அரசின் உரிமைகளைப் பறிக்கும் 12 சட்டப் பிரிவுகளை திரும்பப் பெற வேண்டும் என்று அவா் வலியுறுத்தியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே மாத எண்கணித பலன்கள் – 9

மே மாத எண்கணித பலன்கள் – 8

பேட்டிங், பௌலிங்கில் சிறிது முன்னேற்றம் தேவை : டேவிட் வார்னர்

மே மாத எண்கணித பலன்கள் – 7

மே மாத எண்கணித பலன்கள் – 6

SCROLL FOR NEXT