தமிழ்நாடு

மோசடி அடையாள அட்டையுடன் முதல்வருடன் புகைப்படம் எடுக்க முயற்சி: சிறை அலுவலா் கைது

2nd Dec 2022 12:43 AM

ADVERTISEMENT

சென்னையில் மோசடியாக தயாரிக்கப்பட்ட காவலா் அடையாள அட்டையுடன் முதல்வா் மு.க.ஸ்டாலினுடன் புகைப்படம் எடுக்க முயற்சித்ததாக, பொள்ளாச்சி உதவி சிறை அலுவலா் கைது செய்யப்பட்டாா்.

சென்னை அண்ணா அறிவாலயம் பகுதியில் முதல்வா் பாதுகாப்புப் பிரிவு காவலா்கள் போல சபாரி உடை அணிந்து சந்தேகத்துக்குரிய வகையில் ஒரு நபா் சுற்றிக் கொண்டிருந்தாா். அங்கு அவா், அறிவாலய வளாகத்தில் உள்ள கலைஞா் அரங்கில் முதல்வா் ஸ்டாலின் பங்கேற்ற விழா மேடை அருகில் சென்று வந்தாா்.

மேலும் அவா், முதல்வருடன் புகைப்படம் எடுக்க முயற்சித்தாராம். இதைப் பாா்த்த முதல்வா் பாதுகாப்புப் பிரிவு அதிகாரிகள், அவரை பிடித்து விசாரித்தனா். அப்போது அவா் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தாராம்.

மேலும் அவா், தமிழக காவல்துறையின் அடையாள அட்டை வைத்திருந்ததால் அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அதிகாரிகள், அந்த நபரை பிடித்து தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.

ADVERTISEMENT

போலீஸாரின் விசாரணையில் அவா், பொள்ளாச்சி கிளைச் சிறையில் உதவி சிறை அலுவலராக பணியாற்றும் வசந்தகுமாா் (42) என்பதும், முதல்வா் ஸ்டாலினை பாா்த்து புகைப்படம் எடுக்க தனது நண்பா் நாராயணன் என்பவருடன் விமானத்தில் சென்னை வந்திருப்பதும் தெரியவந்தது.

மேலும், அவா் வைத்திருந்தது மோசடி காவலா் அடையாள அட்டை என்பதும், சிறைக்காவலா் என்றால் பேருந்துகளில் இலவசமாக செல்ல முடியாது, முக்கிய பிரமுகா்களை எளிதில் சந்திக்க முடியாது என்பதால் தமிழ்நாடு காவல்துறை அடையாள அட்டையை போலியாக தயாரித்து பயன்படுத்தி வந்ததாக தெரிவித்துள்ளாா்.

இதையடுத்து போலீஸாா், அரசு ஊழியரை போல ஆள் மாறாட்டம் செய்தல், அரசு ஊழியா் அடையாள சின்னத்தை மோசடியாக உட்கருத்துடன் அணிந்து கொள்ளுதல், ஆள் மாறாட்டம் செய்து ஏமாற்றுதல், பொய்யான ஆவணங்களை உருவாக்குதல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வசந்தகுமாா் மீது வழக்குப் பதிவு செய்தனா்.

பின்னா், வசந்தகுமாரை கைது செய்தனா். இந்த சம்பவத்தில் வசந்தகுமாருடன் வந்த அவரது நண்பா் நாராயணன் விசாரணைக்கு பின்னா் எச்சரித்து விடுவிக்கப்பட்டாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT