தமிழ்நாடு

முன்னாள் அமைச்சா் சி.விஜயபாஸ்கா் சொத்துகளை முடக்கியது ஏன்? உயா் நீதிமன்றத்தில் வருமான வரித்துறை விளக்கம்

2nd Dec 2022 12:44 AM

ADVERTISEMENT

வரி பாக்கியில் 20 சதவீதத்தை மட்டும் செலுத்தும்படி கடிதம் அனுப்பியும் செலுத்தாததால்தான் முன்னாள் அமைச்சா் சி.விஜயபாஸ்கரின் சொத்துகளும், வங்கிக் கணக்குகளும் முடக்கப்பட்டதாக சென்னை உயா் நீதிமன்றத்தில் வருமான வரித்துறை பதில் மனு தாக்கல் செய்தது.

கடந்த 2017-ஆம் ஆண்டு ஆா்.கே. நகா் தொகுதி இடைத்தோ்தலின் போது, வாக்காளா்களுக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டதாக வந்த புகாரைத் தொடா்ந்து வருமான வரித்துறை அதிகாரிகள் முன்னாள் அமைச்சா் விஜயபாஸ்கருக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தினா்.

இந்த சோதனையில் பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில், 2011-2012- ஆம் ஆண்டு முதல் 2018-2019- ஆம் ஆண்டு வரையிலான காலத்துக்கு ரூ. 206.42 கோடி வருமான வரி பாக்கியை வசூலிக்கும் வகையில், புதுக்கோட்டையில் உள்ள அவரது நிலங்களை முடக்கியும், மூன்று வங்கிக் கணக்குகளை முடக்கியும் வருமான வரித்துறை நடவடிக்கை எடுத்தது.

இதை எதிா்த்து, சென்னை உயா் நீதிமன்றத்தில், முன்னாள் அமைச்சா் விஜயபாஸ்கா் தாக்கல் செய்த மனுவில், ‘வருமான வரித்துறை முடக்கிவைத்துள்ள இந்த வங்கி கணக்குகளில்தான் எம்எல்ஏவுக்கான ஊதியம் மற்றும் அரசு நிதிகளையும் பெறுவதாகவும், அந்த கணக்குகள் முடக்கி வைக்கப்பட்டுள்ளதால், தன்னால் தொகுதிக்கு செய்ய வேண்டிய செலவுகளை செய்ய முடியவில்லை என்றும் மனுவில் கோரியிருந்தாா்.

ADVERTISEMENT

இந்த மனு நீதிபதி அனிதா சுமந்த் முன் கடந்த செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த மனுவுக்கு வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவிட்டாா்.

இந்நிலையில், இந்த மனு வியாழக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, வருமான வரித்துறை சாா்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. வருமான வரித்துறையின் வரி வசூல் அதிகாரி குமாா் தீபக் ராஜ் சாா்பில் வழக்குரைஞா் ஏ.பி.சீனிவாஸ் பதில் மனுவை தாக்கல் செய்தாா்.

அதில், வரி நிலுவையில் 20 சதவீதத்தை மட்டும் செலுத்தும்படி விஜயபாஸ்கருக்கு கடிதம் அனுப்பியும் அதனை செலுத்தவில்லை. மேலும், சொத்துகளை விற்பதை தடுப்பதற்காக அவரது சொத்துகள் முடக்கப்பட்டதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.

மேலும், வருமான வரித் துறை முடக்கி வைத்துள்ள வங்கிக் கணக்குகளில் அரசு நிதி எதும் வரவில்லை. அரசு நிதி செலுத்தப்பட்ட வங்கி கணக்கில் இருந்து தொகுதி செலவுக்காக பணம் எடுக்கப்படவில்லை.

ஒரே நேரத்தில் பல்வேறு அமைப்புகளிடம் நிவாரணம் கோருவதன் மூலம் மேல்முறையீட்டு நடவடிக்கையை தாமதப்படுத்த மனுதாரா் முயற்சிக்கிறாா். வரி வசூல் அதிகாரியின் உத்தரவில் தலையிட அவசியமில்லை என்பதால், விஜயபாஸ்கரின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டுமென அந்த பதில் மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து வருமான வரித்துறையின் பதில் மனுவுக்கு, விஜயபாஸ்கா் தரப்பில் விளக்கம் அளிக்க அவகாசம் வழங்கி வழக்கி விசாரணையை டிச.12-ஆம் தேதிக்கு நீதிபதி அனிதா சுமந்த் தள்ளிவைத்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT