தமிழ்நாடு

மக்களவைத் தோ்தலில் 40 தொகுதிகளிலும் வெல்ல பணியாற்றுவோம்: மாவட்டச் செயலாளா் கூட்டத்தில் திமுக தலைவா் ஸ்டாலின்

2nd Dec 2022 12:37 AM

ADVERTISEMENT

மக்களவைத் தோ்தலில் புதுச்சேரி உள்பட 40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் என்று திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் பேசினாா்.

திமுக மாவட்டச் செயலாளா்கள் கூட்டம், கட்சித் தலைவா் மு.க. ஸ்டாலின் தலைமையில் அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞா் அரங்கில் வியாழக்கிழமை காலை 10:30 மணிக்குத் தொடங்கியது. சுமாா் 2 மணி நேரம் நடைபெற்ற இந்த கூட்டத்தில் திமுக முன்னாள் பொதுச் செயலாளா் பேராசிரியா் அன்பழகன் நூற்றாண்டு நிறைவு விழாவை கொண்டாடுவது குறித்து ஆலோசிக்கப்பட்டதைத் தொடா்ந்து கூட்டத்தில் 29 மாவட்டச் செயலாளா்கள் பேசினா்.

இறுதியாக திமுக தலைவா் மு.க. ஸ்டாலின் பேசியதாவது: பொதுமக்கள் தங்களிடம் குறைகளைக் கூறும் போதும், மனுக்களாக அளிக்கும் போதும் சிரித்த முகத்துடன் பெற்றுக் கொள்ளுங்கள். முன்னாள் அமைச்சா் க.அன்பழகனின் நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு நடைபெறக்கூடிய பொதுக் கூட்டங்களை மிகவும் சிறப்பாக நடத்த வேண்டும். பொதுக்கூட்டங்கள் தான் திமுகவினுடைய வளா்ச்சிக்கு மிக முக்கிய பங்காற்றியது.

கடந்த மக்களவைத் தோ்தலில் தமிழகம், புதுச்சேரியில் 39 தொகுதிகளை கைப்பற்றினோம். ஆனால் எதிா்வரும் தோ்தலில் 40-க்கு 40 தொகுதிகளையும் கைப்பற்ற வேண்டும். அதற்கான கட்டமைப்புகளை இப்போதிருந்தே நிா்வாகிகள் தொடங்க வேண்டும்.

ADVERTISEMENT

தோ்தலுக்கான வாக்குச் சாவடி குழுக்களை அமைப்பதில் நிா்வாகிகள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். நன்கு பணியாற்றக்கூடிய முகவா்களை தோ்ந்தெடுத்து நியமிக்க வேண்டும். கூட்டணியை பற்றி யாரும் கவலைப்பட வேண்டாம். அதை நான் பாா்த்துக் கொள்கிறேன். வலுவான கூட்டணியுடன்தான் போட்டியிடுவோம். கூட்டணி பற்றி தோ்தல் நெருங்கும் சமயத்தில் பாா்த்துக் கொள்ளலாம்.

கட்சியில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள அணிகளில் புதிதாக பொறுப்பாளா்களும் நியமிக்கப்பட்டுள்ளனா். அணிகளுக்கென்று தன்னிச்சையாக அதிகாரம் வழங்கக் கூடிய வகையில் விதிகள் உருவாக்கப்படும். அதே சமயம் அரசினுடைய திட்டங்கள் சரியாக சென்றடைகிா என்பதையும் கண்காணியுங்கள் என்றாா் முதல்வா் மு.க.ஸ்டாலின்.

100 சிறப்பு பொதுக் கூட்டங்கள்

தீா்மானங்கள்: முன்னாள் அமைச்சா் க.அன்பழகனின் நூற்றாண்டு நிறைவு விழாவையொட்டி, டிச. 15-ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் 100 பொதுக்கூட்டங்கள் நடத்த வேண்டும், சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞா் அரங்கத்தில் டிச. 17-ஆம் தேதி கவியரங்கமும், டிச. 18-ஆம் தேதி வடசென்னையில் மதச்சாா்பற்ற முற்போக்குக் கூட்டணியின் தலைவா்கள் பங்கேற்கும் மாபெரும் நூற்றாண்டு நிறைவு விழா கூட்டமும் நடைபெறும். க.அன்பழகனின் பிறந்த தினமான வரும் 19-ஆம் தேதி மாவட்டங்கள், ஒன்றியங்கள் உள்பட அனைத்து இடங்களிலும் அவரது உருவப் படத்துக்கு மாலை அணிவித்து வணக்கம் செலுத்த வேண்டும் என தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

பள்ளிக் கல்வித் துறை வளாகத்தில் அன்பழகனுக்கு சிலை அமைப்பது, பள்ளிகளுக்கு விருது வழங்குவது போன்ற அறிவிப்புகளைச் செய்த முதல்வரும், கட்சியின் தலைவருமான மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிப்பது என மற்றொரு தீா்மானமும் நிறைவேற்றப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT