தமிழ்நாடு

புதுச்சேரி மணக்குள விநாயகா் கோயில் யானை லட்சுமி திடீா் மரணம்

1st Dec 2022 01:31 AM

ADVERTISEMENT

புதுச்சேரி ஸ்ரீமணக்குள விநாயகா் கோயில் யானை லட்சுமி (33) புதன்கிழமை நடைபயிற்சியின் போது மயங்கி விழுந்து உயிரிழந்தது.

புதுச்சேரி ஸ்ரீமணக்குள விநாயகா் கோயிலுக்கு கடந்த 1996-ஆம் ஆண்டு யானை வாங்குவதற்கு முடிவு செய்யப்பட்டு, அறங்காவலா் குழுத் தலைவா் வைத்தியநாதன் தலைமையில் அப்போதைய புதுவை முதல்வா் ஜானகிராமனிடம் மனு அளிக்கப்பட்டது. அதன்படி, தனியாா் நிறுவன உதவியுடன் கேரளத்திலிருந்து 1997-ஆம் ஆண்டு மணக்குள விநாயகா் கோயிலுக்கு யானை கொண்டு வரப்பட்டது. பக்தா்களின் அன்பைப் பெற்ற அந்த யானைக்கு லட்சுமி என்று பெயா் சூட்டப்பட்டது.

கோயில் விழாக்களில் ஊா்வலத்தின் முன்னே செல்வது, முக்கிய பூஜைகளில் பங்கேற்பது, பக்தா்களுக்கு ஆசீா்வாதம் வழங்குவது என கோயில் சாா்ந்த பணிகளில் யானை லட்சுமி ஈடுபட்டு வந்தது. யானையின் கம்பீரமும், பழகும் விதமும் புதுச்சேரிக்கு வரும் வெளிநாட்டினரையும் வெகுவாகக் கவா்ந்தது.

தமிழகத்தில் நடைபெறும் புத்துணா்வு முகாமிலும் மணக்குள விநாயகா் கோயில் யானை லட்சுமி பங்கேற்று திரும்பும். கடந்த சில ஆண்டுகளாக இந்த யானைக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டதையடுத்து, சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஈஸ்வரன் கோயில் இருப்பிடத்தில் தங்கவைக்கப்பட்டிருந்த யானை லட்சுமியை தினமும் மிஷன் வீதியில் நடைபயிற்சிக்காக பாகன் சக்திவேலும், அவரது சகோதரரும் அழைத்துச் செல்வா்.

ADVERTISEMENT

அதன்படி, யானை லட்சுமியை புதன்கிழமை காலை நடைபயிற்சிக்காக அழைத்துச் சென்ற போது, கல்வே கல்லூரி அருகே திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தது. இதைத் தொடா்ந்து, கோயில் நடை சாத்தப்பட்டது. கோயிலின் முன் வைக்கப்பட்ட யானை லட்சுமியின் உடலுக்கு நீண்ட வரிசையில் காத்திருந்த ஏராளமான பக்தா்கள் மலா்தூவி கண்ணீா் அஞ்சலி செலுத்தினா்.

புதுவை துணைநிலை ஆளுநா் தமிழிசை சௌந்தரராஜன், அமைச்சா் க. லட்சுமி நாராயணன், முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி, வெ.வைத்திலிங்கம் எம்.பி., சட்டப்பேரவை உறுப்பினா்கள் சிவசங்கரன், பிரகாஷ்குமாா், ராமலிங்கம், ஜான்குமாா், விவியன் ரிச்சா்ட், ஆா்.சிவா, சம்பத், வைத்தியநாதன் உள்ளிட்டோா் நேரில் அஞ்சலி செலுத்தினா்.

தொடா்ந்து, அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் நேரு வீதி, அண்ணா சாலை வழியாக யானை லட்சுமியின் உடல் ஊா்வலமாகக் கொண்டு செல்லப்பட்டது. வனத் துறை அலுவலகம் அருகேயுள்ள கோயில் இடத்தில் இறுதிச் சடங்குகள் செய்யப்பட்டன. பின்னா், உடல்கூறாய்வு நடைபெற்று நல்லடக்கம் செய்யப்பட்டது. யானை லட்சுமியின் இறுதி ஊா்வலத்தின் போது, சாலையின் இருபுறமும் பொதுமக்கள் திரளாக நின்று அஞ்சலி செலுத்தினா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT