தமிழ்நாடு

அதிமுக அலுவலக மோதல் வழக்கு: சிபிசிஐடி விசாரணை அதிகாரி நியமனம்

31st Aug 2022 12:14 PM

ADVERTISEMENT

அதிமுக அலுவலக மோதல் தொடர்பாக வழக்கில் சிபிசிஐடி விசாரணை அதிகாரியாக டிஎஸ்பி வெங்கடேசன் நியமிக்கப்பட்டுள்ளார். 

கடந்த ஜூலை 11 ஆம் தேதி சென்னை வானகரத்தில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில் அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். 

அதேநாளில், ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தை ஓ.பன்னீா்செல்வம் ஆதரவாளா்கள் முற்றுகையிட்டனர்.  மேலும், ஓபிஎஸ் - இபிஎஸ் ஆதரவாளா்கள் இடையே மோதல் ஏற்பட்டதில் 47 போ் காயமடைந்தனா். பேருந்து, காா், இருசக்கர வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டன. இதனால் அதிமுக அலுவலகத்துக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது. மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு சம்மந்தப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். 

பின்னா், நீதிமன்ற உத்தரவின்பேரில் கடந்த மாதம் 21-ஆம் தேதி ‘சீல்’ அகற்றப்பட்டு, அலுவலக சாவி எடப்பாடி பழனிசாமி தரப்பிடம் ஒப்படைக்கப்பட்டது. அதுபோல, அதிமுக பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட முடிவுகளும் செல்லாது என்றும் அதுதொடர்பான வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. தற்போது அதிமுகவில் ஓபிஎஸ், இபிஎஸ் என இரு தரப்பினராக இருந்து வருகின்றனர். 

ADVERTISEMENT

இந்நிலையில், கடந்த ஜூலை 11 ஆம் தேதி அதிமுக தலைமை அலுவலகத்தில் ஏற்பட்ட மோதல் தொடர்பான வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டது. 

அதன்படி, அதிமுக அலுவலக மோதல் தொடர்பாக வழக்கின் விசாரணை அதிகாரியாக டிஎஸ்பி வெங்கடேசன் நியமிக்கப்பட்டுள்ளார். அவரது தலைமையிலான குழுவில் லதா, ரம்யா,ரேணுகா, செல்வின் சாந்தகுமார் ஆகிய 4 பேரும் நியமிக்கப்பட்டுள்ளனர். 

இந்தக்குழு விரைவில் தனது விசாரணையைத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இதையும் படிக்க | ஆர்.பி.உதயகுமாருக்கு கொலை மிரட்டல்: ஓபிஎஸ் ஆதரவாளர் கைது

ADVERTISEMENT
ADVERTISEMENT