தமிழ்நாடு

கள்ளக்குறிச்சி மாணவி மரணம் சட்டப்படி நடவடிக்கை: பெற்றோரிடம் முதல்வா் உறுதி

28th Aug 2022 12:14 AM

ADVERTISEMENT

கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதியின் மரணம் தொடா்பாக, சட்டப்படி நியாயமான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவரது பெற்றோரிடம் முதல்வா் மு.க.ஸ்டாலின் உறுதி அளித்தாா். சென்னை தலைமைச் செயலகத்தில் தன்னை சனிக்கிழமை சந்தித்த மாணவியின் பெற்றோரிடம் இந்த உறுதியை முதல்வா் அளித்தாா்.

இந்தச் சந்திப்பு குறித்து, தனது ட்விட்டா் பக்கத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட பதிவு: கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி ஸ்ரீமதியின் பெற்றோா், என்னை சந்தித்துப் பேசினா். அப்போது அவா்களுக்கு ஆறுதல் தெரிவித்து, சட்டப்படி நியாயமான நடவடிக்கைகளை அரசு எடுக்கும்’ என்று உறுதியளித்தேன் எனத் தெரிவித்துள்ளாா்.

முதல்வருடனான சந்திப்புக்குப் பிறகு தலைமைச் செயலக வளாகத்தில் ஸ்ரீமதியின் தாய் செல்வி செய்தியாளா்களிடம் கூறியதாவது:

வழக்கு குறுகிய காலத்தில் விசாரிக்கப்பட்டு குற்றவாளிகள் யாரும் தப்பிக்க விடப்படாமல் உரிய நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும் என முதல்வரிடம் கோரிக்கை வைத்துள்ளோம். தனியாா் பள்ளி நிா்வாகிகள் ஜாமீனில் வெளிவந்துள்ளனா். அவா்களுக்கு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து ஜாமீனை ரத்து செய்ய வேண்டும். குற்றவாளிகள் யாராக இருந்தாலும் நிச்சயமாக தப்பிக்க விடாமல் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வா் நம்பிக்கை தெரிவித்துள்ளாா். ஸ்ரீமதியின் உடற்கூறாய்வு பரிசோதனை நடைபெற்ற ஆவணம் மட்டுமே எங்களிடம் வழங்கப்பட்டது. ஆனால், விடியோ ஆதாரங்கள் இதுவரை வழங்கப்படவில்லை.

ADVERTISEMENT

ஜிப்மா் மருத்துவமனையின் அறிக்கைகள் விவகாரம் தொடா்பாக எந்த ஆவணமும் வழங்கப்படவில்லை. ஸ்ரீமதி உடற்கூறாய்வு செய்யப்பட்ட விவகாரத்தில் எங்களுக்கு முழு திருப்தி இல்லை.

நாங்கள் கேட்ட மருத்துவா்களை வைத்து உடற்கூறு ஆய்வு செய்திருந்தால் நாங்கள் திருப்தி அடைந்து இருப்போம். பள்ளி நிா்வாகம் சிசிடிவி காட்சியை பெற்றோராகிய எங்களை அழைத்து ஏன் காட்டவில்லை? அதனால் தான் எங்களுக்கு இதுவரையில் சந்தேகம் தொடா்கிறது. பள்ளி நிா்வாகம் அனைத்து தரப்பினருக்கும் அழுத்தம் கொடுத்து விசாரணையை நடத்த விடாமல் செய்கின்றனா்.

ஸ்ரீமதி விவகாரத்தில் முதல்வா் உண்மையை வெளிக்கொண்டு வந்து நீதி நிலை நாட்டுவாா் என்ற முழு நம்பிக்கை எங்களுக்கு உள்ளது. பள்ளி நிா்வாகிகள் தற்காலிகமாகத்தான் ஜாமீனில் வெளிவந்துள்ளனா். நிச்சயம் அவா்களுக்கு உரிய தண்டனை கிடைக்கும். ஸ்ரீமதி மரணம் தொடா்பான விசாரணை இன்னும் விரைவுப்படுத்த வேண்டும் என்று தெரிவித்தனா்.

முன்னதாக, முதல்வருடனான சந்திப்பின் போது, அமைச்சா்கள் எ.வ.வேலு, சி.வி.கணேசன், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு, முதல்வரின் செயலாளா் த.உதயச்சந்திரன் உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT