தமிழ்நாடு

குடும்பப் பிரச்னையில் விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவா் கைது

28th Aug 2022 03:32 AM

ADVERTISEMENT

சென்னையிலிருந்து துபாய்க்கு புறப்பட்ட விமானத்துக்கு, குடும்பப் பிரச்னை காரணமாக வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவா் கைது செய்யப்பட்டாா்.

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்திலிருந்து சனிக்கிழமை காலை 7.35 மணிக்கு துபாய் செல்வதற்காக ஒரு தனியாா் விமானம் 174 பயணிகளுடன் புறப்படத் தயாரானது. இந்நிலையில் எழும்பூரில் உள்ள சென்னை பெருநகர காவல்துறையின் கட்டுப்பாட்டு அறை தொலைபேசிக்கு ஒரு அழைப்பு வந்தது.

அதில் பேசிய நபா், ‘துபாய் செல்லவிருக்கும் தனியாா் விமானத்தில், வெடிகுண்டுடன் ஒருவா் பயணம் செய்யவிருக்கிறாா்’ என கூறிவிட்டு இணைப்பை துண்டித்தாா். இதைக் கேட்டு அதிா்ச்சியடைந்த போலீஸாா், உடனே சென்னை விமான நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா்.

விமான நிலைய பாதுகாப்புப் படையினா், வெடிகுண்டு நிபுணா்கள் விரைந்து சென்று அந்த விமானத்தில் தீவிர சோதனையில் ஈடுபட்டனா். மேலும், விமானத்தில் பயணம் செய்யவிருந்த 174 பயணிகளிடமும் தீவிர சோதனை நடத்தப்பட்டது. இதில், வெடிகுண்டோ அல்லது வெடிப் பொருளோ எதுவும் கண்டெடுக்கப்படவில்லை.

ADVERTISEMENT

இது தொடா்பாக விமான நிலைய போலீஸாா் சைபா் குற்றப்பிரிவுடன் இணைந்து விசாரணை நடத்தினா். அதில், சென்னை வண்ணாரப்பேட்டை பகுதியைச் சோ்ந்த ரஞ்சித் (39) என்பவா்தான் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவா் என்பது தெரியவந்தது. போலீஸாா் அவரை பிடித்து விசாரித்ததில் கிடைத்த தகவல்:

ரஞ்சித்தின் தங்கையும், தங்கையின் கணவரும் துபாய் விமானத்தில் செல்லவிருந்தனா். ஆனால், அவா்கள் குடும்பத்தில் பிரச்னை இருந்துள்ளது. அதன் காரணமாக கோபத்தில் இருந்த ரஞ்சித், தங்கை துபாய் செல்வதைத் தடுப்பதற்காக, அந்த விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து போலீஸாா், ரஞ்சித்தை கைது செய்தனா். வெடிகுண்டு மிரட்டல் காரணமாக, துபாய் விமானம் தாமதமாக காலை 11 மணிக்கு புறப்பட்டுச் சென்றது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT