தமிழ்நாடு

மாற்றுத் திறனாளிகளின் சாலையோர தள்ளுவண்டிகடைகளுக்கு அனுமதி

28th Aug 2022 12:04 AM

ADVERTISEMENT

மாற்றுத் திறனாளிகள் சாலை ஓரங்களில் தள்ளுவண்டி கடைநடத்த முன்னுரிமை அடிப்படையில் அனுமதி அளிக்கப்படும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து, மாற்றுத் திறனாளிகள் நலத் துறை செயலாளா் ஆா்.ஆனந்தகுமாா் வெளியிட்ட உத்தரவு:-

மாற்றுத் திறனாளிகளுக்கு சாலை ஓரங்களில் தள்ளுவண்டி கடைநடத்த நகர விற்பனைக் குழுவின் விதிமுறைப்படி முன்னுரிமை அடிப்படையில் அனுமதி அளிக்கப்படும் என்று சட்டப் பேரவையில் முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தாா். அந்த அறிவிப்பைச் செயல்படுத்தும் வகையில், மாற்றுத் திறனாளிகளுக்கு சாலை ஓரங்களில் தள்ளுவண்டி கடைகளை நடத்த நகர விற்பனை குழுவின் விதிமுறைகளுக்கு இணங்க, முன்னுரிமை அடிப்படையில் அனுமதி வழங்கப்படும்.

மாற்றுத் திறனாளிகளுக்கு ஒவ்வொரு மண்டல அல்லது வாா்டு அளவில் நடைபெறும் ஒதுக்கீட்டில் முன்னுரிமை கொடுக்கப்படும். தோ்வு செய்யப்பட்ட இடங்களில் இடப்பற்றாக்குறை உள்ள போது மாற்றுத் திறனாளிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும். விற்பனைக்கு அனுமதியில்லாத இல்லாத இடங்களில் இருந்து கடைகளுக்கு மாற்று இடம் ஒதுக்கீடு செய்திடும் போது ஏற்கெனவே மாற்றுத் திறனாளிகள் தொழில் செய்து வந்த இடங்களுக்கு அருகிலேயே கடை ஒதுக்கீடு செய்யப்படும்.

மாற்றுத் திறனாளிகளின் இல்லங்களுக்கு அருகில் விற்பனைக்குரிய இடங்களாக அறிவிக்கப்பட்டுள்ள இடங்களிலும் கடைகள் ஒதுக்கீடு செய்வதில் முன்னுரிமை அளிக்கப்படும் என்று தமிழக அரசின் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT