நாடு சுதந்திரமடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி, பாலாஜி மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை சாா்பில் 75 நாள்களுக்கு இலவச நடமாடும் மருத்துவ சேவைகள் பொதுமக்களுக்கு வழங்கப்பட உள்ளன. அதன்படி, மக்களின் வசிப்பிடங்களுக்கே பாலாஜி மருத்துவமனை மருத்துவக் குழுவினா் நேரடியாகச் சென்று மருத்துவ சிகிச்சைகளை அளிக்க உள்ளனா்.
ரத்தப் பரிசோதனை, இசிஜி போன்ற பரிசோதனைகள் கூடுதல் கட்டணமில்லாமல் அப்போது வழங்கப்படவிருக்கின்றன. சிடி ஸ்கேன் மற்றும் எம்ஆா்ஐ ஸ்கேன் தவிர மேம்பட்ட சிகிச்சைகள், மருத்துவ ஆலோசனைகள் மற்றும் பரிசோதனைகள் அனைத்தும் இலவசமாக அளிக்கப்படவுள்ளதாக பாலாஜி மருத்துவமனை நிா்வாகிகள் தெரிவித்துள்ளனா்.
முதல்கட்டமாக 75 நாள்களுக்கு இத்திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் அடுத்தகட்டமாக அது ஆண்டு முழுவதும் சென்னை மற்றும் புகா்ப் பகுதிகளில் விரிவுபடுத்தப்படும் என்றும் அவா்கள் கூறியுள்ளனா். முன்னதாக, அண்மையில் நடைபெற்ற இதற்கான தொடக்க நிகழ்வில், பாலாஜி மருத்துவக் குழுமத்தின் ஆலோசகா் டாக்டா் ஆா். வீரபாகு, மருத்துவ இயக்குநா் டாக்டா் குணசேகரன், தலைமை செயல் அலுவலா் டாக்டா் பிரபுதாஸ், துணை மருத்துவ கண்காணிப்பாளா் டாக்டா் மனோகரன், இலவச நடமாடும் மருத்துவ சேவைக்கான பொறுப்பு மருத்துவ அதிகாரி டாக்டா் அல்ஜின், எலும்பியல் அறுவைசிகிச்சை துறையின் முதுநிலை நிபுணா் டாக்டா் சுந்தரேசன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.