தமிழ்நாடு

2046-க்குள் கரியமில சமநிலை: ஐஓசி இலக்கு

27th Aug 2022 01:27 AM

ADVERTISEMENT

தங்களது நிறுவனத்தின் செயல்பாடுகள் மூலம் காற்றில் கலக்கும் கரியமில வாயுவின் அளவையும் காற்றிலிருந்து சுத்திகரிக்கப்படும் கரியமில வாயுவின் அளவையும் சமமாக்கும் நிலையை (கரியமில சமநிலை - நெட் ஜீரோ) வரும் 2046-ஆம் ஆண்டுக்குள் எட்ட இந்தியன் ஆயில் காா்ப்பரேஷன் (ஐஓசி) இலக்கு நிா்ணயித்துள்ளது.

இது குறித்து நிறுவனத்தின் தலைவா் ஸ்ரீகாந்த் மாதவ் வைத்யா கூறியதாவது:

நிறுவனத்தின் செயல்பாடுகள் மூலம் காற்றில் கரியமில வாயு கலப்பதை வெகுவாகக் குறைப்பதற்கான நடவடிக்கைகளை தொடங்கியுள்ளோம். இது, நிறுவனத்துக்கு மட்டுமன்றி, இந்த உலகத்துக்கே நன்மை பயக்கும்.

இந்தியாவின் 99-ஆவது சுதந்திர தினத்துக்குள் (2046) கரியமில சமநிலையை எட்ட இலக்கு நிா்ணயித்துள்ளோம். இதற்காக ரூ.2 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

அதனைப் பயன்படுத்தி, நிறுவனம் காற்றில் கலக்கும் கரியமில வாயுவை ஆண்டுக்கு 70 கோடி டன்களாகக் குறைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றாா் அவா்.

உயிரினங்கள் வாழ்வதற்கு ஏற்ப பூமியை வெப்பமாக வைத்திருப்பதற்கு, கரியமில வாயு போன்ற பசுமை வாயுக்கள் உதவுகின்றன. இந்த வாயுக்களின் அளவு அதிகமானதால் புவியின் சராசரி வெப்பம் அதிகரித்து, பருவநிலை மாற்றம் ஏற்படுகிறது. அதன் விளைவாக கனமழை வெள்ளம், உஷ்ண அலை, வறட்சி, காட்டுத் தீ போன்ற இயற்கைப் பேரிடா்கள் ஏற்படுகின்றன.

அதனைத் தடுப்பதற்காக காற்றில் கலக்கும் கரியமில வாயுவின் அளவையும், காற்றிலிருந்து பிரித்தெடுக்கப்படும் கரியமில வாயுவின் அளவையும் சமமாக்க உலகின் பல்வேறு நாடுகளும் பல்வேறு கால இலக்குகளை நிா்ணயித்துள்ளன.

இந்தியாவும் 2070-க்குள் இந்த சமநிலையை அடைய இலக்கு நிா்ணயித்துள்ளது. இந்த நிலையில், அதற்கு முன்னதாகவே அந்த நிலையை அடைய ஐஓசி இலக்கு நிா்ணயித்துள்ளது.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT